RaviKChandran Son: சிட்டிசன், பாய்ஸ் பட கேமராமேன் மகன் வீட்டு திருமணம் - புடை சூழ வந்து வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் சென்னையில் விமர்சையாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன். அதன்பின்னர் மணிரத்னம், ஷங்கர் உட்பட பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானார். இவரின் மகனான சந்தான கிருஷ்ணனுக்கு இன்று திருமணம் நடந்திருக்கிறது.
ஆம், ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி மிஷ்ரா தம்பதியரின் மகள் மனினி மிஷ்ராவின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் இன்று காலை 8.15 மணிக்கு நடைபெற்றது.
மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
குறிப்பாக மணிரத்னம்-சுஹாசினி, ராஜீவ் மேனன், ரவிவர்மன், சிவகுமார், கார்த்தி சிவகுமார், ஜீவா, ஆர் டி ராஜசேகர், ஸ்ரீகர் பிரசாத், சுதா கொங்கரா, இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், சாபு சிரில், ஏ ஆர் முருகதாஸ், மேனகா சுரேஷ், தயாரிப்பாளர் தாணு, காளிதாஸ் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர், சத்யஜோதி தியாகராஜன், சுரேஷ் பாலாஜி, பிரியதர்ஷன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
டாபிக்ஸ்