14 Years Of Kalavani: இரு ஊர் பிரச்னை.. இடையில் கலகலப்பு.. இறுதியில் சுபம்போட வைத்த காதல்.. இது 'களவாணி’
14 Years Of Kalavani: 'களவாணி’ திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக்கட்டுரை இது. இதில் இரு ஊர் பிரச்னையும், இடையில் நடக்கும் கலகலப்பும், இறுதியில் சுபம்போட வைத்த காதல் கதையும் தான், களவாணி.

14 Years Of Kalavani: இயக்குநர் சற்குணம் முதன்முதலாக ரொமாண்டிக் காமெடி ஜானரில் எழுதி இயக்கிய படம் தான், களவாணி. இப்படத்தில் விமலுடன், ஓவியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி, மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து 2010ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், களவாணி. இப்படத்தில் தான் ஓவியா கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இப்படத்துக்கு இசையை எஸ்.எஸ். குமரனும், ஒளிப்பதிவினை ஓம் பிரகாஷூம், எடிட்டிங்கினை ராஜா முகமதுவும் செய்திருந்தனர். ரூ.1.5 கோடி பட்ஜெட் என்னும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 5 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித்தந்து, பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
களவாணி திரைப்படத்தின் கதை என்ன?: -
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அரசனூர் மற்றும் ராணிமங்கலம் ஆகிய இரண்டு கிராமவாசிகளுக்கு இடையே நீண்ட நாள் பகை இருக்கிறது. சிறுவர்களுக்கு இடையேயான டி20 போட்டி, அப்பகுதியில் நடத்தப்படும்போது, எதிரெதிர் துருவங்களான ஊர்க்கார சிறுவர்கள் மோதுகிறார்கள். பின் மைதானத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னையால், எதிரெதிர் ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். பின், இது இரு ஊர் சண்டையாக வெடிக்கிறது.
அந்தளவுக்கு பிரச்னைக்குரிய கிராமங்களாக தஞ்சாவூரில் அடுத்தடுத்த கிராமங்கள் உள்ளன.
அதில் அரசனூரைச் சேர்ந்த அறிக்கி என்கிற அறிவழகனுக்கும், ராணிமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவுக்கும் முன்பே பெரிய பிரச்னை இருக்கிறது. இதில் அறிக்கி, இன்னும் பன்னிரெண்டாவது முடிக்காமல், தன் தந்தை ராமசாமி வெளிநாட்டில் இருந்து சம்பாதித்துக் கொடுக்கும் காசில் ஜாலியாக ஊர் சுற்றி, ஊர் வம்பினைச் சம்பாதித்து வருகின்றார்.
அம்மா லட்சுமி தன் மகன் அறிவழகன் ’ஆடிப்போய் ஆவணி வந்தால் டாப் வருவார் என பட்டிக்காட்டு சோதிடர்’ கூறியதைச் சொல்லி, தன் மகன் கேட்கும் பணத்தைக்கொடுத்து செல்லமாக வளர்த்து வருகிறார்.
இதில் ஒருநாள் தன் வீட்டு வயலில் நெல்லைத் திருடும் ராணிமங்கலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி கையும் களவுமாகப் பிடித்து, தன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் எனச் சொல்லுமாறு வற்புறுத்துகிறார். ஆரம்பத்தில் மகேஸ்வரிக்கு அறிக்கி என்கிற அறிவழகனை பிடிக்காத நிலையில், இருவருக்கும் இடையே காதல் வந்துவிடுகிறது. இதற்கிடையே அறிக்கி தனது நண்பர்களான பஞ்சாயத்து மற்றும் மணிகண்டன், மேற்குத்தொடர்ச்சி மலை நண்பர்களுடன் சேரும்போது எல்லாம், கலகலப்பாக இருக்கிறது.
ஒரு பக்கம் அறிக்கி, மகேஸ்வரியின் காதல் தீவிரம் ஆகிறது. மகேஸ்வரியைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் அறிக்கி, அவரது சம்மதத்தில் அவரை கடத்துகிறார்.
மகேஸ்வரியின் சகோதரனான இளங்கோ, அறிக்கியைப் பிடித்து, அவரை ஒருவழியாக்க, தனது கும்பலுடன் சுற்றுகிறார். இறுதியில், மகேஸ்வரிக்கு அறிக்கி என்கிற அறிவழகனுடன் திருமணம் நடந்துவிடுகிறது.
அப்போது இளங்கோ அரிவாளை எடுத்துக்கொண்டு, ஒரு புதருக்குள் போகிறார்.அங்கே இறுதியில் ஒன்றாகசேர்த்து சமாதானம் ஆகி சரக்கு அடித்து கொண்டு இருக்கின்றனர். இதனால் இரு ஊர்க்காரர்களும் நிம்மதி அடைகின்றனர். எதிரிகளாக இளங்கோவும்,அறிவழகனும் மச்சான்களாக ஆனது மட்டுமின்றி, இருவரும் நண்பர்களாகின்றனர்.
களவாணி படத்தில் நடித்தவர்களின் விவரம்:
அறிவழகன் என்கிற அறிக்கி கதாபாத்திரத்தில் நடிகர் விமலும், மகேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் ஓவியாவும் நடித்துள்ளனர். லட்சுமி எனும் அறிக்கியின் தாயாக சரண்யா பொன்வண்ணனும், ராமசாமியாக இளவரசுவும், பஞ்சாயத்தாக கஞ்சா கருப்புவும், மணிகண்டனாக சூரியும் அறிக்கியின் நண்பனாக மேற்குத்தொடர்ச்சிமலை ஆண்டனியும் நடித்துள்ளனர்.
மேலும், இளங்கோவாக திருமுருகனும், ராஜீயாக சுஜாதா சிவகுமாரும், மகேஸ்வரியின் மூத்த பெரியப்பாவாக மு.ராமசாமியும் நடித்திருக்கின்றனர்.
களவாணி படத்தின் இசை பங்களிப்பு:
களவாணி திரைப்படத்துக்கு இசையினை எஸ்.எஸ். குமரன் செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். இப்படத்தில் ‘ஒரு முறை இருமுறை’ என்னும் பாடல் ஹிட்டடித்தது.
படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனாலும் இன்று பார்த்தாலும் அதே கலகலப்புடன் இப்படத்தினை ரசிக்கலாம். அந்தளவுக்கு இன்றும் இந்தக்கதை ஒவ்வொரு வாழ்விலும் நடப்பது என்பது உண்மை.

டாபிக்ஸ்