HT Exclusive: கம்பேக் ஆகும் டாப் ஸ்டார்.. ‘விஜயும் நானும் கோட் படத்துல.. அது சர்ச்சையே கிடையாது’ - நடிகர் பிரசாந்த்!
HT Exclusive: சார்.. கோட் ஒரு மல்டி ஸ்டார் படம். அந்தப்படத்துல விஜய், நான் உள்ளிட்ட பல பேர் சேர்ந்து நடிக்கிறோம். அதைத்தான் நான் அங்கே சொன்னேன். வேறு எதையையும் நான் அங்க சொல்ல வரல. என்னைப்பொருத்தவரை அது ஒரு சர்ச்சையே கிடையாது. வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார். - நடிகர் பிரசாந்த்!
HT Exclusive: நன்றாக படித்து டாக்டராக மாற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரசாந்திடம் இயல்பாகவே இருந்த தகுதிகள், அவரை ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தது. அந்தப்படத்தின் வெற்றி அவரை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நாலாபுறங்களிலும் கொண்டு செல்ல, அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம், அவருக்கு வேறு மாதிரியான திருப்புமுனையைக்கொடுத்தது. தொடர்ந்து, அடுத்தடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக, அதன் பின்னர் பிரசாந்த் தொட்டது டாப் ஸ்டார் எனும் பட்டம். தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அந்தகன் என்ற படத்தின் மூலம், ஆகஸ்ட் 9 அன்று திரைக்கு வருகிறார் அவருடன் உரையாடினேன்.
சினிமா மேல பெரிய பிடிப்பு இல்லனாலும், டாக்டருக்கு படிக்கும் போதே, மறைமுகமா சினிமாவுக்கு உங்கள தகுதி படுத்திக்கிட்டே வந்துருக்கீங்களே?
நம்ம ஒரு பிளான் பண்ணுவோம். ஆனா கடவுள் இன்னொரு பிளான் வச்சிருப்பார்னு சொல்லுவாங்க.. அதுதான் என்னோட வாழ்க்கையில நடந்துச்சு. வீட்ல நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க. பொதுவாவே டாக்டர் தொழில் அழுத்தம் நிறைந்ததா இருக்கும். அதுக்காக, அதுல இருந்து ரிலாக்ஸ் பண்றதுக்காக, டென்னிஸ், குதிரை பந்தயம், டான்ஸ், கராத்தே அப்படின்னு பல விஷயங்கள்ல என்னை என் அப்பா ஈடுபட வச்சார். ‘An idle mind is the devil's workshop’ அப்படின்னு இங்கிலீஷ்ல பழமொழியே இருக்கு.
நாம, நம்ம வாழ்க்கையில எதுவுமே பண்ணாம இருந்தோம் அப்படின்னா, மனசு வேற ஏதாவது பண்ண சொல்லும். அதன் மூலமா, நாம தப்பான வழியில செல்வதற்கான வாய்ப்பு இருக்கு. நீங்க இப்படி தொடர்ந்து என்கேஜா இருக்கும் போது, உங்க நேரம் முழுக்க முழுக்க ஆக்கப்பூர்வமா மட்டும்தான் பயன்படும். இந்த செயல்முறையில, நீங்க ரிலாக்ஸூம் பண்ணிக்கலாம். அதே நேரம், புதுசா ஒரு விஷயத்த கத்துக்கவும் முடியும். இப்படியான ட்ராக்ல வாழ்க்கை போகும் போது, நம்ம மைண்ட் எப்போதுமே பாசிட்டிவான ட்ராக்கிலேயே போயிட்டு இருக்கும்.
நீங்கள் ஆக்டிங்கிற்காக உங்களை உடலளவில் தயார் செய்திருந்தாலும், ஆக்டிங்கை நீங்கள் எந்தக்கட்டத்தில் சரியாக புரிந்துகொண்டீர்கள்?
எந்த ஒரு டைரக்ட்ட நான் வேலைக்குப் போனாலும், அந்த இடத்துல என்னை நான் ஒரு களிமண் மாதிரி நினைச்சிப்பேன். அந்த ஸ்பாட்ல அந்த சீன பத்தி எனக்கு என்ன தெரிஞ்சாலும், அத நான் டைரக்ட்ட சொல்லமாட்டேன். டைரக்டருக்கு என்ன வேணும் அப்படிங்கிறதுல மட்டும்தான் என்னோட கவனம் இருக்கும். அவர் கேக்குறத நான் புரிஞ்சிக்கிட்டு, பல வேரியஷன்ல அவர் சொன்ன சீனை நடிச்சுக்காட்டுவேன். அதுல, அவருக்கு என்னத் தேவையோ அத அவர் எடுத்துப்பார்.
என்னோட முதல் படத்துல என்ன டைரக்ட் பண்ண ராதா பாரதிதான் எனக்கு எல்லாமே சொல்லிக்கொடுத்தார். நடிப்புக்கான நுணுக்கங்கள அவர்தான் கத்துக்கொடுத்தார். அவர், கேமராமேன் செல்வராஜ் சார், டான்ஸ் மாஸ்டர் லலிதா மணி மாஸ்டர் இந்த மூணு பேரும்தான் என்ன செதுக்குனாங்க.. அவங்க சில விஷயங்கள என்ன உணரவச்சாங்க. அதுக்கப்புறமா, நானே ஆக்டிங்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
கூட நடிக்கிற நடிகர்கள் எப்படி நடிக்கிறாங்க.. அவங்க என்னவெல்லாம் பண்றாங்க அப்படின்னு எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சேன். என்னோட அதிர்ஷ்டம், நான் வொர்க் பண்ண எல்லா படங்கள்லயும், நிறைய சீனியர் நடிகர்கள் இருந்தாங்க.. அதனால என்னால நிறையவே கத்துக்க முடிஞ்சது. இன்னொன்னு, நான் வொர்க் பண்ண எல்லா டைரக்டர்களுமே ரொம்ப பெரிய டைரக்டர்கள். அவங்க என்ன நல்லா மோல்டு பண்ணி நடிக்க வச்சாங்க. அதனால, என்னால தினம் தினம் கத்துக்க முடிஞ்சது.. இப்போதும் எனக்கு ஆக்டிங் தெரியும்னு சொல்ல முடியாது. இன்னைக்கும் நான் கத்துக்கிட்டேதான் இருக்கேன்.
‘விஜயும் நானும் சேர்ந்துதான் நடிக்கிறோம்’ என்று நீங்கள் சொன்னது சர்ச்சையாச்சே?
சார்.. கோட் ஒரு மல்டி ஸ்டார் படம். அந்தப்படத்துல விஜய், நான் உள்ளிட்ட பல பேர் சேர்ந்து நடிக்கிறோம். அதைத்தான் நான் அங்கே சொன்னேன். வேறு எதையையும் நான் அங்க சொல்ல வரல. என்னைப்பொருத்தவரை அது ஒரு சர்ச்சையே கிடையாது. வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார்.
தேவையில்லாத விஷயங்களையெல்லாம் நாம நம்ம தலை மேல போட்டுக்கக்கூடாது. என்னோட வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி என்னோட அப்பா, அம்மா மற்றும் ரசிகர்களோட அன்பு எனக்கு எப்போதும் உறுதுணையா இருக்கு.. அப்புறம் என்ன நமக்கு..
அந்தாதுன் படத்தின் ரீமேக்தான் அந்தகன். இந்த காலத்தில ரீமேக் படம் எடுக்குறது ரொம்ப ரிஸ்க் ஆச்சே?
இந்தப்படத்த அப்படி பார்க்க வேணாம். காரணம் இந்தப்படம் ரீமேக் இல்ல ரீமேடு. ஆமா, அந்தாதுன் படத்தோட கருவை மட்டும் எடுத்துக்கிட்டு, அதுல தமிழ் ஆடியன்ஸூக்கு பிடிக்குறமாதிரியான விஷயங்கள சேர்த்துதான், படத்த உருவாக்கி இருக்கோம். அந்த படத்தோட ஒப்பிடும் போது, இந்தப்படத்துல பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு. அது இந்தப்படத்துக்கு ரொம்ப பெரிய ப்ளஸ்சா அமைஞ்சிருக்கு. அப்பாவும், படத்த பார்த்து, பார்த்துதான் எடுத்துருக்காரு.
ஆயுஷ்மான் குரானா அந்தாதுன் படத்தில சூப்பரா நடிச்சிருப்பாரு.. அப்படி இருக்கும் போது, நீங்க என்ன புதுசா பண்ணப்போறீங்க அப்படிங்கிற அழுத்தம் இருந்துருக்குமே?
நான் நான் எப்படி நடிச்சிருக்கேன்னு சொல்ல முடியாது..ஆனா, படத்துல நீங்க என்ன மறந்துட்டு, அந்த கேரக்டர பார்ப்பீங்க.. நீங்க படத்த பார்க்கும் போது உங்களுக்கு பிரசாந்த் தெரிய மாட்டாரு.. அந்த கேரக்டர்தான் தெரியும். அது நடக்கணும்.
அது நடந்தது அப்படின்னாத்தான், நான் என்னோட வேலை சரியா செஞ்சிருக்கேன்னு அர்த்தம். இந்தப்படத்துல நான் பார்வையற்ற மியூசிஷியனா நடிச்சிருக்கேன். உண்மையில, அத நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். உண்மையை சொல்லணும்னா கண்ண திறந்து பியானோ வாசிக்கிறத விட, கண்ண மூடி பியானோ வாசிக்கிறதுதான் ஈஸி.
மணிரத்னம், ஷங்கர் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?
திருடா, திருடா படத்துல மணி சார் கூட வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைச்சிச்சு. சார் ரொம்ப ரொம்ப சைலண்ட். அதிகமா பேச மாட்டார். பத்து வார்த்தை பேசுற இடத்துல, இரண்டு வார்த்தை பேசிட்டு போயிடுவார்.
அவர் ஒரு மாதிரி ஸ்டைலா சீனை சொல்லிக்கொடுப்பார். அவர்கிட்ட இருக்குற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன அப்படின்னா, அந்த சீனை நம்மளால பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கைய, நமக்குள்ளயே விதைச்சிடுவார். அதனால நமக்கே அவர் அந்த சீனை அவர் எப்படி எடுக்கப்போறார் அப்படிங்கிற ஆர்வம் வந்துரும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப ஜாலியான அனுபவம்
எல்லாமே பிரமாண்டம்தான்
ஷங்கர் சாரை பொருத்தவரை, எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் ஒரு சூப்பரான திங்கர். அவர்கிட்ட கற்பனை வளம் சும்மா அப்படி இருக்கும். எல்லாராலும், எப்படி வேணாலும் யோசிக்க முடியும்.
ஆனா, அத செயல்படுத்துறது ரொம்ப கஷ்டம். ஆனா, ஷங்கர் சார் தான் யோசிக்கிற எல்லாத்தையும் செயல்படுத்தி திரையில கொண்டு வந்துருவாரு. அது, அவர் போன்ற சில பேராலதான் முடியும்.
சுந்தர் சி எப்படி?
சுந்தர்.சி டைரக்டர் என்பதையும் தாண்டி, அவர் சூப்பரான மனிதர். அவர் ஒரு நடிகராக என்ன வேணாலும் பண்ணுங்க அப்படின்னு நமக்கு முழு சுதந்திரம் கொடுத்துருவார். வின்னர் படத்திலும், லண்டன் படத்திலும் அவருடன் ட்ராவல் பண்ண போது, அவ்வளவு ஜாலியா வேலை பார்த்தோம். அவர் எல்லா விஷயங்களையும் ரொம்ப கேஷூவலாக எடுத்துப்பார். எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டும் அப்படித்தான் இருக்கும்.
அப்பா ஸ்டைல் வேறு மாதிரி
அப்பா தியாகராஜன் பொருத்தவரை, அவர் ஒரு பயங்கரமான யூனிவர்சிட்டி. பழைய காலத்து டெக்னாலாஜியையும், புது காலத்து டெக்னாலாஜியையும் பேலன்ஸ் செய்து வேலை செய்வார். அவர்கிட்ட இருந்து தினமும் நான் ஏதாவது ஒன்ன கத்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு டைரக்டருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவருடைய ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது.
இவர் நடிகர்களிடம் சீனை சொல்லும் போது கூட, தூரத்தில் இருந்து கத்தாமல், அருகே வந்து அமைதியாக அதனை சொல்லிக்கொடுப்பார். சில நேரங்களில், அவர் நடிப்பை சொல்லிக்கொடுக்கும் விதத்திலும், நடிப்பை வாங்கும் விதத்திலும், நடிகர்களுக்கு முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த சீனை நடிகர்கள் டப்பிங்கில் பார்க்கும் போது.. சார் சொன்னதுதான் சரி என்பதை புரிந்துகொள்வார்கள். என்னை பொருத்தவரை, எந்த இயக்குநராக இருந்தாலும் சரி, எப்போதுமே நான் என்னை அவர்களுக்கு தகுந்த மாதிரி மாத்திக்குவேன்.” என்றார்.
அப்பா அம்மா பற்றி?
எவ்வளவு நடந்தாலும், நான் இவ்வளவு தூரம் ஸ்ட்ராங்கா இருக்குறதுக்கு காரணமே, என்னோட அப்பா அம்மாவுடைய அன்பும், ரசிகர்களோட அன்பும்தான். அது இரண்டும் என்னோட வாழ்க்கையில இரு பெரும் தூண்கள் அப்படின்னு சொல்லலாம்.
அப்பா அம்மா என்கிட்ட சொல்றதெல்லாம் ஒரே விஷயம்தான். எது வேணாலும் பண்ணு, ஆனா ஒழுங்கா தெளிவா பண்ணு. தப்பு பண்ணாத, தப்பு பண்ணா மன்னிப்பு கேட்றதுக்கு தயங்காதே, யாரையும் மனசளவுல கூட புண்படுத்தாத. அது வார்த்தையாலும் சரி, செயலாலும் சரி, சக மனிதர்களாக ஒழுங்கா ட்ரீட் பண்ணு.. இத அவங்க சொல்லிட்டே இருப்பாங்க.
என்னோட அப்பா, முன்னாடியெல்லாம் என்ன வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, என்ன சார் உங்க பையனையே நீங்க, வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க சொல்லுவாங்க. அப்ப, அப்பா சிரிச்சுட்டு போயிடுவார். ஆனா, இன்னைக்கு பல பேர் அவங்களுடைய குழந்தைகளை வாங்க போங்கன்னுதான் கூப்பிடுறாங்க. குழந்தைகளை நாம வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, நம்மோட குழந்தைகள், மத்தவங்கள இயல்பாவே வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.. அதுதான் நல்ல வளர்ப்புக்கான ஒரு உதாரணம்.. அதே மாதிரி நான் தப்பு பண்ணிட்டேன் அப்படின்னா அதுக்காக உடனே என்ன அடிச்சு, கண்டிக்க மாட்டாங்க.
அன்பாலாயே திருத்துவாங்க
அந்த தப்ப அவங்க அன்பாலயே நமக்கு புரிய வைப்பாங்க. உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்லணும்னா, அப்பா அடிக்கடி வெளிநாட்டுக்கு போவார்.. அப்படி ஒரு நாள் வெளிநாட்டுக்கு போயிட்டு வரும் போது, ரொம்ப காஸ்ட்லியான ஒரு பொருளை எனக்காக வாங்கிட்டு வந்தார். ஆனா இரண்டாவது நாளே அத ஒடச்சிட்டேன்.. இத எங்க அப்பா அம்மா வந்து பார்த்தாங்க.. என்ன அடிக்கப்போறாங்கன்னு ரொம்ப பயந்துட்டேன். ஆனா அவங்க அப்படி செய்யல, அவங்க என்கிட்ட சொன்னது… இங்க பாரு, பொருள வாங்கிட்டு வந்தது என்னோடபொறுப்பு.. அதே மாதிரி அத பத்திரமா பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அத பத்திரமா பாத்துக்கலன்னா அப்படின்னா, அந்த பொருள் உன்கிட்ட இருக்காதுன்னு சொன்னாங்க. அது எனக்கு வேறு மாதிரியான புரிதல கொடுத்துச்சு” என்று பேசினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்