பாரதியாராக ரசிகர்களை கவர்ந்த நடிகர்..நவம்பரில் தேர்தல் - அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே
வில்லன் நடிகராகவும், ரீல் அரசியல்வாதியாகவும் பல படங்களில் தனது நடிப்பால் கவர்ந்தவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாரதியாராக அறிமுகமான இவர் ரியல் அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

பாரதியாராக ரசிகர்களை கவர்ந்த நடிகர்..நவம்பரில் தேர்தல் - அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே (PTI)
பாலிவுட், டோலிவுட், தமிழ் படங்களில் நடித்து வருபவர் ஷாயாஜி ஷிண்டே. மகாகவி பாரதியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான பாரதி படத்தில் பாரதியாராக நடித்திருந்த இவர், அதன் பிறகு தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அத்துடன் அந்த கட்சியின் ஸ்டார் பேச்சாளராக மாற இருக்கிறார்.
அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே
மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த ஷாயாஜி ஷிண்டே தற்போது அந்த மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். நவம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.