‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்

‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 11, 2025 11:00 AM IST

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரின் 40 ஆண்டு கால சினிமா பயணத்திறக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார். அதில் ஷிவாண்ணா என் மகன் போன்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்
‘ஷிவாண்ணா என் மகன்.. அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரமாக நிற்கிறார்..’ புகழ்ந்த கமல்

கன்னடத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 125 படங்களுக்கும் மேல் நடித்து கன்னட மக்களின் ஹேட்ரிக் ஹீரோவாக மாறியுள்ளார். இவரது நடிப்பு, நடனத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை எப்போதும் அன்புடன் ஷிவாண்ணா என்றே அழைத்து வருகின்றனர்.

ஷிவாண்ணா 40

இவர், தற்போது சினிமா வாழ்க்கையில் 40 ஆண்டுகளை கடந்த நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கன்னட சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில், ஷிவாண்ணாவின் குடும்ப நண்பரான நடிகர் கமல் ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ளார்.

அவர் என் மகன்..

அந்த வீடியோவில், "சிவ ராஜ்குமார் தனக்கு தம்பி, மகன் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படி பாத்தாலும் ஷிவாண்ணா எனக்கு மகன் மாதிரி. நான் அவருக்கு சித்தப்பா மாதிரின்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன். சும்மா இன்னைக்கு வீடியோ எடுக்குறாங்கன்னு நான் பேசல. இந்த உறவு 40- 50 வருஷம் நீடிச்சது.

அப்பா வழியில் மாபெரும் நட்சத்திரம்

ராஜ் குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு, நான் எதிர்பார்க்காதது. அதற்கு காரணம் நாங்க எல்லாம் ஒரே ஸ்டூடியோவில் பிறந்த குழந்தைகள். அப்படி ஆரம்பிச்ச உறவு இத்தனை வருடம் நீடித்து அவருக்கு பிறகும் தொடர்கிறது. அது என் வீடு.

ஷிவாண்ணாவ பொறுத்த வரைக்கும் இந்த 40 வருஷம் எப்படி ஓடுச்சுன்னே எனக்கு தெரியல. அவர் தன்னை என்னுடைய ரசிகனாக அறிமுகப்படுத்திக் கொண்டு பழக்கமானவர். இன்னைக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து அவரது அப்பாவின் வழியில் சாதித்துக் கொண்டிருக்கிறார். இது இவர் இனியும் சாதிக்கப்போகும் விஷயம். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

50வது கொண்டாட்டத்திற்கு..

பின், கன்னட மொழியில் அவருக்கு வாழ்த்து சொல்லிய கமல், மீண்டும் இதே போல ஒரு வீடியோவில் உங்களது 50வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு நான் வாழ்த்து சொல்ல வேண்டும். நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். உங்கள் மீதான அன்பம் அப்படியே தான் இருக்கும். எல்லா வளமும் பெற வேண்டும்" எனக் கூறி வாழ்த்தினார்.

தக் லைஃப் பட சர்ச்சை

முன்னதாக, தக் லைஃப் பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ஷிவாண்ணாவை பார்த்து உங்கள் கன்னடம் எங்கள் தமிழில் இருந்து தோன்றியது எனக் கமல் பேசினார். இந்த வார்த்தை கன்னட மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளானது. அத்தோடு நில்லாமல், கமலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அவரது புகைப்படங்கள் எல்லாம் எறிக்கப்பட்டன. அத்தோடு, கமல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஷிவாண்ணாவிற்காக வருந்திய கமல்

இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரது தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட தடை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு எழுதிய கடிதத்தில், ஷிவாண்ணாவின் மேல் காட்டப்பட்ட எதிர்ப்புக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், கடைசி வரை தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரம் தற்போது வரை நீடித்து வருகிறது.

கமலின் ரசிகன் ஷிவாண்ணா

மேலும், என் அப்பாவே பெரிய நடிகராக இருந்த போதிலும் நான் எப்போதும் கமலின் தீவிர ரசிகன். அவரது நடிப்பால் நான் ஈர்க்கப்பட்டவன் என ஷிவாண்ணா பல மேடைகளில் கருத்து தெரிவித்து வந்தார். அத்தோடு, கன்னட மொழி விவகாரத்திலும் கமலுக்கு ஆதரவாகவே அவரது நிலைப்பாடும் இருந்தது குறிப்படத்தக்கது.