‘25 நாளில் 1760 கோடி.. டங்கல் மொத்த வசூல் 2070 கோடி..’-தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்; முன்வந்து வாழ்த்து சொன்ன அமீர்கான்!
புஷ்பா 2: தி ரூல் வெளியான 25 நாட்களில் ரூ.1760 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு அமீர்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2: தி ரூல் படக்குழுவினருக்கு நடிகர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2
இது குறித்து எக்ஸ் தளத்தில் ஏகேபி நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘புஷ்பா 2: படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஏகேபி நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துகள். தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்; அல்லு அர்ஜூன், சுகுமார், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோருக்கு எங்களுடைய பேரன்பு!
அல்லு அர்ஜுன், புஷ்பா 2 தயாரிப்பாளர்கள் எதிர்வினை
இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன், ‘உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஏ.கே.பியின் முழு குழுவினருக்கும் என்னுடைய வணக்கங்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், ‘புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றி இந்திய சினிமாவின் உண்மையான ஆற்றலை பிரதிபலிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.
புஷ்பா 2 பற்றி: தி ரூல்
புஷ்பா 2; தி ரூல் அதன் பாக்ஸ் ஆபிஸில், 25 நாட்களில் 1760 கோடி வசூல் செய்துள்ளதாக அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார்; இதில் அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்த இப்படம் டிசம்பர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது.
டங்கல்
கடந்த 2016ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டங்கல். மல்யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தை அமீர் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா தயாரித்தது.
இந்தப்படத்தில் பாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா, ஜைரா வாசிம், மறைந்த சுஹானி பட்நாகர், சாக்ஷி தன்வார் மற்றும் அபர்சக்தி குரானா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, டங்கல் திரைப்படம் உலகளவில், 2070 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது!
முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் அங்கு வந்ததால் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த நெரிசலில், ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்தார். இதனையடுத்து இது தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார்.
சினிமா என்பது ஒரு குழு முயற்சி.
குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சினிமா என்பது ஒரு குழு முயற்சி. எல்லோரும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மட்டுமே தன்ந்தனியாக குற்றவாளியாக்கப்பட்டுள்ளார், இது சரியல்ல என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், ‘அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றபோது, படத்தை திரையிட்ட தியேட்டர் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இந்த விவகாரம் குறித்து ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவர் உட்கார்ந்தவுடன், விஷயத்தை தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்; இது அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டத்தின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் அதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
காவல்துறையை குறை கூறவில்லை
இதுபோன்ற சம்பவங்களில், நான் காவல்துறையை குறை கூறவில்லை, ஏனென்றால் அவர்களின் முன்னுரிமை பாதுகாப்பு. விஜயநகரம் மாவட்டத்தில் நான் சென்ற சமீபத்திய சுற்றுப்பயணத்தின் போது கூட, காவல்துறையினர் என்னை முன்னணியில் இருக்கச் சொன்னார்கள்.
அல்லு அர்ஜுன் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். சிரஞ்சீவி (அவரது மூத்த சகோதரர்) கூட தியேட்டருக்குச் செல்வார்; ஆனால் தனியாகவும் மாறுவேடத்திலும் செல்வார். நானும் அப்படி சென்று இருக்கிறேன்’ என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘திரைப்பட நட்சத்திரங்கள் பாராட்டுக்கும் விருதுகளுக்கும் தகுதியானவர்கள், அதை புறக்கணிக்க முடியாது. தன்னைத் தேடி வந்திருக்கும் ரசிகர்களுக்கு அந்த நடிகர் உரிய மரியாதையை கொடுக்காமல் இருக்கும் போது, அவரைப்பற்றி ரசிகர்கள் வேறு மாதிரி நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன்.
இந்த சம்பவம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டுகிறேன். குறிப்பாக புஷ்பா 2 படத்தின் போது ரேவந்த் ரெட்டி திரையுலகிற்கு முழு ஆதரவு அளித்தார். டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிப்பது, தொழில்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்துள்ளது," என்றார். அல்லு அர்ஜுன், ஒரு நிகழ்ச்சியில் தனது பெயரை உச்சரிக்க மறந்துவிட்டார் என்பதற்காக ரேவந்த் ரெட்டி அவர் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டார் என்று கூறுவது தவறு. அல்லு அர்ஜூனுக்கு பதிலாக அந்த இடத்தில் ரேவந்த் ரெட்டி இருந்திருந்தால் கூட, அல்லு அர்ஜுன் போல அவரும் கைது செய்யப்பட்டிருப்பார்.’ என்று பேசினார்.
டாபிக்ஸ்