'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்

'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்

Malavica Natarajan HT Tamil
Published Apr 29, 2025 08:28 PM IST

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதைப் பெற்ற பின் அளித்த பேட்டியில் தன் மனைவி ஷாலினி குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.

'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்
'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' -பத்ம பூஷண் அஜித் குமார்

பட்டங்களை விரும்பியதில்லை

அப்போது, தல, சூப்பர் ஸ்டார் பட்டங்களை அஜித் விரும்பாதது தான் அஜித்தின் இந்த உயர்வுக்கு காரணம் என்ற பேச்சு அடிபடுகிறதே அது உண்மையா என நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அஜித் குமார் நான் எப்போதும் பட்டங்களை விரும்புவதில்லை. என் பேருக்கு முன்னாள் எதையும் சேர்த்துக் கொள்ளவும் நான் விரும்புவதில்லை. என்னை அஜித், அஜித் குமார் அல்லது ஏகே என கூப்பிடுவதையே நான் எப்போதும் விரும்புவேன். இது ஒரு வேலை. நான் நடிகன். நான் நடித்ததுக்கு சம்பளம் வாங்குகிறேன்.

எளிமையாக வாழ விரும்புகிறேன்

நீங்கள் செய்த வேலைக்கு கிடைக்கும் புகழ், அங்கீகாரமாக இதை சொல்கிறார்கள். எனக்கு என் வேலை மிகவும் பிடிக்கும். கடந்த 33 வருடங்களாக இந்த பணியை நேசித்து செய்து வருகிறேன். என்னால் முடிந்த வரை என் வாழ்க்கையை மிகவும் எளிமையாக கொண்டு செல்லவே நான் விரும்புகிறேன் என்றார்.

என்னை தாழ்ந்துபோக விட்டதில்லை

மேலும் மனைவி ஷாலினி பற்றி குறிப்பிடுகையில், நான் இங்கே சில விஷயங்களை சரிசெய்ய வரவில்லை. என் மனைவி மிகவும் பிரபலமானவர். அவரை விரும்பும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில சமயம் நான் எடுத்த எத்தனையோ முடிவு தவறாக முடிந்திருக்கிறது. ஆனால் ஷாலினி எப்போதும் என் பக்கத்தில் தான் நின்றார். அவர் என்னை எப்போதும் தாழ்ந்து போக விட்டது இல்லை . என்னுடைய அனைத்து கஷ்டமான சூழலிலும் என் உடனேயே இருந்திருக்கிறார். அதனால், நான் என்ன சாதனை செய்தாலும் அதில் அவருக்கான மரியாதையை அவர் பெறவேண்டும்.

கொண்டாட்டத்தில் அஜித் குமார்

நடிகர் அஜித் அண்மையில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து தன்னுடைய 25 வது திருமண நாளை கொண்டாடினார். சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தய போட்டியிலும் அவரது அணி 2 வது இடத்தை பிடித்தது. அவரது பிறந்தநாள் எதிர்வரும் மே 1ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அவர் நேற்று மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினை கைகளில் ஏந்தினார்.

பத்ம விருதுகள்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஆண்டு தோறும் இந்த விருதுகள் கொடுக்கப்படுகிறது.

பல்துறை கலைஞர்களுக்கு விருது

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், கடந்த ஜன 25ம் தேதி 2025 ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதே போல கிரிக்கெட் வீரர் அஸ்வின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் அஜித் குமாருடன் சேர்ந்து மற்ற கலைஞர்களும் விருதினை பெற்றுக் கொண்டனர்.