Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூனின் ஜாமீனில் தளர்வுகள்.. நிம்மதி பெருமூச்சில் அல்லு..
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூனின் ஜாமீனில் சில தளர்வுகளை அளித்து நம்மபள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி தனது நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவை ரசிகர்களுடன் பார்க்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அல்லு அர்ஜூன் சந்தியா தியேட்டருக்கு வந்த போது, அவரைக் காண ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு முன்னேறினர்.
புஷ்பா 2 மரணம்
அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது மகன் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மாபெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
அல்லு அர்ஜூன் கைது
இதையடுத்து, சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜூன் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் கடந்த டிசம்பர் 13ம் தேதி அவரது ஜூபிலி ஹில்ஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் அடுத்த நாள் ஜாமீனில் வெளிவந்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தது நம்பள்ளி நீதிமன்றம்.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில், அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் ஜாமீனில் சில தளர்வுகளை விதிக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
அந்த உத்தரவின் படி, அல்லுஅர்ஜூன் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று நம்பள்ளி நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததால் இந்த விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அல்லு அர்ஜுன், தியேட்டர் நிர்வாகம் மற்றும் சில பாதுகாப்புப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சங்கர் மற்றும் நவீன் எர்னேனி ஆகியோரை விசாரணையின் போது காவலில் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபலங்கள் ஆறுதல்
முன்னதாக அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு தெலுங்கு திரையுலகில் பலரும் அவரைக் காண வீட்டிற்கு குவிந்தனர். புஷ்பா பட இயக்குநர் சுகுமார், நடிகர் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, சிரஞ்சீவி மனைவி என பல முக்கிய சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜூன் வீட்டில் குவிந்தனர்
தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
விளக்கமளித்த அல்லு அர்ஜூன்
இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன்.
அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம் என அல்லு அர்ஜூன் விளக்கமளித்தார்.
டாபிக்ஸ்