'முதலில் மதுபானக்கடையில் வேலை.. நாடகத்தில் நடித்ததால் எல்லா கேரக்டருமே நடிப்பேன்’: நடிகர் செந்தில் த்ரோபேக் பேட்டி
நகைச்சுவை நடிகர் செந்திலின் திரைப் பயண அனுபவங்கள் குறித்த கட்டுரையினைப் பார்க்கலாம்.

நடிகர் செந்தில், 90களில் கொடிகட்டிப் பறந்த ஒரு அற்புதமான காமெடியன். ஆனால், அவரது ஆரம்ப கட்டம் நாடகத்தில் இருந்து தான் தொடங்கியிருக்கிறது. நாடகம் முதல் சினிமா வரையிலான அவரது நடிப்பு அனுபவங்களை அவர் சினி உலகம் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்து இருக்கிறார். அது மார்ச் 23, 2023 அன்று வெளியாகி, தற்போதும் வைரல் ஆகிவருகிறது. நடிகர் செந்திலின் பிறந்த நாளான இன்று அவரது த்ரோபேக் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன:-
'உங்களை இபோதும் தினமும் நாங்கள் டிவியில் பார்த்து ரசிக்கிறோம்? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சினிமா மட்டும் இல்லை. யூடியூப் எல்லாத்திலேயும் நம் காமெடி அடி நொறுக்கிட்டுத்தான் இருக்கோம். மக்கள் நம்மை எதிலாவது நம்மை பார்த்துக்கிட்டே இருக்கணும். இல்லையென்றால், நம்மை மறந்திடுவாங்க. எம்.ஆர்.ராதா சொல்வாராம், சினிமா நடிகர் காலை ஆட்டிக்கிட்டே இருக்கணும். அதுமாதிரி நடிகர் சும்மா இருக்கக் கூடாது. மக்கள் நினைவில் இருந்துக்கிட்டே இருக்கணும். மக்களை சந்தோஷப்படுத்திக்கிட்டே இருக்கணும்.
43ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பதை எப்படி பார்க்குறீங்க?
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே, நான் நாடகத்துறையில் இருந்திருக்கிறேன். காக்கா ராதாகிருஷ்ணன், ஐசரி வேலன் என பலர் கூட சேர்ந்து எல்லாம் நடிச்சிருக்கேன். இத்தனை வருடங்கள் எப்படி போனது என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு முன்பும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், வெளியில் சொல்வதில்லை. மலையூர் மம்பட்டியான், தூறல் நின்னுப்போச்சு, அடுத்து கவுண்டமணி அண்ணன் கூட சேர்ந்து நடிச்சேன்.
13 வயதில் நடிக்க ஊரைவிட்டு வந்ததும் சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைச்சது? அதற்கான போராட்டங்கள் பற்றி கூறுங்க?
போராட்டங்கள் நிறைய இருந்துச்சு. நிறைய நண்பர்கள் இருந்தாங்க. மதுபானக்கடையில் வேலை பார்த்தேன். அப்போது ஒரு நாடகக் கம்பெனிகிட்ட என்னை ஒப்படைச்சாங்க. மதுபானக் கடையில் பார்க்கிற வேலையில் இருந்து கிடைத்த பைசாவை வைத்து தான், நான் நாடகங்களுக்கு சென்று நடித்துவந்தேன். பிறகு, பர்மா பஜாரில் யூசப் என்கிற, என் அப்பாவின் நண்பர்கிட்ட வேலை செய்து இருக்கேன். அடுத்து கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டிருக்கேன். அடுத்து வாய்ப்பு நல்லா வந்ததுக்கப்புறம் கம்பெனி நம்மை தேடி வந்துச்சு.
சினிமாவில் காமெடியனாகவே உங்களை நாங்க பார்த்திட்டோம். நாடகத்தில் நடிக்கும்போது எல்லா கேரக்டர்களுமே எடுத்து நடிப்பீங்களா?
இல்லை. எல்லா கேரக்டருமே எடுத்து நடிச்சிருக்கேன். கவுண்டமணி அண்ணன் கூட நாடகத்தில் நடிச்சிருக்கேன். அவர் எனக்கு மேல் நாடகத்தில் சீரியஸான ரோல் எல்லாம் பண்ணுவார். சினிமாவுக்குள்ள வந்து தான் காமெடி ரோல். நாடகத்தில் வில்லன் வேஷம் எல்லாம் போடுவார். எல்லாம் நல்லா இருக்கும். எல்லோரும் அப்படி வந்தவங்க தான்.
சினிமாவில் துணைக்கதாபாத்திரமாக கூட நடிக்காமல் காமெடி ரோலில் தான் நடிக்கத் தொடங்குனீங்களா?
இல்லை இல்லை. நிறைய துணைக் கதாபாத்திரங்கள், சின்ன வேடங்கள் நடிச்சிருக்கேன். நான் சொல்றது இல்லை.
உங்களுக்கு காமெடி நடிகராகணும் என்று சினிமா வந்தீங்களா? இல்லை எல்லா கேரக்டரும் பண்ணனும்னு வந்தீங்களா?
நாடகத்தில் நடித்தால் எல்லா கேரக்டர்லேயும் நடிக்கலாம். எப்படி நிற்கிறது, எப்படி நடிக்கிறது எல்லாமே நாடகத்தில் இருந்து கத்துக்கிட்டதுதான். நாடகம் இப்போது மவுசு இல்லாமல் இருக்கு. அப்போது நாடகத்தை ரொம்ப ரசிப்பாங்க.
நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வரும்போது உங்களது முதல் பயம் எப்படி இருந்துச்சு?
நமக்கு நாடகத்தில் நடிச்சிட்டோம் என்பதால், முதல் படத்தில் எல்லாம் பயம் என்று ஒன்னும் தெரியல. சிவாஜி சார் எல்லாம் யாரை இருந்தாலும் ஒழுங்கா நடின்னு மிரட்டுவார். ஆனால், நான் நடிக்கிறேன் அண்ணான்னு பதிலே சொல்வேன். மனோரமா ஆச்சி எல்லாம் பயப்படுவாங்க. நான் இயல்பாக தான் இருந்தேன்’ என நடிகர் செந்தில் தெரிவித்து இருக்கிறார்.
நன்றி: சினி உலகம் யூடியூப் சேனல்

தொடர்புடையை செய்திகள்