Ajith Kumar: ‘ அஜித் குலுங்கி குலுங்கி சிரிச்ச போது.. ஒற்றை விவரிப்பி எப்படி அவரை’ -அயலுறவு அதிகாரி நெகிழ்ச்சி!
Ajith Kumar: நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள். -அயலுறவு அதிகாரி நெகிழ்ச்சி!
விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடிந்து கொண்டிருந்த போது, அந்தப்படத்தின் நாயகன் அஜித்குமார் மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆரவ் உள்ளிட்டோர் இந்திய அயலுறவுப்பணி அதிகாரியான பயணிதரனை சந்தித்து உரையாடி இருக்கின்றனர். அது தொடர்பான அனுபவங்களை பயணிதரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.
நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்!
இனிய மாலை…
ஒரு கைவிரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் அஜித்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கிவிடமுடியாது என்பது, எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்துகொள்ள, உணவும், சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.
எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின்போது, அஜித் உட்பட எல்லோரும் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது.
வாழ்வின் பல்வேறு கட்டங்களில்..
ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்துபார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும், மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.
அஜித் விடைபெற்றுச் சென்றபிறகு பல சிந்தனைகள்.
மனிதர்கள் ஏன் பல விஷயங்களைச் செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?
என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.
ஒரு விஷயத்தை முயன்றுபார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக, அஜர் பைஜானில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிந்து விட்டதாக, படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தில் இருந்து சில போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தத்திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கினார். பொங்கல் பரிசாக வெளியான இந்தத்திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது.
உள்ளே வந்த மகிழ்திருமேனி
இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்