Actor Kunal Memorial Day: முதல் படமே ஹிட்.. காதலர் தினம் குணால் நினைவு நாள் இன்று!
நடிகர் குணாலின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
90 களில் பிறந்தவர்களால் இன்று வரை மறக்க முடியாத திரைப்படங்களில் காதலர் தினம் திரைப்படமும் ஒன்று. இப்படத்தின் கதையும், காதலும், பாடலும், இசையும் இன்று வரை யாராலும் மறக்க முடியாது.
இந்த திரைப்படத்தில் நடிகர் குணால் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருடைய கெட்டப், நடிப்பு என முதல் படத்திலிருந்து அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானார்.
மும்பையைச் சேர்ந்த நடிகர் குணால் காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்துள்ளார். தில் ஹே தில் மெய்ன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை சிம்ரன் தங்கை மோனலுடன் சேர்ந்து பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது, பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தமும் அழகாக உள்ளது என அப்போது பெரிதும் பேசப்பட்டது.
காதலர் தினம் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த எந்த திரைப்படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை. இதனால் அவர் பெரும் வருத்தத்திலிருந்தார் என கூறப்படுகிறது. அதன் காரணமாக மிகவும் மன அழுத்தத்திலிருந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் தற்போது வரை மர்மமாக இருந்தாலும். தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத நாயகனாக இருந்து வருகிறார்.
நடிகர் குணால் நம்மை விட்டு பிரிந்து இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது. இருந்தாலும் காதலர் தினம் வாழும் வரை காதல் நாயகன் குணால் நம்மோடு கட்டாயம் வாழ்வார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்