கழுத்தை நெறித்த கடன்.. கங்குவாவை கசக்கி பிழிந்த இரு வழக்குகள்.. நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன? - நாளை படம் வெளியாகுமா?
இரு வழக்குகளில் சிக்கி இருந்த கங்குவா திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் வெளியே கொண்டு வர நீதிமன்றத்தில் நடத்திய பண பேர விபரங்களை இங்கே பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தை வெளியிடக்கூடாது என்று இந்தப்படத்தின் மீது இரு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதன் விபரங்களை விரிவாக இங்கே பார்க்கலாம்.
இரு வழக்குகள்
கங்குவா படத்துக்கு பைனான்ஸ் செய்த அர்ஜுன் லால் என்பவர் உயிரிழந்து விட்டார். அவரது சொத்துக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவரை திவாலானவர் என்று நீதிமன்றம் அறிவித்து, அவரிடம் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூலிக்கும் பணிகளை நீதிமன்ற சொத்தாட்சியார் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், ஸ்டியோ கிரீன் நிறுவனம் வாங்கிய கடனான (வட்டியோடு சேர்த்து) 20 கோடியை இன்றுக்குள் (13 -11-2024) செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதனால் கங்குவா படம் வெளியாவதில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், 6 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 969 ரூபாய் சொத்தாட்சியருக்கு செலுத்தப்பட்டு. கங்குவா படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டுமென மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை சொத்தாட்சியர் ஏற்க மறுத்தார்.
இதைத் தொடர்ந்து மேலும் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை டிசம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும், தற்போது படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் ஸ்டுடியோ கிரீன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் டிசம்பர் 11ஆம் தேதிக்குள் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அத்துடன், 3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடர்பாக நாளை மாலைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இந்தி உரிமைக்காக பெற்ற ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து வரும் 11 கோடி ரூபாயை திருப்பித்தராமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது என்று பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடுத்த வழக்கும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தலைமைப் பதிவாளர் பெயரில் இரு வங்கி காசோலைகள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து படத்தை வெளியிட ஆட்சேபம் இல்லை என பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இரு வரைவோலைகளையும் வங்கியில் செலுத்தி பணமாக்கி, அதனை நிரந்தர வைப்பீடாக வைக்க வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டார். இதன் மூலம் இரு வழக்குகளில் இருந்து தப்பித்த கங்குவா நாளை சுமூகமாக வெளியாக இருக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்