9 Years of Yennai Arindhaal: பழிவாங்கும் கதை.. GVM-ன் ஸ்டைல்.. அஜித்தின் மாஸ் தான் என்னை அறிந்தால்!
என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், அருண் விஜய், திரிஷா கிருஷ்ணன், அனுஷ்கா, பார்வதி நாயர் ஆகியோர் நடித்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தாமரை பாடல் எழுத ஏ. எம்.ரத்னம் மற்றும் எஸ். ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து தயாரிக்க பிப்ரவரி 5, 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், என்னை அறிந்தால். இந்த திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படம் குறித்து எண்ணற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
என்னை அறிந்தால் படத்தின் கதை என்ன?: கதைக்களமானது முதலில் 2010 என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானப் பயணத்தில் தேன்மொழி உடல்நலிவுற்று வாந்தி எடுக்கும்போது சத்யதேவ் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். எதிர்பாராதவிதமாக மறுநாள் மீண்டும் தேன்மொழியும் சத்யதேவும் சந்தித்துக்கொள்கின்றனர். அப்போது, தேன்மொழியைக் கடத்த விக்டர் மனோகரன் என்னும் குற்றவாளி கும்பல் வருகிறது. அவர்களிடம் இருந்து தேன்மொழியைக் காப்பாற்றுகிறார், சத்யதேவ்.
திடீரென ஃபிளாஷ்பேக்குக்கு கதை செல்கிறது. 2002ஆம் ஆண்டு சத்யதேவ், தான் ஐபிஎஸ் என்பதை மறைத்து ஒரு கும்பலைப் பிடிக்க குற்றவாளியாக நாடகம் போட்டு, கைதி போல் சிறைக்குச் செல்கிறார். அங்கு விக்டர் என்னும் குற்றவாளியிடம் நெருக்கமாகப் பழகுகிறார், சத்யதேவ். பின்னர் இருவரும் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று லிசா என்னும் பெண்ணைத் திருமணம் செய்கிறார், விக்டர். அந்த விழாவுக்கு உடல் உறுப்புகளைக் கடத்தி விற்கும் மேத்யூ வருகிறார். பின் சடாரென்று, மேத்யூவை என்கவுன் ட்டர் செய்கிறார், சத்யதேவ். ஒன்றும் புரியாது கும்பல் குழம்பும்போது தான், தமிழ்நாடு காவல்துறை குற்றப்பிரிவில் பணிபுரியும் ஐபிஎஸ் எனவும்; குற்றவாளிகளைப் பிடிக்க நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷன் அது என்பதையும் வெளிப்படுத்துகிறார். இறுதியில், விக்டர், சத்யதேவிடம் ஒரு குண்டடிபெற்றுக் கொண்டு நைஸாக தப்பிவிடுகிறார்.
அடுத்து ஒரு கதை விரிகிறது. விவாகரத்து நடந்த பின் தனது குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிகா என்னும் பெண்ணுடன் சத்யதேவுக்கு காதல் உண்டாகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, திருமணத்திற்கு முதல்நாள் கொடூரமாக கொல்லப்படுகிறார், ஹேமானிகா. இதனால் தனது வளர்ப்பு மகளைப் பார்த்துக்கொல்ல பணியில் இருந்து வெளியேறி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார், சத்யதேவ். அதற்கு உதவுகிறார், சக டிசிபி ரிச்சர்ட்.
பின், ஆறு ஆண்டுகளுக்குப் பின் சென்னை திரும்பும் சத்யதேவ், காணாமல் போன தனது நண்பரின் குழந்தையைக் கண்டுபிடிக்க முயலும்போது, உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலைப் பற்றி முழு விவரங்களை அறிகிறார். அவர்களின் அடுத்த இலக்கு தேன்மொழி என்பதையும் அறிகிறார். மீண்டும் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட சத்யதேவ், பணிமார்க்கமாக அமெரிக்காவின் பாஸ்டனுக்குச் செல்ல முற்படுகிறார். அப்போதுதான் அவரை விக்டரிடம் இருந்து காப்பாற்றுகிறார், சத்யதேவ்.
தற்போது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. சத்யதேவின் குடும்பமும் தேன்மொழியின் குடும்பம் நட்பாக இருக்கின்றனது. தனது வளர்ப்பு மகள் ஈஷாவை, தேன்மொழி வீட்டில் வைத்து வளர்க்கிறார், சத்யதேவ். அப்போது எதிர்பாராதவிதமாக, ஈஷா கடத்தப்படுகிறார். தேன்மொழியை சரண் அடையச் செய்தால் ஈஷாவை விட்டுவிடுவதாக விக்டர் கூறுகிறார். அதற்கு சம்மதிக்கிறார் சத்யதேவ். ஆனால், எதிர்பாராதவிதமாக ஈஷாவை கத்தியைக் காட்டி மிரட்டும் லிஷா(விக்டரின் மனைவி)-வைக் கொன்றுவிடுகிறார். இதையறிந்து விக்டர் உடைந்துபோகிறார்.
பின், சத்யதேவின் வீட்டுக்கு வரும் விக்டர் அங்குள்ள அனைத்துபோலீஸ்காரர்களையும் கொன்றுவிடுகிறார். மேலும், சத்யதேவ் திருமணம் முடிக்க இருந்த ஹேமனிகாவைக் கொன்றதையும் அவரிடம் ஒப்புக்கொள்கிறார், விக்டர். இருவருக்கும் இடையில் கடும்சண்டை நடக்கிறது. இறுதியில் சத்யதேவ் வெல்கிறார். மேலும் அவரை வெளியில் கொண்டு சென்று போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார். பின் ஈஷாவை நன்கு பார்த்துக்கொள்கிறார், தேன்மொழி. அதன்பின், தேன்மொழியின் காதலை ஏற்றுக்கொண்டு அனைவரும் குடும்பமாக இருக்க முயல்கிறார், சத்யதேவ். இவ்வாறாகப் படம் முடிகிறது.
இப்படத்தில் சத்யதேவ் ஐபிஎஸ்ஸாக அஜித்தும், தேன்மொழியாக அனுஷ்காவும், வளர்ப்பு மகள் ஈஷாவாக நைனிகாவும், ஹேமானிகாவாக நடிகை திரிஷாவும் நடித்துள்ளனர். நடிகர் விவேக் ரிச்சர்ட் என்னும் டிசிபி கதாபாத்திரத்திலும், விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும், லிஷாவாக பார்வதி நாயரும் நடித்து இருந்தனர்.
முதலில் அனுஷ்காவின் கதாபாத்திரத்துக்கு எமி ஜாக்ஸனை நடிக்க வைக்க முடிவு செய்தனர் படக்குழு, ஆனால் அது சில காரணங்களால் முடியாமல் போனது. மேலும், அருண் விஜய்யுடன் நடிக்க அர்விந்த் சுவாமி மற்றும் ஆதி ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. பின், அவர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். அதேபோல், இப்படத்தில் ஆரம்பத்தில் அனிருத் இசையமைப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், ஹாரிஸ் இசையமைத்து இருந்தார். இப்படி எக்கச்சக்க மாறுதல்களைத் தயாரிப்புக்குழு சந்தித்தது.
படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் இன்றும் இப்படத்தை ரசிக்கலாம். இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா திருத்திக் கொடுத்தார். 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் ரூ.100 கோடி வசூலித்து, 50 நாள்கள் திரையில் ஓடியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்