31 Years Of PonVilangu: அண்ணன் -தங்கைப் பாசம்.. இடையில் வரும் காதல்.. அதனால் குடும்பம் என்ன ஆகிறது என்பதுதான் கதை!
31 Years Of PonVilangu: பொன்விலங்கு திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

31 Years Of PonVilangu: 1993ஆம் ஆண்டு ரகுமான், ரஞ்சித், சிவரஞ்சினி, ரம்யா கிருஷ்ணன் ஆகிய நால்வர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், பொன் விலங்கு. இப்படத்தை ஆர்.கே. செல்வமணி தயாரித்திருந்தார். இசையினை இசைஞானி இளையராஜா செய்திருந்தார். இப்படத்துக்குண்டான கதை, வசனத்தை ஈ.ராமதாஸ் செய்ய, இயக்கத்தை அறிமுக இயக்குநர் கே.எஸ். ராஜ்குமார் செய்துள்ளார்.
பொன் விலங்கு திரைப்படத்தின் கதை என்ன?: ஒரு கிராமத்தில் தாய், தந்தையில்லாத அண்ணன், தங்கை வாழ்ந்து வருகின்றனர். அண்ணனின் பெயர் முத்து, தங்கையின் பெயர் மல்லிகா. முத்து, கொஞ்சம் பயங்கர ஆக்ரோஷமான ஆள். முன் கோபி. தவறு செய்பவர்கள் மீது கை வைக்க தயங்க மாட்டான். முத்துவுக்கு காவலர்கள் என்றாலே பிடிக்காது.
இதனிடையே முத்துவை, அவர் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த ராணி என்கிற பெண் ஒரு தலையாக காதலிக்கிறாள். ஆனால், முத்து, ராணியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இது ஒரு டிராக்கில் போக, முத்துவின் தங்கை மல்லிகாவுக்கு, காவல் ஆய்வாளர் ரகுவின் நேர்மை பிடித்துப்போக, காதலிக்கத் தொடங்குகிறார். அதன்பின், காவல் ஆய்வாளர் ரகுவும் மல்லிகாவும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். இதையறிந்த முத்து, தனது தங்கையைக் கண்டிக்கிறார்.
உடனே, ராணி அவ்விடத்துக்கு வந்து முத்துவை அழைத்துச் சென்று, காவல் ஆய்வாளர் ரகுவை வெறுப்பதற்கான காரணம் என்ன எனக் கேள்விக் கேட்டார்.
அப்போது தன் ஃபிளாஷ்பேக்கை சொல்கிறார். முத்துவின் தந்தை வியாபாரம் செய்ய, முன் பின் தெரியாதவரிடத்தில் ஒரு சைக்கிளை விலைக்கு வாங்குகிறார். மறுநாள் அவரது வீட்டுக்கு வரும் போலீஸ், இது கலெக்டர் வீட்டிலிருந்த சைக்கிள் எனவும், அதனை திருடியதற்காக கைது செய்வதாகவும் கூறி அழைத்துச் செல்கின்றனர். மேலும், முத்துவின் அம்மாவை, காவல் அலுவலர்கள் சிலர் வன்புணர்வு செய்து கொல்கின்றனர். இதனால் மனம் நொந்துபோகும் முத்துவின் தந்தை தன்னுயிரை தானே போக்கிக்கொள்கிறார். இதனால் இயல்பிலேயே முத்துவுக்கு காவல்துறையில் இருப்பவர்கள் மீது வெறுப்பு வந்துவிடுகிறது. அதன்பின், சிறுமியாக இருக்கும் தங்கை மல்லிகாவை , கஷ்டப்பட்டு பல்வேறு வேலைகளுக்குச் சென்று ஆளாக்குகிறான், முத்து.
இந்த பின் கதையை அறிந்த மல்லிகா, தன் காதலை தியாகம் செய்ய முயல்கிறாள். இறுதியாக ராணி, ரகு மற்றும் மல்லிகாவை சேர்த்து வைக்குமாறு முத்துவிடம் கெஞ்சுகிறார். அதற்கு, முத்து ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது, ரகு தன் காவல் துறை பணியில் இருந்து ராஜினாமா செய்தால், ரகுவை தன் தங்கைக்குக் கட்டிக்கொடுப்பதாக சொல்கிறார், முத்து. பின்னர் ரகுவுக்குத் திருமணம் நடந்ததா, அதுவும் குறிப்பாக மல்லிகாவுடன் திருமணம் நடந்ததா என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.
இப்படத்தில் ரகுவாக ரகுமானும், முத்துவாக ரஞ்சித்தும் நடித்திருந்தனர். மல்லிகாவாக சிவரஞ்சனியும், ராணியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர். தவிர, ரகுவின் தந்தையாக கிருஷ்ணமூர்த்தியும், ரகுவின் தாயாக யுவஸ்ரீயும் நடித்துள்ளனர். மேலும், லூசு மோகன், போண்டா மணி, சிங்கமுத்து ஆகியோர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை இசையமைப்பாளர் இளையராஜா செய்திருந்தார். பாடல் ஆசிரியர்கள் வாலி, முத்துலிங்கம், காமகோடியன் ஆகியோர் இப்படத்துக்குப் பாடல் எழுதியிருந்தனர்.
ஒரு கோலக்கிளி, சந்தனக் கும்பா, ஊட்டி மலை ஆகியப் பாடல்கள் அன்றைய காலத்தில் முணுமுணுக்கப்பட்டது.

டாபிக்ஸ்