Actor Jayaram: ட்ரெயலர் வெளியீட்டு நிகழ்வுக்கான பணத்தை இளம் விவசாயிக்கு கொடுத்து உதவிக்கரம் நீட்டிய ஜெயராம்
இளம் விவசாயிக்கு புதிய மாடுகளை வாங்குவதற்கும் அவரது பண்ணையை மீண்டும் கட்டுவதற்கும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை அவரது வீட்டுக்கே சென்று மலையாள நடிகர் ஜெயராம் வழங்கினார். இந்த பணம் ஆபிரகாம் ஓஸ்லர் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக ஒதுக்கப்பட்டதாக உள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மேத்யூ என்ற இளம் விவசாயிக்கு சொந்தமான 20 மாடுகளில் 13, உணவு நஞ்சானதால் உயிரழந்தது. இதையடுத்து புதிய பசுக்களை வாங்கவும், பொருளதார இழப்பை சரி கட்டவும் விவசாயி தரப்பிலிருந்து உதவி கோரப்பட்டது.
இந்த சம்பவம் கேரளா முழுவதும் கவனத்தை ஈர்த்த நிலையில், மாநில அமைச்சர்கள் சிஞ்சு ராணி மற்றும் ரோஷி அகஸ்டின் ஆகியோர் 15 வயதாகும் விவசாயி மேத்யூஸ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருக்கு ஆறுதல் கூறியதுடன், மாநில அரசு சார்பில் உரிய உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மலையாள நடிகரான ஜெயராம், இளம் விவசாயி மேத்யூஸ்க்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். விலங்கள் மீது தீரா காதல் கொண்டவராக இருக்கும் ஜெயராம், விவசாயி மேத்யூஸ் வீட்டுக்கு சென்று புதிய மாடுகள் வாங்குவதற்கும், பண்ணையை மீளுருவாக்கம் செய்வதற்கும் ரூ. 5 லட்சம் காசோலையை வழங்கியுள்ளார்.
ஜெயராம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ஆபிரகாம் ஓஸ்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக படக்குழு சார்பில் ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை ரத்து செய்து, அந்த பணத்தை மேத்யூஸ்க்கு அளிக்க படக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஜெயராம் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளார். அத்துடன் மற்ற மலையாள நடிகர்களான மம்முட்டி, ப்ருத்விராஜ் போன்றோரும் பண உதவி செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேத்யூஸிடம் இருந்த மாடுகள் நல்ல நாட்டு மாடுகளாக இருந்த நிலையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து உயர் ரக நாட்டு பசுக்களை நல்ல விலையில் வாங்கி தருவதற்கு உதவி புரிவதாகவும் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, மேத்யூவின் 20 மாடுகளில் 13 மாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தன. இதைத் தொடர்ந்து மரவள்ளிக்கிழங்கு தோலில் உள்ள ஹைட்ரோசியானிக் அமிலம் (HCN) என்ற விஷப் பொருளால் கால்நடைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவித்தன.
உயிர் பிழைத்த மூன்று பசுக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு கன்றுகளுடன் மற்றொரு பசு உயிர் பிழைத்துள்ளது. பசுக்கள் இறப்பினால் மேத்யூஸ்க்கு ரூ. 6 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தந்தை இறப்புக்கு பின், 13 வயதில் இருந்தே பசுக்களையும், பண்ணையும் பராமரித்து வருகிறார் மேத்யூஸ். அவரது சகோதரர் ஜார்ஜ் மற்றும் தங்கை பண்ணையை நிர்வகிப்பதில் உதவிகரமாக இருந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்