HBD VijaySethupathi: பட்டிக்காட்டான் முதல் பாலிவுட் ஹீரோ வரை - விஜய்சேதுபதி என்னும் மக்கள் செல்வனின் கதை!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஜய்சேதுபதி, பாலிவுட்டில் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியாக மேரி கிறிஸ்துமஸ் என்னும் படத்தில் நடிப்பது வரை வளர்ந்து இருக்கிறார். இன்றுடன் தனது 46ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் விஜய் சேதுபதி குறித்து அறிந்துகொள்ள எண்ணற்ற விஷயங்கள் உள்ளன.
யார் இந்த விஜய் சேதுபதி? தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் 1978ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் நாள் பிறந்தவர். அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, விஜய் சேதுபதியின் குடும்பம் சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்டது. பின் தனது படிப்பை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர் மேல்நிலைப் பள்ளியிலும், லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். படிப்பு மற்றும் விளையாட்டு என இருதுறைகளிலும் விஜய்சேதுபதி சுமாராக படிக்கும் மாணவர் என பல நேரங்களில் தன் பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார். பின் சென்னை - துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில் பி.காம் முடித்தார். பின்,குடும்பத்தில் இருந்த கடனை அடைக்க துபாய்க்கு சென்று, அங்கு ஒரு அக்கவுண்டண்ட் ஆக பணிபுரிந்தார்.
அங்கு பணிசெய்யும்போது தனது மனைவி ஜெஸ்ஸியுடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டு, 2003ல் இந்தியா திரும்பியதும் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.