அவர் நல்ல மனிதர்! பொருளாதார நிபுணர்! விஜயைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இறந்த நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 92. மேலும் இந்தியாவின் பிரதமராக 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பிரதமர்கள் பட்டியலில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். மேலும் இவரது இறப்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மட்டும் அல்லாது பெரும்பாலான இந்திய மக்களும் சோகத்தில் உள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபல திரை நட்சத்திரங்களும் மன்மோகன் சிங் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல் இரங்கல்
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசன் அவர்களது எக்ஸ் தளத்தில், "இந்தியா தனது தலைசிறந்த அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்களில் ஒருவரை இழந்துவிட்டது. டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அமைதியான கண்ணியம் கொண்ட அவர், தனது தொலைநோக்கு பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் மூலம் தேசத்தை மறுவடிவமைத்தார்.
இத்தகைய தொலைநோக்கு தாக்கத்துடன் நாட்டின் பாதையில் செல்வாக்கு செலுத்தியவர்கள் சிலர். அவரது கொள்கைகள், நிதியமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகிய இரண்டும், மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்தது, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தியது மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை மேம்படுத்தியது. இந்தியாவின் முன்னேற்றம் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், உள்ளடக்கம் மற்றும் சமூக நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் அவரது ஆளுகை குறிக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அவரது பாரம்பரியம் இந்திய வரலாற்றின் வரலாற்றில் நிலைத்திருக்கும், தேசத்தின் போக்கை அமைதியாக ஆனால் ஆழமாக மாற்றிய ஒரு தலைவராக என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேசத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக தலைவர் விஜய்
முழு அரசியல் வாழ்க்கையில் இறங்கிய பின்னர் விஜய் பல சமூக நிகழ்வுகளுக்கு தன் கருத்தை தெரிவித்து வருகிறார். அந்த வரிசையில் மன்மோகன் சிங் இறப்பிற்கு அவரது எக்ஸ் தளத்தில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.
இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,” மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறினார்.
டாபிக்ஸ்