விஜயை தாக்குவதற்காக வசனம் வைக்கப்பட்டது உண்மையா? - உண்மையை உடைத்த பிரபலம்
விடுதலை 2 படத்தின் டிரைலரில் இடம் பெற்ற வசனம் ஆனது விஜய் தாக்குவதற்காக வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு நடிகர் கிஷோர் பதில் அளித்திருக்கிறார்
விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதன் இறுதியில், தத்துவம் இல்லா தலைவர்கள்தான் ரசிகர்கள் மன்றத்தை உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்ற வசனம் வரும். இந்த வசனம் அண்மையில் அரசியல் கட்சி தொடங்கிய விஜயை சாடுவது போல இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது குறித்து அந்தப்படத்தில் நடித்த கிஷோர் பேசி இருக்கிறார்.
விஜயை தாக்கி இருக்கிறாரா?
இது குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, "ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்து பேசினால், அது அரசியல் ரீதியாக சரியாக இருப்பது போலதான் இருக்கும். நீங்கள் தற்போது வெற்றிமாறன் விஜயை சாடுவது போல வசனம் வைத்திருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அது வேறு யாரையோ குறிப்பிடுவது போல இருக்கிறது என்று சொன்னால், அது எனக்கு சரியாகத்தான் இருக்கும்.
இறுதியாக அந்த படம் பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும். அப்போதுதான் அது சரியாக இருக்கும். விடுதலை திரைப்படம் ஒரு காலகட்டத்தில் நடக்கக்கூடிய திரைப்படம். அப்படி இருக்கும் பொழுது அந்த வசனமானது அன்றைய காலக்கட்டத்தில் இருந்த ஐடியாலஜியை வெளிப்படுத்தும் விதமாகத்தான் வைக்கப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் அதை இங்கு அப்ளை செய்கிறீர்கள் என்றால், எங்கு வேண்டுமானாலும் நீங்கள் அதை அப்ளை செய்யலாம். அது எங்கு வேண்டுமானாலும் பொருந்தும்.
ஒடுக்கப்படுவதும் வேறு வேறு வடிவங்களில்
அப்போதிருந்த சமூகத்தில் இருந்த பிரச்சினைகள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் நிறைய விஷயங்கள் இங்கு மாறாமல் இருக்கிறது. ஒடுக்கப்படுவதும் வேறு வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது.
நீங்கள் நேரடியாக அரசியல் படம் எடுப்பது தற்போதைய காலகட்டத்தில் மிக மிக கடினமான ஒன்றாக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களிலும் அரசியல் இருந்தது. ஆனால் கண்ணிற்கு தெரியாமல் இருந்தது. தெரிந்தால்தான் இவர்கள் விட மாட்டார்களே... இங்கு உண்மையை பேசினால் தான் அவர்களுக்கு பிடிக்காதே' என்று பேசினார்.
டாபிக்ஸ்