22 Years Of Varushamellam Vasantham: முறைப்பெண் மீது வரும் காதல் ஒருவனை பொறுப்பு ஆக்கும் கதை.. பாடல்கள் வேறலெவல் ஹிட்!
22 Years Of Varushamellam Vasantham: வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அது தொடர்பான சிறப்புக் கட்டுரை.
22 Years Of Varushamellam Vasantham: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மற்றும் குணால், புதுமுகம் அனிதா ஹாசநந்தனி ஆகியோர் நடித்து மே, 3, 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், ‘’வருஷமெல்லாம் வசந்தம்''. முக்கோண காதல் திரைப்படமான, இது வெளியான புதிதில் அதன் பாடல்கள் மற்றும் ஜனரஞ்சகமான கதைப்போக்கால் பலரிடம் ஈர்க்கப்பட்டது.இப்படத்தில் பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இப்படத்தினை ரவிசங்கர் எழுதி இயக்க, ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையினை இசையமைப்பாளர் சிற்பி செய்திருந்தார். அது தற்போதுவரை பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேலையில்லாத இளைஞரான ராஜாவும், நன்கு படித்த அவரது சகோதரர் ரமேஷும், தூரத்து உறவினரான லதா என்கிற பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறார்கள். அவளுடைய காதலை வெல்ல இரு சகோதரர்களும் போட்டி போடுகிறார்கள். இதில் யார் வென்றார் என்பதே படத்தின் கதைக்குறிப்பு எனலாம்.
வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் கதை என்ன?
தென்காசியைச் சார்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர், பரமசிவம். இவர்களுக்கு இரண்டு பேரன்கள். மூத்தவர் ராஜா, இளையவர் ரமேஷ். ராஜா, வேலைக்கு எதற்கும் செல்லாமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளையபேரன் ரமேஷ், டெல்லியில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.
பரமசிவத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் மகள், அவரது கணவர் மற்றும் மகளுடன் கொல்கத்தாவில் இருந்து, பரமசிவத்தின் வீட்டிற்கு விடுமுறைக்கு வருகின்றனர்.
ராஜாவுக்கு லதாவைப் பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. அவளுடன் முதலில் நட்பாக முயற்சிக்கிறார். இதற்கிடையே இளையவர் ரமேஷூம் டெல்லியில் இருந்து ஊருக்கு வருகிறார். ரமேஷூக்கும் லதா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
இதை எப்படியோ அறியும், ராஜா, ரமேஷை விட சிறந்தவனாக இருந்தால்தான், தனக்கு லதா கிடைப்பாள் என்பதை உணர்ந்து நண்பர்களின் அறிவுரையை ஏற்று கலெக்டர் வேலையில் சேர முயற்சிக்கிறார். பின், கல்வியறிவு இல்லாததால் அவரது முயற்சி வீண் ஆகிறது. பின், ஆங்கிலம் கற்க முயல்கிறார். அதிலும் சொதப்பிடுவிகிறார்.
லதாவின் மீதான ராஜாவின் ஒரு தலைக் காதலை உணர்ந்துகொண்ட, தம்பி ரமேஷ், அதைக் கெடுக்க முயற்சி செய்கிறார். லதாவுக்கு ஒவ்வாமை உள்ள சப்போட்டோ, அவளுக்கு மிகப் பிடிக்கும் என ராஜாவிடம் சொல்கிறார், ரமேஷ். இதனை அறிந்த ராஜா, சப்போட்டோ பழக்கூடையை லதாவுக்குப் பரிசளிக்கிறார். இதனால் லதாவுக்கும் ராஜாவைக் கண்டால் எரிச்சல் ஆகிறது.
அதன்பின், ஒரு நாள் சமாதானம் ஆகின்றனர், லதாவும் ராஜாவும். அப்போது பல பரிசுகளை விட, ஒருவர் கடினமாக உழைத்து கிடைக்கும் பூ சிறந்தது என்கின்றார், லதா.
இதைப் புரிந்துகொண்ட ராஜா, ஒரு உலோகத் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்து கஷ்டப்படுகிறார். ராஜாவின் மன மாற்றத்தைக் கொண்டு, அவனை எப்போதுமே திட்டிக்கொண்டு இருக்கும் அவரது பரமசிவம் தாத்தா சாந்தம் ஆகின்றார்.
ராஜாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருப்பவர், லதா என்பதை அறிந்துகொள்ளும் தாத்தா பரமசிவம், இருவருக்கும் இடையில் திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிடுகிறார்.
இதைக்கேட்ட லதா அதிர்ச்சியாகிறார். ஆனால், ஒருதலையாக லதாவை காதலித்தாலும் தான் வேறு ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், தன்னால் மீளமுடியவில்லை என்றும், கூறி அத்திருமண அறிவிப்பை மறுக்கிறார், ராஜா. பின், ராஜாவின் தம்பி ரமேஷூக்கும் லதாவுக்கும் திருமணம் என்னும் அறிவிப்பினை வெளியிடுகிறார், தாத்தா பரமசிவம். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
பின் ராஜாவை சந்திக்கும் ரமேஷ், ஏன் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை எனக் கேட்கிறார். அப்போது, லதா உன்னைக் காதலிக்கிறாள் என முன்பே என்னிடம் வந்து சொன்னதாகக் கூறுகிறார், ராஜா. மேலும், காதல் இரண்டு தரப்பில் இருந்தும் வரவேண்டும் எனக் கூறுகிறார். இதனால் தன்னுடைய முந்தையகால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறார், ரமேஷ். பின் இருவரும் பகைமை மறந்து ஒன்றாகின்றனர். இதைக் கேட்டு ஆசுவாசம் ஆகிறார், தாத்தா பரமசிவம். அதன்பின், பரமசிவம் ராஜாவின் மேல் பரிவுடன் நடந்துகொள்கிறார்.
தான் காதலித்த பெண் கிடைக்காதபோதிலும், தன்னை திட்டிக்கொண்டே இருந்த தாத்தாவின் அன்பு கிடைப்பதை நினைத்து மகிழ்கிறார், ராஜா.
இப்படத்தில் ராஜாவாக மனோஜ் பாரதியும், ரமேஷாக குணாலும், தாத்தா பரமசிவமாக எம்.என்.நம்பியாரும் நடித்துள்ளனர். லதாவாக அறிமுக நடிகை அனிதா ஹாசநந்தனி நடித்திருந்தார். படத்திற்கு இசை மற்றும் பாடல்கள் பெரிய பிளஸ். அதைச் சிறப்பாக செய்திருந்தார், இசையமைப்பாளர் சிற்பி.
படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனாலும்; இன்று டிவியில் போட்டாலும், இப்படத்துக்குப் பலர் ரசிப்பர் என்பது உறுதி!
டாபிக்ஸ்