தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Mansoor Ali Khan Supports To Admk Alliance For Lok Sabha Election 2024

Mansoor Ali Khan: அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான்.. கேட்டது என்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Mar 13, 2024 01:17 PM IST

Actor Mansoor Ali Khan vs ADMK: மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் படை கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.

அதிமுகவுடன் நடிகர் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை.
அதிமுகவுடன் நடிகர் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை.

ட்ரெண்டிங் செய்திகள்

தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் பங்கீடு முடித்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்து, அக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.  பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போது நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் படை கட்சி இணைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக அதன் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதிமுக கூட்டணிக்கு ஏற்கனவே அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் படை கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆரணி அல்லது வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்சூர் அலிகானை பொறுத்தவரை ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி சார்பில் 1998 ஆம் ஆண்டில் போட்டியிட்டார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு சுயேட்சையாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். குறிப்பாக திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் மன்சூர் அலிகான் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில், "தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை நான் கண்ணால்க்கூட பார்க்கவில்லை. அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன். த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை." என்று பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக  மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்