தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Karthi:சமூக சேவை செய்த 25 பேர் - தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்த நடிகர் கார்த்தி

Actor Karthi:சமூக சேவை செய்த 25 பேர் - தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்த நடிகர் கார்த்தி

Marimuthu M HT Tamil
Feb 03, 2024 09:57 PM IST

சமூக செயற்பாட்டாளர்கள் 25 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான நிதியுதவி அளித்து நடிகர் கார்த்தி ஊக்குவித்தார்.

Actor Karthi:சமூக சேவை செய்த 25 பேர் - தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்த நடிகர் கார்த்தி
Actor Karthi:சமூக சேவை செய்த 25 பேர் - தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்த நடிகர் கார்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

​கடந்த அக்டோபர் மாதம், 2023ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி திரைத்துறையில் 25 படங்களை முடித்தநிலையில் சென்னையில் விழா நடத்தப்பட்டது. அதில், நடிகர் கார்த்தி, இந்தச் சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையினை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் அளித்துள்ளார். தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை பெற்ற 25 சமூக செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம் மற்றும் செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 

1. அமுதவள்ளி- பழங்குடிகள் செயல்பாட்டாளராக உள்ளார். ஆனைமலை வட்டம் இரவாளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 38 வயதான அமுதவள்ளி பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை உண்டு பண்ண தொடர்ந்து போராடுபவர். 70 பட்டியல் பழங்குடி சமூகப் பெண்களுக்கு நில உரிமைப் பட்டா வாங்கி கொடுத்ததோடு அதில் இவரின் தொடர் முயற்சியில் 18 வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 48 பெண்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகளைப் பெற்றுத்தந்துள்ளார்.  இப்பணிகளுக்காக யாரிடமும் உதவியோ பணமோ பெற்றதில்லை.

2. அசினா - திருநங்கைகள் செயல்பாட்டாளராக உள்ளார். தனது தொடர்ச்சியான முயற்சியில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாத நிலையை உருவாக்கியுள்ளார். இதுவரை 41 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இலவச வீட்டு மனைப் பட்டா பெற்று தந்துள்ளார்.  சமூக நலத்துறை மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் 18 திருநங்கைகளுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெற்றுத்தந்துள்ளார். 

3. ரவி- மலைவாழ் மக்களுக்கான உதவியாளராக இருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு விவசாயம் செய்ய குடும்பத்துடன் ஆத்தூரில் இருந்து தருமபுரி மாவட்டம் மலைக்கிராமத்திற்கு வந்த ரவி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான அவசியமான முதலுதவிகளை கற்றுக் கொண்டு மலைவாழ் கிராமங்களுக்கு எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் ஆபத்தான சூழ்நிலையில் உதவி செய்கிறார். மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். மலைவாழ் மக்களின் நலனுக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் 70 வயதிலும் இளைஞர் போலச் சுற்றி வருகிறார் ரவி.

4. தெய்வராஜ்-  43 வயதான திருப்பூரைச் சார்ந்த தெய்வராஜ் முடிதிருத்தம் கடை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 23 வருடங்களாக ஆதரவற்று திரியும் மனநோயளிகள், வயதான பிளாட்பார வாசிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களை முடி திருத்தம் செய்து, சீர்படுத்தி, உடைகள் அணிவித்து பல்வேறு காப்பங்களில் அவர்கள் அடைக்கலம் அடைய ஏற்பாடு செய்து வருகிறார். இதோடு மட்டுமன்றி தொழுநோயாளிகளை முடி திருத்தம் செய்வது, ஆதரவற்று இறந்து கிடக்கும் மனிதர்களை அடக்கம் செய்வது, வாய்ப்புகள் கிடைக்கும் போது உணவுகள் அளிப்பது போன்ற பல சமூகப் பணிகளை செய்து வருகிறார்.

5. சுதாகர் - வித்யாலெட்சுமி தம்பதியர். ஆரணியைச் சார்ந்த இவர்கள் தினமும் 100 பேருக்கான உணவு வீதம் கடந்த 1800 நாட்கள் (கிட்டத்தட்ட 5 வருடங்களாக) எளிய மக்களுக்கு உணவை அளித்து வருகிறார்கள். தன் அப்பா, மாமனார் இறந்ந நாட்கள் தன் மனைவி பிள்ளைகள் கோவிட்டால் பாதிக்கப்பட்ட நாட்கள் போன்ற மோசமான நாட்களில் கூட இவர்கள் உணவு அளிப்பதை நிறுத்தவில்லை.

6. செரினா- இருளர் குழந்தைகள் செயல்பாட்டாளர்.

​செரினா பிறந்தது தமிழ்நாடாக இருந்தாலும், வளர்ந்தது முழுக்க முழுக்க பெங்களூருவில் தான். விடுமுறை நாட்களில் கல்பாக்கத்துக்கு வந்தபோது அங்கிருக்கும் இருளர் குழந்தைகளோட கல்வி, சுகாதாரத்தை முன் வைத்து இயங்கி வருகிறார்.

7. சு. பாரதிதாசன்- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

 சு. பாரதிதாசன் நண்பர்களுடன் இணைந்து அருளகம் எனும் அற அமைப்பை உருவாக்கி, அரிய மற்றும் அழிவபாயத்திலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மக்களோடு இணைந்து பாதுகாப்பதில் 23 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். மண்ணுக்கேற்ற தாவரங்களையும் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளைக் கவரும் தாவரங்களையும் வளர்க்கப் பூந்தளிர் நாற்றுப்பண்ணையையும் அருளகம் அமைப்பு மூலம் செயல்படுத்தி வருகிறார். அத்துடன் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள பாறுக் கழுகுப் பாதுகாப்புக் குழுவிலும் (Vulture Conservation Committee) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

8. புஹாரி ராஜா - சமூக ஊடக செயல்பாட்டாளர்​, இன்ஜினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலை, கை நிறைய சம்பளம் என்றால் மனம் முழுக்க எளிய மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்கிற எண்ணம். அந்த வேலையை உதறிவிட்டு மதுரை திரும்பிய புஹாரி ராஜா, ஊடகத்தில் பணி செய்து இருக்கிறார். பின், தானே சுயமாக புஹாரி ஜங்ஷன் என்கிற சேனலை உருவாக்கி, அதில் எளிய மனிதர்களின், சாதனைகளை, கதைகளை, வலிகளைப் பதிவு செய்யத் தொடங்குகிறார். தற்கொலை முடிவிலிருந்த மனிதருக்கு தன்னம்பிக்கையான வாழ்வு, கவனம் பெறாத மக்களின் தேவைகளை கவனப்படுத்தியது என பல மனிதர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்த சேனல்.

9. நாகராஜ் - கிராமப்புற சுய உதவிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர். நாகராஜ் அவர்களின் சீரிய பணியின் மூலம் இந்த சேவை சுமார் 10000 குடும்பங்களை சென்றடைந்துள்ளது.  இவரின் பணியானது, ஏழை மக்களுக்குத் தேவையான கல்வி, இருப்பிடம், கழிப்பிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அவசிய தேவைகளைப் பெறவும்,சேமிப்பு பழக்கத்தையும் வங்கிக் கடன் பெற தேவையான தகுதியையும் பெற முனைப்புக் காட்டி வருகிறார்.

10. அ.ரபேல்ராஜ், பழங்குடியினருக்கான கல்வி செயல்பாட்டாளராக இருந்து வருகிறார்.

 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கக்கனூர்- மங்களபுரத்தில் ‘’கவசம்”  கல்வி மற்றும் சமூகச் செயல்பாட்டு மையமாக செயல்படுகின்றது. இதனை ரபேல் ராஜ் நடத்தி வருகிறார். இம்மையத்தில் உள்ள விடுதியில் ஏழை, எளிய குழந்தைகள் சுமார் 50 பேருக்கும் மேல் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். பழங்குடி இருளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு, சாதிச் சான்று கிடைப்பதற்கும், இருளர் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

​இப்படி,  கிராமப்புற சுகாதார செயல்பாட்டாளர் டெய்சி ராணி, விலங்குகள் நல ஆர்வலர் விஜய் (எ) விஜயகாந்த், பழங்குடி செயல்பாட்டாளர் ஜோஷ்வா, கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சியாளர் மணிகண்டன், சமூக செயல்பாட்டாளர் ஆறுமுகம், ரத்ததான ஒருங்கிணைப்பாளர்  சந்துருகுமார், ஆதரவற்ற பெண்களுக்கான செயல்பாட்டாளர் பாக்கியலெட்சுமி, ஊர் கிணறு புனரமைப்பாளர் மஞ்சரி, மாற்றுத்திறனாளிகள் செயல்பாட்டாளர் மதுமிதா கோமதிநாயகம், குழந்தைகள் செயல்பாட்டாளர் தேவி, அமரர்களுக்காக செயல்படும் உறவுகள் அறக்கட்டளை, கல்வி மற்றும் பேரிடர் செயல்பாட்டாளர்களாக இருக்கும் வியாசை தோழர்கள், ​தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஹரி கிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளர் V. P. குணசேகரன், விளையாட்டுத்துறை செயல்பாட்டாளர் டெரிக் ஹட்சன் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நடிகர் கார்த்தி வழங்கி பாராட்டினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்