10 Years Of Aaha Kalyanam: வெட்டிங் பிளானருக்கு இடையேயான காதல் திருமணத்தில் முடிந்தால் ‘ஆஹா கல்யாணம்’!
ஆஹா கல்யாணம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நான் ஈ என்னும் தமிழ்ப்படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர், நடிகர் நானி. இவருடன் வாணி கபூர், சிம்ரன் ஆகியோர் இணைந்து நடித்து கோகுல் கிருஷ்ணா இயக்கிய படம் தான், ஆஹா கல்யாணம். இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்தது. ரூ. 10 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இப்படம், 22 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்து வெற்றி பெற்றது. இப்படத்துக்குண்டான இசையை தரண் குமார் செய்திருந்தார்.
ஆஹா கல்யாணம் திரைப்படத்தின் கதை என்ன?: கல்லூரியில் விடுதியில் இருக்கும்போது சுவையான சாப்பாட்டினை ருசிக்க திருமணப்பந்தலுக்குச் செல்லும் சக்திவேலுக்கும், கல்லூரியில் படித்துக்கொண்டே பகுதிநேரமாக ‘வெட்டிங் பிளானர்’பணியைச் செய்யும் ஸ்ருதியும் ஒரு கல்யாணத்தில் வைத்து சந்தித்துக்கொள்கின்றனர்.
‘லட் அட் ஃபர்ஸ்ட் சைட்’என்னும் தத்துவத்தின்படி, ஸ்ருதியைப் பார்த்ததும் காதல் வயப்படும் சக்தி, ஸ்ருதியுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காக, அவர் பணி செய்யும் இடத்தில் சேர்கிறார்.
பின் சந்திரலேகா என்பவர் நடத்தும் ‘வெட்டிங் பிளானர்’ நிறுவனத்தில் இருவரும் சேர்ந்து தொழில் பயில நினைக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக வெவ்வேறு கருத்து மற்றும் புரிதல்களால், அங்கு பணிசெய்ய முடியாமல் வெளியேறுகின்றனர். பின், ‘கெட்டி மேளம்’ என்னும் வெட்டிங் பிளானர் நிறுவனத்தைத் தொடங்கி குறைந்த செலவில் நிறைய திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதன்மூலம் நல்ல வருவாயும் கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் சக்தி மீது ஸ்ருதிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு இரவில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து கலவியில் ஈடுபடுகின்றனர். ஆனால்,அதன்பின் ரிலேஷன்ஷிப்பை தொடர சக்தி பயப்படுகிறான். இருவருக்கும் இடையே சிறு சிறு விரிசல் வந்து, இருவரும் வெளியில் சென்று தனி தனி நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். பின்னர் அந்நிறுவனத்தின் மூலம் நஷ்டப்படுகின்றனர்.
அந்த தருணத்தில் செல்வந்தர் ஒருவர் கெட்டி மேளம் என்னும் நிறுவனத்தின் பேனரில் தங்கள் குடும்ப திருமணத்தைச் செய்ய ஆசைப்படுகிறார். நண்பர்களின் வற்புறுத்தலாலும், கடன் தோல்வியில் இருந்து மீளவும் இருவரும் சேர்ந்து பணியாற்ற சம்மதம் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ஸ்ருதிக்கு இன்னொரு நபருடன் நிச்சயம் ஆகின்றது. இருவரும் கெட்டிமேளத்துக்காக இணைந்து பணியாற்றி கடன் சுமையைக் குறைத்தனரா, இருவருக்கும் இடையே இருந்த ஈகோ நீங்கி உள்ளே இருந்த காதல், திருமணத்தில் முடிந்ததா என்பதே எஞ்சியிருக்கும் கதை!
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு ரிலீஸானது. இப்படத்தைப் பிரபல யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் சக்திவேலாக நானியும், ஸ்ருதியாக வாணி கபூரும் நடித்து இருந்தனர். சந்திரலேகாவாக சிம்ரன் நடித்திருந்தார்.
ஆஹா கல்யாணம், ஹிந்தியில் ரிலீஸான ’பந்த் பஜா பாரத்’ என்னும் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராகத் தொழில் பயின்றவர்.
பார்ப்பதற்கு கலர் ஃபுல்லாகவும், 10 பாடல்களுடன் எளிமையான திரைக்கதையுடன் வந்த ‘ஆஹா கல்யாணம்’ இன்று நாம் டிவியில் போட்டாலும், ரசித்துப் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்