Actor Karthi: உழவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.. எல்லா நேரங்களிலும் பங்களிப்பு தாருங்கள் - கார்த்தி பேச்சு
Actor Karthi: விவசாயத்தில் பல்வேறு விதமான சாதனைகள் புரியும் விவசாயிகளும், விவசாயத்துக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் கார்த்தியின் உழவன் பவுன்டேஷன் சார்பில் விருதுகளும், ரூ. 2 லட்சம் பணத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுதோறும் விவசாயத்தில் பல்வேறு விதமான சாதனைகள் புரியும் விவசாயிகளும், விவசாயத்துக்கு பங்களிப்பு செய்பவர்களும் கெளரவப்படுத்தப்படுகிறார்கள்.
இதையடுத்து உழவன் விருதுகள் 2025 விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
உழவர்கள் தான் கொண்டாடப்பட வேண்டியவர்கள்
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது, "இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை, குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன். அதேபோல் பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை பற்றி நினைக்காமல், அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும்" என்றார்
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது, "இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம். நமது ஆணிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இந்த விழாவில் கலந்து கொண்டதே பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.
பிரமிப்பாக இருக்கிறது
நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசியதாவது, "கார்த்தி இப்படியொரு விஷயத்தை செய்வதே பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சுயமாக வீட்டில் செடி வளர்ப்போம், தோட்டம் அமைப்போம். அதைப்பற்றி பெருமையாக பேசிக் கொள்வோம். விவசாயத்தில் சாதிப்பவர்களுக்கு திட்டம் உருவாக்கி பலருக்கும் அங்கீகாரம் கொடுப்பதோடு, உழவன் பவுண்டேஷன் மூலமாக உழவர்களுக்கு நிறைய உதவி செய்து வருவதை பார்க்கையில் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக சேவை" என்றார்.
உழவர்களுக்கு விருதுகள்
இந்த ஆண்டில் சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர், நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு, மாபெரும் வேளான் பங்களிப்பு, கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு, சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வென்று ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.
கார்த்தி படங்கள்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் புதிய படமான வா வாத்தியார் படம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டில் திரைக்கு வரவுள்ளது. இது தவிர ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்