Ganja Karuppu: ‘பாம்பா பொறந்தாலும் இனி படம் எடுக்க மாட்டேன்.. எல்லாம் முட்டா பசங்க’- கஞ்சா கருப்பு ஆதங்கம்
Ganja Karuppu: ஒரு படம் எடுத்து எனக்கு கிடைத்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தாலும் படம் எடுக்க மாட்டேன் என கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

Ganja Karuppu: தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர், தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார்.
ஆனால், சினிமாவில் நல்ல நிலையில் இருந்த போதே கடனாளியாக மாறி, சொந்த வீட்டை விற்று, வாடகை வீட்டிலும் பிரச்சனைக்கு உள்ளாகி திணறி வருகிறார், இந்நிலையில், அவரின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணம் என்ன என்பது குறித்து இந்தியாகிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு கஞ்சா கருப்பு பேட்டி அளித்துள்ளார்.
எல்லாம் முட்டாள்
அந்தப் பேட்டியில், "நான் எப்பவுமோ நல்லா தான் இருப்பேன். 4 பேருக்கு நல்லது பண்றவன் நல்லா தான் இருப்பான். நான் தயாரிச்ச வேல்முருகன் போர்வெல்ஸ் படத்துக்கு என் வீட்டை எல்லாம் வித்து காசு போட்டேன். அந்த படம் எடுக்கும் போது நான் முட்டாளா இருந்துட்டேன். என்னோட முட்டாள் தனத்தால தான் படம் இப்படி ஆச்சு. இந்தப் படத்தோடவும் ஹீரோ, டைரக்டர் எல்லாம் முட்டாள்.
நான் மாட்டிகிட்டேன்
டைரக்டர்ன்னா கடுமையா உழைக்கனும். ஆனா இவன் அப்படி இல்ல. இவன் நல்லா சாப்பிட்டு மத்தவங்கள பட்டிணி போட்டுருவான். அது தவறான விஷயம். அந்த தவறான விஷயத்துல நான் மாட்டிகிட்டேன். அதுனால, இந்தப் படத்துக்காக வாங்குன கடன கொஞ்சம் கொஞ்சமா கட்டிட்டு இருக்கேன்.
இதுக்காக எல்லாம் நடிகர் சங்கத்துல இருந்து யாரும் எனக்கு உதவல. அந்த வாய்ப்பையும் நம்மாள கேக்க முடியாது. படம் நடிச்சு சம்பளம் வரலைன்னா தான் அவங்க எல்லாம் செய்வாங்க. நம்மளோட பிரச்சனைய இங்க கொண்டு போக முடியாது.
எதையும் கண்ட்ரோல் பண்ண முடியல
இந்தப் படத்த தயாரிக்க என்ன வந்து மாட்டி விட்டுட்டாங்க. அத நினைச்சு ரொம்ப வருத்தப்படுறேன். இந்தப் படம் நான் பிஸியா இருந்த டைம்ல வந்தது. என்னால எதையும் கன்ட்ரோல் பண்ண முடியல. டைரக்டர் வேலை செய்யுறாங்கன்னு தான் பேர், ஆனா, தண்ணி மாதிரி செலவாகும். அதுவும் நான் படம் எடுத்த சமயத்துல எல்லாம் பிலிம். செலவு கட்டுக்கடங்காம போகும்.
இந்தப் படத்துக்கு அப்புறம், இனி நான் அடுத்த ஜென்மத்துல பாம்பா பொறந்தா கூட படம் எடுக்க மாட்டேன். நான் தவழ்ந்து தான் போவேன். அந்த அளவுக்கு மனம் நொந்து போயிருக்கேன்.
ஏணிய மறக்க கூடாது
தமிழ் சினிமாவு பல காமெடி நடிகர்கள் வந்த கொஞ்ச நாள்லயே காணாம போயிடுவாங்க. ஆனா நான் நெலச்சி நிக்க காரணம் குருநாதர வணங்கி கும்புடுறது தான். இன்னிக்கு உள்ள நிலைமையில நம் குருநாதர யாரும் விட்டுக் கொடுக்க கூடாது. ஏத்தி விட்ட ஏணிய என்னைக்கும் மறக்க கூடாது.
நான் பிக்பாஸ் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் பட வாய்ப்பு அதிகமா இருக்கு. மக்கள் சப்போர்ட் எனக்கு இருக்கு. அதுனால எனக்கு படம் குறையாது." என நம்பிக்கையாக பேசி உள்ளார்.
வேல்முருகன் போர்வெல்ஸ்
கஞ்சா கருப்பு தமிழ் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் சிலரது ஆலோசனைகளைக் கேட்டு வேல்முருகன் போர்வெல்ஸ் எனும் படத்தை தயாரித்தார். இந்தப் படம் எடுக்க செலவான காசால் தன் வீடு உள்ளிட்ட சொத்துகளை இழந்தார் கஞ்சா கருப்பு. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் தன் இத்தனை வருட உழைப்பையும் சொத்தையும் இழந்து கடனாளியாக மாறினார் எனக் கூறியிருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்