பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்

பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 15, 2024 07:15 AM IST

பாக்யராஜ் பட்டறையில் இருந்து வந்தவர், தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞனாக ஜொலித்து வருபவர் ரா. பார்த்திபன். விருதுகளின் மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார்.

பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்
பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்

தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக பல்வேறு வித்தியாச முயற்சிகளை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் பார்த்திபன். ஒரு திரையரங்குகுள் நடக்கும் கதை, ஒரேயொருவர் மட்டும் நடித்த படம், ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என இவரது வித்தியாச முயற்சிகளை ஏராளமாக உள்ளன.

சினிமா பயணம்

சென்னையில் பிறந்த வளர்ந்த பார்த்திபன், சினிமா மீதான ஆர்வத்தால் வாய்ப்பு தேடி, இயக்குநர் பாக்யராஜின் உதவியாளராக சேர்ந்துள்ளார். அவருடன் பணியாற்றுவதற்கு முன்னர் வேடிக்கை மனிதர்கள் என்ற படத்தில் உதவி இயக்குநராக பார்த்திபன் பணிபுரிந்துள்ளார். பாக்ராஜின் படங்களில் பல்வேறு நடிகர்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தும் வந்த பார்த்திபன், ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் முதல் முறையாக நடிகராக தோன்றினார். தொடர்ந்து பாக்யராஜின் தாவாணி கனவுகள் படத்தில் போஸ்ட்மேனாக முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே தேசிய விருது

1989இல் புதிய பாதை படம் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார் பார்த்திபன். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்று பார்த்திபனை ரசிகர்கள் மத்தியில் நன்கு அடையாளப்படுத்தியது. முதல் படத்திலேயே தமிழ்நாடு அரசின் சிறந்த படம் விருது, சிறந்த திரைக்கதை விருது, சிறந்த படம் தேசிய விருது வென்று கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள் என பேமிலி ட்ராமா படங்களை இயக்கிய இவர், பின்னர் உள்ளே வெளியே என்ற மசாலா திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு சரிகமபதநி, புள்ளைக்குட்டிகாரன் என ஆண்டுக்கு ஒரு படங்களை இயக்கி வந்த இவர், நடிகராக பிஸியானார்.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு 1999இல் இயக்கிய ஹவுஸ் புஃல் படத்துக்காக இரண்டாவது முறையாக சிறந்த படம் தேசிய விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த ஜூரி விருதை வென்றார்.

ஒரு திரையரங்கில் நடக்கும் படமாக இருந்த ஹவுஸ் புஃல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர் இவன், குடைக்குள் மழை, பச்சை குதிரை, வித்தகன், கதை திரைக்கதை வசனம இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல், டீன்ஸ் என இவரது படங்கள் வித்தியாச கதைகளாகவும், கமர்ஷியல் கதைகளின் கலவையாகவும் இருந்துள்ளன.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் ஒற்றை ஆளாக சோலோ ஆக்டிங் செய்த பார்த்திபன், சிறந்த படத்துக்கான தேசிய விருது ஜூரி விருதை வென்றார்.

நடிகராக கலக்கிய பார்த்திபன்

தனது இயக்கத்தில் மட்டுமல்லாமல், பிற இயக்குநர்களின் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து, நடிப்பிலும் முத்திரை பதித்து வந்தார் பார்த்திபன். 1997இல் வெளியான பாரதி கண்ணம்மா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை வென்றார். அந்த ஆண்டில் மட்டும் பார்த்திபன் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி அனைத்தும் வரவேற்பை பெற்றன.

இயக்கம், நடிப்பு என இரண்டிலும் பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த பார்த்திபன் 2010இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனாக தோன்றி நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிலிம்பேர் விருதையும் வென்றார்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கும் இவர், சுழல் என்ற அமேசான் ப்ரைம் வெப் சீரிஸிலும் நடித்து முத்திரை பதித்துள்ளார். பாடகர், பாடலாசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் பல படங்களில் கதை சொல்பவராகவும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

நானும் ரெளடிதான், மாசு என்கிற மாசிலாமணி, துக்ளக் தர்பார் போன்ற சில படங்களில் வில்லத்தனமான வேடங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன்

கிறுக்கல்கள் என்ற தமிழ் கவிதை தொகுப்பை பார்த்திபன் எழுதியுள்ளார். இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன், 15க்கும் மேற்பட்ட படங்களில் இயக்கியுள்ளார்.

எதிலும் வித்தியாசத்தை விரும்புவராகவும், விருதுகளின் மன்னனாகவும், பன்முக கலைஞனாக ஜொலித்து வரும் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.