Mullum Malarum: மகேந்திரனின் காவியம்..ரஜினியின் தனித்துவமான நடிப்பு..'முள்ளும் மலரும்'வெளியான நாள் இன்று!
46 Years of Mullum Malarum: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'முள்ளும் மலரும்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

46 Years of Mullum Malarum: தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள், தத்ரூபமான சண்டை காட்சிகள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்தவகையில் வேகமான நடை, விதவிதமான உடல் பாவனை, வித்தியாசமான வசன உச்சரிப்பு, வியக்க வைக்கும் நடிப்பு, விறுவிறுப்பான சண்டை என ரஜினிகாந்தின் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த மாறுபட்ட ஸ்டைல் மூலம் இன்றைக்கும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'முள்ளும் மலரும்' திரைப்படம் நடிகர் ரஜினிகாந்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
மகேந்திரனின் முதல் திரைப்படம்
மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் , சரத்பாபு , ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எழுத்தாளர் உமாச்சந்திரன் கதையை அடிப்படையாகக் கொண்டு யதார்த்த இயக்குநர் மகேந்திரன் எடுத்த படம். அவரது முதல் இயக்கமும் இதுதான். ரஜினி, காளியாகவே வாழ்ந்திருப்பார். அந்த வின்ஞ் ஸ்டேசஷனே தன்னுடையது என்று அவர் காட்டும் மிடுக்கும்.. தன் எளிய மக்களிடம் காட்டும் அன்பும், முரட்டுத்தனமான அடிதடி சண்டைக்கார ஆளாக இருந்தாலும், வள்ளி வள்ளி என்று தங்கை மீது காட்டும் பாசமும் மெய்சிலிர்க்க வைக்கும்.
