‘சொன்னதை செய்தால் மேஜிக் நடக்கும்.. ஆனால் அந்த அளவுக்கு எனக்கு தகுதி இல்லை..’ எஸ்.ஜே.சூர்யா ஓபன்
டைரக்டர் ஷங்கர் சொன்னதை செய்தால் திரையில் மேஜிக்கே நடக்கும் என்றும் அவருக்கு ஆலோசனை கூறும் தகுதி எனக்கு இல்லை என்றும் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். மோபிதேவி என்ற அரசியல்வாதியாக எஸ்.ஜே. சூர்யா நடித்தது குறித்து அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், தனது கதாபாத்திரம் மற்றும் குஷி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எஸ்.ஜே. சூர்யா சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்தார்.
ஷங்கர் சாருக்கு பிடித்த நடிப்பு
கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் சொன்னதைச் செய்தேன். என் நடிப்பு ஷங்கர் சாருக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்து கேம் சேஞ்சரில் என் நடிப்பைப் பார்த்து விட்டுத் தான் எனக்கு இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு அளித்தார். ஷங்கர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அந்தக் காட்சிக்கு ஏற்றவாறு நடிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டுவார்.