9 Years of Isai: இசையமைப்பாளர்களிடையே சண்டை.. நடுவில் காதல்.. எஸ்.ஜே.சூர்யாவின் கம்பேக் திரைப்படம்
இசை என்னும்' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
'இசை' படத்தின் மூலம் இயக்குநர், நடிகர் என்னும் அவதாரத்தைத் தாண்டி, இசையமைப்பாளராக பரிணமித்தார், நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இது ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யாவின் கம்பேக் மூவியாகும். 2004ஆம் ஆண்டு 'நியூ' படத்திற்குப் பின் இப்படம் அறிவிக்கப்பட்டாலும் இப்படம் தயாராகி வெளியானது என்னவோ, 2015ஆம் ஆண்டாகும். இப்படம் கடந்த 2015 ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸாகியிருப்பதால், 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
IMDb ரேட்டிங்கில் 10க்கு 6.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மொத்தமாக மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இசை படத்தின் கதை என்ன? இசை படத்தின் கதைப்படி வெற்றிச்செல்வன்(சத்யராஜ்) தமிழ் சினிமாவில் பெரும் புகழைப்பெற்ற இசையமைப்பாளர் ஆவார். அவரிடம் உதவியாளராக இருந்தவர் ஏ.கே.சிவா(எஸ்.ஜே.சூர்யா). அவரிடம் இருந்து வேலையைக் கற்றுக்கொண்ட ஏ.கே. சிவா முதன்முதலாக சிறுபடத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இவரது புதுவிதமான இசை மற்றும் இசைக்கருவிகளை உபயோகிக்கும் முறை அனைத்து இசை ரசிகர்களாலும் பாராட்டப்பெறுகிறது. ஒரு கட்டத்தில் வெற்றிச்செல்வனை தாண்டி ஏ.கே.சிவா. உச்ச இசையமைப்பாளராக உருவெடுக்கிறார். இது அவருக்கு வெற்றிச்செல்வனுக்கு எரிச்சலை அளிக்கிறது. இதனிடையே ஏ.கே.சிவா ஜெனி(சுலக்னா பனிகிரஹி) என்னும் பெண்ணிடம் காதலில் விழுகிறார். பின் அவரைத் திருமணமும் செய்துகொள்கிறார்.
ஏ.கே.சிவாவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இசையமைப்பாளர் வெற்றிச்செல்வன், அவனை உளவியல் ரீதியாக துன்புறுத்தப் பார்க்கிறார். ஏ.கே.சிவாவின் சமையலர், மேனேஜர், ஓட்டுநர், செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரையும் பணத்தால் தன் வசப்படுத்தும் வெற்றிச்செல்வன்,ஏ.கே.சிவாவை மறைமுகமாக துன்புறுத்தச் சொல்கிறார். ஏனெனில், ஒரு இசையமைப்பாளருக்கு நல்ல மனநிலை வாய்த்தால் தான் நல்ல இசை கிடைக்கும். அதை உருக்குலைத்துவிட்டால் ஏ.கே.சிவா சரியாக இசையமைக்கமாட்டார். பெயர் கெடும். அந்த வாய்ப்பில் மீண்டும் தன் இடத்தைப் பிடிக்கலாம் என மனக்கணக்குப்போட்டு அதை செயல்படுத்த முயற்சிக்கிறார், வெற்றிச் செல்வன். அதற்கு உதாரணமாக சில காட்சிகள் இப்படத்தில் வைக்கப்பட்டுள்ளன. நெருக்கடி மிகுந்த சாலையில் ஏ.கே.சிவாவின் காரை இயக்கும் ஓட்டுநர், திடீரென அவரை விட்டுவிட்டு வெளியேறுகிறார். அப்போது எழுப்பப்படும் ஒலியால் ஏ.கே. சிவா மனதளவில் தொந்தரவுக்குள்ளாகிறார். சிவாவின் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, அவரது சமையலரின்(வெற்றிச்செல்வனின் ஆதரவாளர்) தவறான கைப்பக்குவத்தால் கரு கலைகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்படுகிறார், ஏ.கே.சிவா.
இதுபோன்ற காரணங்களால் ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் கோபப்படுகிறார்,ஏ.கே.சிவா. இதனால் மெல்ல ஏ.கே.சிவாவுக்கு படவாய்ப்புகள் குறைகிறது. இதனால் வெற்றிச்செல்வன் மீண்டும் படவாய்ப்புகளைப் பெறுகிறார். இதனால் உள்ளூற சந்தோஷப்படுகிறார், வெற்றிச்செல்வன்.
திடீர் திருப்பமாக,ஏ.கே.சிவாவின் மனைவி ஜெனி, வெற்றிச்செல்வனின் மகள் என்றும்; அவரது மார்க்கெட்டை சீர்குலைக்க வெற்றிச்செல்வனால் அனுப்பப்பட்ட துருப்புச்சீட்டு எனவும் ஏ.கே.சிவாவுக்கு தெரிகிறது. இதனால் கடுப்பான ஏ.கே.சிவா அவரை கொல்லமுயற்சிக்கிறார். இறுதியில் தான் உண்மையாக காதலித்ததாக சொல்கிறார், ஜெனி. மகளைப்பற்றி அறிந்த வெற்றிச்செல்வன் தானே களத்தில் புகுந்து, சிவாவை கத்தியால் குத்துகிறார்.
அப்போதுதான் திடீர் ட்விஸ்ட்டாக, சிவா திடீரென்று கனவில் இருந்து எழுகிறார். அந்தக் காட்சியில் மனைவி மது(நிலா) கடந்த 10 வருடமாக படம் இயக்காமல் இருக்கிறீர்கள்; ஆனால் உங்கள் ரசிகர்கள் தாங்கள் எப்போது படம் எடுக்கப்போகிறீர்கள் எனக் கேட்பதாக கூறுகிறார். அப்போது தனக்கு கனவில் ஒரு புதிய கதை கிடைத்துவிட்டதாக கூறுகிறார். அப்படியே படம் முடிவடைகிறது.
இப்படம் வெளியானபோது இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இடையே இருந்த பனிப்போரை காட்சிப்படுத்தியுள்ளது எனப்பலரும் எழுதினர். 8 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் 300 திரையரங்குகளில் வெளியாகி 28 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளார், எஸ்.ஜே.சூர்யா. அவர் சிரித்துக்கொண்டே அதைத்தாங்களே செய்யலாமே எனச் சொல்லி மறுக்கவே, அதன்பின், அதற்காக தனியாக இசையினைப் பயின்று இசையமைத்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் டிவியில் இப்படத்தைப் போடும்போது எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்காகவே இப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்