கத்துனா கெட்டவரா" - வெற்றிமாறன் மேடையில் அவ்வளவு கோபப்பட்டது ஏன்? - நடிகர் கிஷோர் பதில்
வெற்றிமாறன் மேடையில் அவ்வளவு கோபப்பட்டது ஏன் என்பது குறித்து நடிகர் கிஷோர் பேசி இருக்கிறார்
விடுதலை இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கோபம் அடைந்து மைக்கை தூக்கிப்போட்டு சென்றது குறித்து நடிகர் கிஷோர் பேசி இருக்கிறார்.
இது குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், "விடுதலை திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை எந்த அளவீடு வைத்து சொல்ல முடியும் என்று தெரியவில்லை. படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெற்றிமாறன் அவரது படங்களின் வழியாக ஒரு ஹெல்த்தியான ஆடியன்ஸை உருவாக்கி இருக்கிறார். அவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
கோபப்பட்டால் கெட்டவரா?
மேடையில் அவர் மைக்கை வைத்துவிட்டு கோபமாக சென்றது குறித்து கேள்வி கேட்கிறீர்கள்?
அவர் நீங்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய கோபக்காரர் கிடையாது. நாங்கள் அவருடன் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து பயணிக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால் அவர் பார்க்கும் வேலையானது அதிக மன அழுத்தத்தை உருவாக்கக் கூடியது. நீங்கள் அங்கு எல்லோரையும் கட்டுப்படுத்தி வேலை வாங்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தையும், குறிப்பிட்ட அளவு பட்ஜெட்டையும் உங்களுக்கு கொடுத்து உங்களுக்கான படைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் தருகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட அழுத்தத்தில் மற்றவர்களிடம் உங்களுக்கு தேவையானவற்றை சொல்லி, உங்களது மனதில் இருக்கும் காட்சியை அவர்கள் மூலமாக கொண்டு வர வேண்டும்; இது எவ்வளவு கடினமான வேலை. அப்படி வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, சில நேரங்களில் கத்தி தான் ஆக வேண்டும். கத்தினால் இவர்கள் உடனே கேட்டவர் என்று சொல்லி விடுவார்கள்.
அதிக நேரம்
அவர் கதையை கட்டுப்படுத்த மாட்டார்; காரணம் என்னவென்றால் கதையை கட்டுப்படுத்தினால், அந்த கதையில் இடம்பெறும் கதாபாத்திரம் சரியாக வளராது கதாபாத்திரத்தை கட்டுப்படுத்தினால் கதை சரியாக வளராது; அதை கையாள்வது தான் வெற்றிமாறனின் அழகு. அதனால் தான் அவரது படங்களுக்கு நேரம் பிடிக்கிறது.
உண்மையில் வெற்றிமாறன் 5 மணி நேரம் எடுக்கிறாரா? இல்லை.. 6 மணி நேரம் எடுக்கிறாரா? என்பது கேள்வியே அல்ல. அவர் எடுப்பது அனைத்துமே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்." என்று பேசினார்.
டாபிக்ஸ்