தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ramesh Aravind Reaches Out To The Youth Through A Book On How To Achieve Big Success In A Short Span Of Time

Ramesh Aravind: 8 ஆண்டுகளில் பணக்காரர் ஆவது எப்படி?.. மோட்டிவேஷன் புத்தகம்.. வேறு ரூபம் காட்டும் நடிகர் ரமேஷ் அரவிந்த்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 10, 2024 04:53 PM IST

நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்!

ரமேஷ் அரவிந்த்!
ரமேஷ் அரவிந்த்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த், ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட.

கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார்.

இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள 'அன்புடன் ரமேஷ்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி சென்னை புத்தகக் கண்காட்சியில் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது. சவன்னா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அகநாழிகை அரங்குகளான 520 மற்றும் 521-ல் கிடைக்கும். மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

ரமேஷ் அரவிந்த் வழங்கிய ஊக்கமூட்டும் பேச்சுகளின் முக்கிய மற்றும் சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பான இந்த புத்தகம், 'ப்ரிதியிந்த ரமேஷ்' என்ற பெயரில் கன்னடாவில் வெளியாகி ஆறே மாதங்களில் ஏழு பதிப்புகள் என பெரும் வெற்றி பெற்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பாகும். கே. நல்லதம்பி இதை சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகம் குறித்து பேசிய ரமேஷ் அரவிந்த், "ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர‌ 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம். இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம். இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்," என்று தெரிவித்தார்.

'அன்புடன் ரமேஷ்' புத்தகம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திறமைகளை எப்போதும் உரிய முறையில் அங்கீகரிக்கும் தமிழக மக்கள் இந்த புத்தகத்தையும் வாங்கி, படித்து பாராட்டுவார்கள் என்று தான் நம்புவதாகவும் ரமேஷ் அரவிந்த் கூறினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.