Mohan Babu: மோகன் பாபு வீட்டில் திருட்டு! பையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம்..திருப்பதிக்கு எஸ்கேப் ஆன பணியாளர் கைது
பையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை திருடிவிட்டு திருப்பதியில் இருந்த மோகன் பாபு வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்து ஹைதராபாத் அழைத்து வந்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 7.36 லட்சத்தை மீட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஜல்பள்ளி பகுதியில் அமைந்திருக்கும் தெலுங்கு சினிமா நடிகர் மோகன் பாபு வீட்டில் ரூ. 10 லட்சம் பணம் திருடுபோயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மோகன் பாபு வீட்டில் பணிபுரிந்து வந்த உள்ளூர் பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் மோகன் பாபு. அவரது பெர்சனல் செகரட்டரியிடமிருந்து வீட்டுப் பணியாளர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது. தனது பையில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் பாபு பெர்சனல் செகரட்டரி, பஹடிஷரீப் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பதியில் வீட்டு வேலை செய்து வந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த புதன்கிழமை இவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கைதான பணியாளரிடமிருந்து போலீசார் ரூ. 7.36 லட்சத்தை மீட்டுள்ளனர். மீதமுள்ள தொகையை தொழிலாளி செலவு செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மோகன் பாபு தரப்பில் எந்த அறிக்கையும், தகவலும் வெளியிடப்படவில்லை.
மோகன் பாபு புதிய படங்கள்
1975இல் வெளியான ஸ்வர்கம் நரகம் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன் பாபு. இவரது நிஜப்பெயர் பக்தவத்சலம் நாயுடு. ஆனால் சினிமாவுக்காக மோகன் பாபு என மாற்றிக்கொண்டார். பல்வேறு படங்களில் வில்லனாகவும், பிறகு ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் மோகன் பாபு கடைசியாக கடந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் வெளியான சகுந்தலம் படத்தில் நடித்திருந்தார்.
மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு, லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். மோகன் பாபு தற்போது மகன் மனோஜ் மஞ்சு நடித்து வரும் கண்ணப்பா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் மோகன் பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார்.
சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் திருட்டு சம்பவங்கள்
சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் அவர்களின் பணியாளர்களே திருட்டில் ஈடுபடும் சம்பவம் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் கோலிவுட் நடிகையான அதுல்யா ரவி வீட்டில் அவரது பணிப்பெண் நடிகையின் பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் அவரது நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக என 60 பவுன் வரை திருடி தனியாக வீடு கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சாயா சிங் வீட்டில் இருந்து 66 கிராம் தங்கம் 150 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், வீட்டில் வேலை செய்த பணி பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதைப் போல் பல்வேறு பிரபலங்களின் வீட்டிலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள், பணியாளர்களால் திருட்டு நடந்துள்ளது.
டாபிக்ஸ்