18 Years Of Kai Vandha Kalai: ஊதாரியை உழைப்பவனாக மாற்றும் காதல்.. இருவீட்டார் சம்மதத்தில் இணைந்தால் ‘கை வந்த கலை’
18 Years Of Kai Vandha Kalai: ஊதாரியை உழைப்பவனாக மாற்றும் காதல் ஆனது, இருவீட்டார் சம்மதத்துடன் இணைந்தால், அது ’கை வந்த கலை’ திரைப்படம். இப்படம் வெளியாகி, 18ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.

18 Years Of Kai Vandha Kalai: ’’ஆண்பாவம்’’ என்னும் வெகுஜன திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பலரை ரசிக்க வைத்த இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், தனது மகன் பிருதிவியை கதாநாயகனாக வைத்து அறிமுகம் செய்த படம் தான், கை வந்த கலை. இது ஆண் பாவம் படத்தின் தொடர்ச்சி என சொல்லப்பட்டது. இப்படத்தில் பிருதிவி ராஜன், ஸ்ருதி, பாண்டியராஜன், மணி வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை ஜி.வி. ஃபிலிம்ஸ் சார்பில், ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்து இருந்தார். இசையினை தினா செய்திருந்தார். இப்படம் 2006ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15ஆம் தேதி, ரிலீஸானது.
‘கை வந்த கலை’ திரைப்படத்தின் கதை என்ன?:
எதையுமே லைட்டாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஊரில் ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்து வரும் பணத்தில் ஊதாரியாக வாழ்ந்து வருகின்றனர், கண்ணனும் அவரது தந்தையும். அதற்கு சிறிய உதாரணமாக, வீடு கட்டி பால் காய்ச்சப்போவதாக பத்திரிகை அடித்து, சுற்றுவட்டாரத்தினருக்கு கொடுத்து, மொய் வசூலில் ஈடுபடுகின்றனர். இறுதியில் தான் தெரிகிறது, அது வாடகைக்கு வீடு எடுத்து செய்யப்பட்ட பால் காய்ச்சு வைபவம் என்று. இப்படி, பல திருகு வேலைகள் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர், கண்ணனும் அவரது தந்தையும்.
மற்றொரு புறம், பாண்டியன் மற்றும் சீதாவின் மகளாக வருகிறார், கெளசல்யா. கூச்ச சுபாவமுள்ள பள்ளி செல்லும் மாணவியான கெளசல்யாவை பார்த்து, காதலில் விழுகிறார், கண்ணன். கெளசல்யாவின் தாய் தான், தன் சொந்த அத்தை என்பதை தாத்தா மூலம் அறிந்துகொள்கிறார், கண்ணன். இதனால், கெளசல்யா மீது காதலுக்கு இன்னும் காதல் கூடுகிறது. கெளசல்யாவும் கண்ணனை விரும்ப ஆரம்பிக்கிறாள். பின், கெளசல்யா நேர்மையாக இருப்பதன் மன திருப்தியை, கண்ணனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
அதன்பின் மனம் மாறும் கண்ணன், கெளசல்யாவிடம் மனம் மாறுவதாக வாக்கு கொடுக்கிறார். பின், சென்னைக்குச் சென்று, தன் மாமா கணேசனுடன் சேர்ந்து, சவப்பெட்டிகளை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார். அதன்பின், கண்ணன் தன் தந்தையை தன் மாமாவின் தயவோடு, நல்லவராக மாற்றுகிறார். மேலும், கண்ணன் கெளசல்யாவின் பெற்றோரிடம் தங்கள் காதலைச் சொல்லி, எவ்வாறு சம்மதம் பெறுகிறார் என்பதே மீதிக் கதை.
கை வந்த கலை திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
கண்ணனாக பிருத்வி பாண்டியராஜனும்; கெளசல்யாவாக ஸ்ருதியும் கணேசனாக பாண்டியராஜனும் நடித்துள்ளனர். மேலும், கண்ணனின் தந்தையாக மணிவண்ணனும், கண்ணனின் அத்தையாக சீதாவும், அவரது மாமாவாக பாண்டியனும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ரேவதி, ரோகிணி, வினு சக்கரவர்த்தி, ஜனகராஜ், செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜி.ஞானசம்பந்தம், போண்டா மணி, கோவை செந்தில், பெஞ்சமின் மற்றும் மாளவிகா எனப் பெரிய ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
கை வந்த கலை திரைப்படத்தின் இசை:
’கை வந்த கலை’ திரைப்படத்தில் தினாவின் இசையில் 5 பாடல்கள் இசையமைக்கப்பட்டுள்ளன. பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருந்தார். இப்படத்தில் வந்த சுட்டிப்பூவே நீ தொட்டால் துலங்கும் தொடலாமா எனும் பாடல், மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும், காதல் இனிக்குதப்பா என்னும் பாடல் பலரை ஈர்த்தது.
கை வந்த கலை திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 18ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பார்த்தாலும், ’கை வந்த கலை’ திரைப்படத்தில் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், குடும்பப் பாங்கான கதையும் பலரையும் ஈர்ப்பது உறுதி.

டாபிக்ஸ்