Actor Vijay: ’ராகுல் காந்திக்கு பிரச்சாரம் செய்யும் விஜய்?’ வலைத்தளங்களில் வைரல் ஆகும் வீடியோ
”பவர் ஆஃப் காங்கிரஸ் என்ற பெயரில் விஜய் பேசும் போது அவர் பேசுவது ஹிந்தி சப் டைட்டில்களை கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது”
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நடிகர் விஜய் பரப்புரை செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவுசெய்ய, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். விஜய் மக்கள் இயக்கப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எனத் தெரிகிறது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளதாகத் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சி பெயர், கொடி உள்ளிட்ட முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"அங்கீகரிக்கப்பட்ட சட்டவிதிகளுடன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முழுமூச்சாக’’ பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வருகிறார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் நியாய் யாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் பேசும் வசனத்துடன் ராகுல் காந்தியின் வீடியோவை இணைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பவர் ஆஃப் காங்கிரஸ் என்ற பெயரில் விஜய் பேசும் போது அவர் பேசுவது ஹிந்தி சப் டைட்டில்களை கொண்டு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.