16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை

16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை

Marimuthu M HT Tamil
Nov 14, 2024 02:27 PM IST

16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை வாரணம் ஆயிரம் எனலாம். இப்படம் வெளியாகி இன்றுடன் 16ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை
16 Years Of Vaaranam Aayiram: காதலியின் பிரிவு.. அது தரும் ட்ரான்ஸ்ஃபெர்மெஷன்.. உயர்ந்த இடத்தில் ஒருவனை சேர்க்கும் கதை

இந்தப் படத்தின் பெரிய பிளஸ் என்னவென்றால், இது வாழ்வியல் சார்ந்த படம். எந்த மனநிலையில் பார்த்தாலும், அந்த மனநிலையை மேம்படுத்த உதவும் தீர்வை இப்படம் தரும்.

ஏனெனில் வசனங்களாகவும் சரி, காட்சிகளாகவும் சரி, இப்படத்தில் பல்வேறு லேயர்கள் மறைந்து இருந்து நாம் ஒவ்வொரு முறை இந்த படத்தைப் பார்க்கும்போதும், ஒவ்வொரு வித உணர்வைத் தருகின்றன. சந்தோஷமான மனநிலையில் இருந்து பார்க்கும்போது, ஒரு அனுபவத்தைப் பெறும் உணர்வை இந்தப் படம் கடத்தும். அது சோகமான கட்டத்தில் இருந்து படத்தினைப் பார்க்கும்போது, அதில் இருந்து விடுபட உதவும் பாஸிட்டிவ் நுண்ணுணர்வினை இப்படம் நம்மிடம் கடத்தத் தவறுவதில்லை. அப்படி ஒரு நுண்ணுணர்வுமிக்க படம், வாரணம் ஆயிரம். அதில் தான் இப்படம் அனைவர் மனங்களை வென்றிருக்கிறது.

வாரணம் ஆயிரம் படத்தின் கதை என்ன?:

போர்முனையில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டார் எனும் செய்தி கிடைக்கிறது. அந்த எமோஷனலான சூழலில், தன் சிறு வயதில் இருந்து தந்தையுடனான உறவை நினைத்துப் பார்க்கிறார், மகன் சூர்யா. அவற்றை ஒவ்வொன்றாக விவரிக்கிறது, வாரணம் ஆயிரம்.

இயக்குநர் கவுதம் மேனன் தனது மரணித்த தந்தையின் நினைவுகளை சேகரிக்க நினைத்து எழுதத்தொடங்கி, அது காட்சி வடிவம் பெற்று நம் கையில் கிடைத்திருப்பதுதான், வாரணம் ஆயிரம் திரைப்படம்.

படத்தில் தந்தை கிருஷ்ணனாகவும், மகன் சூர்யாவாகவும் நடிகர் சூர்யா நடித்திருப்பார். தாய் மாலினியாக நடிகை சிம்ரனும், காதலி மேக்னாவாக நடிகை சமீரா ரெட்டியும், மனைவி பிரியாவாக திவ்யா ஸ்பந்தனாவும் செய்திருப்பர்.

நான் ரசித்த காட்சிகள்:

- வாரணம் ஆயிரம் படத்தில் டைட்டில் கார்டில் பின்னணியில் 80-களில் ஹிட்டான பாடல்கள் தமிழ் மற்றும் இந்திப் பாடல்கள் ஒலிக்கும். அந்த கலர் டோனும் இயக்குநர் கவுதம் மேனனின் வாய்ஸில் பாடல்களும் ஆரம்பத்திலேயே கவிதை உணர்வை ரசிகனின் மனதில் கடத்தும்.

  • படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் ’முன் தினம் பார்த்தேனே’ பாடல், தந்தை கிருஷ்ணனுக்கும் - தாய் மாலினிக்கும் இடையிலான 70-கள் காலகட்ட காதலை கண்முன் காட்டியிருக்கும். குறிப்பாக, அன்றைய காலகட்டத்தில் இருந்த லவ் புரொபோஷல் காட்சி பலரையும் ஈர்த்திருக்கும்.
  • பின் தந்தை கிருஷ்ணன், பிறந்த மகன் சூர்யாவை கையில் வைத்துக்கொண்டு பேசும்காட்சி சாதாரண குடும்ப ஆண்கள் பலரது வாழ்விலும் நடந்த ஒன்றாகத்தான் இருக்கும். ’கையில் பத்து காசு இல்ல. ஆனால், நான் தான் உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன். இவனைசுத்தி எல்லாமே அழகா இருக்கணும். வாழ்க்கையில் இவனுக்கு என்ன எழுதியிருக்குன்னு தெரியல. ஏதாவது தப்பா எழுதியிருந்தா நான் அதை திருத்தி எழுதுவேன்னு’ என தந்தை கிருஷ்ணன் தன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பேசுவது பலருக்கும் நல்ல பேரண்டிங்கை செய்யவேண்டும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
  • நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையை வாரணம் ஆயிரத்துக்கு முன், வாரணம் ஆயிரத்துக்குப் பின் இரு வகையாகப் பிரிக்கலாம். வாரணம் ஆயிரம் 2008, நவம்பர் 14ல் ரிலீஸானபோது, அவரின் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் படத்திற்கு அவர் போட்ட எஃபெர்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத்தந்தது. அதிலும் காதலியின் பிரிவுக்குத் துயருக்குப் பின்னான சேஞ்ச் ஓவர் காலகட்டத்தில், ’நான் என் ஜூனியர்ஸ்க்குச் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்.. உடம்ப ரெடி பண்ணுங்க’ எனப் பேசி சூர்யா வொர்க் அவுட் செய்யும் காட்சிகள் இப்போது பார்த்தாலும் செம பூஸ்ட் தான்.
  • வாரணம் ஆயிரம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ரகம். அதில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கதை இருக்கும். அடியே கொள்ளுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி, முன் தினம் பார்த்தேனே, ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி, அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல, அனல் மேலே பனித்துளி ஆகிய அனைத்துப் பாடல்களும் அதிரி புதிரி ஹிட்டானவை. அன்றைய அனைத்து எஃப்.எம். எங்கும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தவை எனலாம். ஏத்தி ஏத்தி பாடலைத் தவிர, மீதமுள்ள அத்தனை பாடல்களும் கவிஞர் தாமரையால் எழுதப்பட்டது. இல்லை செதுக்கப்பட்டது. ஏத்தி ஏத்தி பாடலை, 90’ஸ் கிட்ஸ்களின் காதல் கவிஞர் நா. முத்துக்குமார் எழுதியிருப்பார்.
  • படத்தில் தந்தை கிருஷ்ணன் - மகன் சூர்யா இடையே நடக்கும் உரையாடல்கள் வளரிளம் கால பேரண்டிங்கிற்கான அணுகுமுறை எனலாம். உதாரணத்திற்கு, தெருவில் பெண் தோழி ஒருவருடன் மகன் சூர்யா பேசிக்கொண்டிருக்கையில், அதைப் பார்த்த தந்தை கிருஷ்ணன், ‘உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகாக இருக்கு. அவர்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து பேசு’ எனும் காட்சி, அடிவாங்கி ஆக்ரோஷத்தில் இருக்கும் சூர்யாவிடம் ‘இதுக்குத்தான் உடம்ப ரெடி பண்ணி வைச்சிருக்கா. எனி வே குட்நைட்’ எனச்சொல்லி செல்லும் காட்சியிலும், கல்லூரி ஹாஸ்டலில் மகனை விடச் செல்லும் காட்சியில் தந்தை கிருஷ்ணன், ‘ஹாஸ்டல் லைஃப் நிறைய வித்தியாசமா இருக்கும். ரொம்ப மாறிடாத.. தினமும் லெட்டர் எழுது. பத்து வருஷம் கழிச்சு படிச்சுப் பார்க்க நல்லா இருக்கும்’ என மகன் சூர்யாவுக்குச் சொல்லும் காட்சிகள் அனைத்தும் இப்படி ஒரு தந்தை நமக்குக் கிடைத்திட மாட்டாரா என ஏங்க வைப்பவை.
  • ரயிலில் செல்கையில் மேக்னாவை முதல் தடவை பார்த்ததும் Love at First Sight என்ற முறையில் காதலில் விழும் சூர்யா, அதை அவர்முன் கிடார் இசைத்து புரொபோஸ் செய்யும் விதம், மேக்னா இருக்கும் வீட்டிற்கே சிலநாட்களில் சென்று மீண்டும் புரொபோஸ் செய்யும் காட்சி ஆகியவை உண்மைக்குத் தூரமாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தன. குறிப்பாக, மேக்னா அமெரிக்கா செல்ல இருப்பதை அறிந்து சூர்யா பேசும், ’நல்லா படிக்கிறவங்க எல்லாம் வெளிநாடுபோகாம இங்கு படிச்சு, இங்கு வொர்க் பண்ணி இங்க டேக்ஸ் கட்டினா, நாடும் நல்லாயிருக்கும். நானும் நல்லாயிருப்பேன்ல’ எனச் சொல்லும் காட்சி மைல்டாக சிரிப்பை மூட்டிவிடும். இதுதான் கவுதம் மேனனின் டச். சீரியஸான காதல் காட்சியில் ஒரு கலகலப்பு இருக்கும்.
  • அதன்பின் அமெரிக்கா செல்ல தாய் - தந்தையிடம் அனுமதி பெறும் சூர்யா இன்னும் அரியர் வைத்திருக்கும் சூர்யா, விசா ஆஃபிஸில் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சிகள் எல்லாம் கலகலப்பானவை. மறுபுறம், சான்பிரான்ஸிஸ்கோவில் பாலத்தின் முன் சூர்யா மேக்னாவிடம் புரொபோஸ் செய்யும் காட்சியும், அதை சிலநாட்கள் கழித்து மேக்னா மீண்டும் அதே இடத்தில் வைத்து தன் காதலை ஒத்துக்கொள்ள வைக்கும் காட்சிகளும் வாரணம் ஆயிரம் படத்தில் மிக அழகியலானவை.

காதலியின் பிரிவைக் கையாளக் கற்றுக்கொடுத்த விதம்:

  • திடீரென குண்டுவெடிப்பில் உயிரிழக்கும் மேக்னாவின் பிரிவுத் துயரைத் தாங்காமல் ஏர்போர்டில் அழுதுகொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில், நம் பக்கத்து வீட்டுக்காரரின் வேதனை இருக்கும். அந்த அழுகையில் சளிகூட வரும். பெரும்பாலும் கத்திபேசும் சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என கத்தி கத்திபேசும் சூர்யாவின் படங்களைவிட, அழுகையின்போது இயலாமையின் வலியை கடத்தி நடிக்கும் நடிகர் சூர்யா தான் பலரையும் கனெக்ட் செய்கிறார். நடிகர் சூர்யாவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் இதைத்தான். அதை வெகுநாட்கள் கழித்து, சூரரைப்போற்றுவில் மட்டுமே சூர்யா செய்திருப்பார்.
  • காதலி மேக்னாவின் இறப்புக்குப் பின் வலி தாங்க முடியாமல் போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் மகன் சூர்யாவை, அவன் திருந்தி திரும்பி வருவான் என ஒரு பெரும் நம்பிக்கை வைத்து பயணத்துக்கு வழியனுப்பும் தாய் - தந்தை, தாய் - தந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக சிகரெட்டை முற்றிலும் விடும் மகன் சூர்யா, அமெரிக்காவில் ஏர்போர்டில் தான் காதலியின் இறப்பில் தவித்தபோது கண்ணீர் துடைத்த சங்கர் மேனனின் மகனை ரவுடிகளிடம் அவருக்கு மீட்டுத்தரும் காட்சிகள், நாம் எந்தப் பிரச்னையென்றாலும் அதற்காக முழுதாக இறங்கி தேடினால் கிடைக்கும் என்பதை உணர்த்தக்கூடியது.

வாழ்வு என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது:

  • நாம் தேடிய பெண்ணை விட, நம்மைத்தேடும் பெண்களின் காதலுக்கும் நாம் மதிப்பளிக்கலாம் என வாரணம் ஆயிரம் படம் மறைமுக சுட்டிக்காட்டும். சூர்யா கூட, தன்னை சிறுவயதில் இருந்து ஒன் சைடாக காதலித்த தங்கையின் தோழி பிரியாவின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பார். சூர்யாவின் பழைய காதல் தந்த ரணத்தை பிரியாவின் காதல் மருந்து போட்டு ஆற்றியிருக்கும். இதுதான் யதார்த்தம். அதில் நாகரிகமும் அதிகம்.
  • வாழ்வு என்பது ஏற்ற - இறக்கங்கள் கொண்டிருப்பவை. அதைச் சரியாக, அழகாக மாற்ற நம்முடைய செயல்பாடுகள் தான் காரணமாக இருக்கும். அதைச் செய்யவேண்டும் என்பதைப் படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் வாரணம் ஆயிரம் சரியாக கிளறுகிறது. இப்படம் வெளியாகி 16ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பலரால் ஏதோ ஒரு காட்சியில் கனெக்ட் செய்துகொள்ள முடியும். மொத்தத்தில் ‘வாரணம் ஆயிரம்’ துவண்டுபோனவர்களின் வாழ்க்கையில் கிடைத்த பெரும் நம்பிக்கைக்குரிய கடிதம்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.