நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? அருண் விஜய் சொல்வது என்ன.. பிறந்தநாள் அன்று அவர் கொடுத்த நச் பேட்டி!
நடிகர் அஜித்துக்கும் எனக்கும் போட்டியா? தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்று அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வணங்கான்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘வணங்கான்’ திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது எனப் படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜயின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
பாலா சாருக்கு நன்றி
அதில், “என்னுடைய பிறந்தநாள் அன்று வணங்கான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது எனக்கு பெரிய பரிசாக நான் நினைக்கிறேன். வணங்கான் என்னுடைய கெரியரில் மிக முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலா சாருக்கு நன்றி. இந்த படத்தில் என்னை ஒரு நடிகராக வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வணங்கான் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும்” என சொல்கிறார்.
பிறகு செய்தியாளர் ஒருவர் பாலா படம் என்றாலே மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று சொல்வார்கள் உங்களுக்கு அப்படி இந்த படத்தில் இல்லையா, கஷ்டப்படுத்தவே இல்லையா என கேள்வி எழுப்புகிறார்.