HBD Poet PiraiSoodan: ஆட்டமா தேரோட்டமா.. சந்திரனே சூரியனே.. இதெல்லாம் இவர் எழுதிய பாட்டா?
பல்வேறு ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடனின் பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை..
தமிழ் சினிமாவில் சத்தமின்றி சாதித்த கவிஞர்களில் பிறைசூடனும் ஒருவர். இதுவரை சினிமா, சீரியல் மற்றும் பக்தி மார்க்கம் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய அற்புதக் கவிஞர் பிறை சூடன். அவரைப் பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான சுவாரஸ்யத் தகவல்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த பிறைசூடன்?: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தைச் சார்ந்த பிறைசூடன், 1956ஆம் வருடம், பிப்ரவரி 6ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர் ஆகும். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, தனது பெயருக்கு ஒத்த பெயரான பிறைசூடன் என்னும் புனைப்பெயரை வைத்துக்கொண்டு, (சந்திர - பிறை, சேகர் - சூட்டியிருப்பவர்) அதில் கவிதைகள் எழுதினார். பிறைசூடனும் ஏழு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உடன் பிறந்துள்ளனர். இவரது சகோதரர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் மதி. பிறைசூடனுக்குத் திருமணமாகி ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அதில் அவரது மகன் தயானந்த் பிறைசூடன் இசையமைப்பாளராகவுள்ளார்.
பாடல் ஆசிரியர் ஆனது எப்படி? பாடல்கள் எழுதுவது மீதும் கவிதை எழுதுவது மீதும் ஆர்வம் கொண்ட பிறைசூடன், பல்வேறு இடங்களில் வாய்ப்புத்தேடி அலைந்து கடைசியாக இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ’சிறை’ படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். ’கேளடி கண்மணி’ திரைப்படத்தின்மூலம் ’தென்றல் தான்’ என்னும் பாடலையும், இதயம் படத்தில் ’இதயமே இதயமே’ பாடலையும் எழுதிப் பெயர் பெற்றவர். ’அமரன்’ படத்தில் ’வெத்தல போட்ட சோக்கில’ பாடல் இவரது எழுத்து கைவண்ணத்தில் புதிய உச்சம் தொட்டது. அதேபோல், ‘சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே’ என்னும் பாடல் இவர் எழுதியதுதான்.
மேலும், நடிகர் ரஜினி நடித்த ’அதிசயபிறவி’ படத்தில் , ’தாநந்தன கும்மி கொட்டி யார் வந்தது நெஞ்சுக்குள்ள’ என்னும் பாடலை எழுதி, பட்டிதொட்டியெங்கும் பெயர் எடுத்தார், பிறைசூடன்.
’என் ராசாவின் மனசிலே’ எனும் ராஜ்கிரணின் படத்தில் இடம்பெற்ற ’சோள பசுங்கிளியே..சொந்தமுள்ள பூங்கொடியே’ என்னும் பாடலையும்; கேப்டன் பிரபாகரனின் ’ஆட்டமா தேரோட்டமா’ எனும் பாடலையும் எழுதி மக்களைச் சென்றடைந்துள்ளார்.
அதேபோல், ’கோபுர வாசலிலே’ திரைப்படத்தில் ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ எனும் பாடலும் இவர் எழுதியதே. பின் தேவா இசையில், நடிகர் விஜயகாந்த் நடித்த தாயகம் திரைப்படத்திற்கு அனைத்துப்பாடல்களையும் பிறைசூடன் தான் எழுதியுள்ளார். இப்படத்தில் பாடல் எழுதியமைக்காக தமிழ்நாடு அரசின் விருதினை வென்றார், பிறைசூடன்.
மேலும் தங்க மனசுக்காரன் திரைப்படத்தில், ‘மணிக்குயில் இசைக்குதடி’, செம்பருத்தி படத்தில்,’நடந்தால் இரண்டடி’, ராஜாதி ராஜா திரைப்படத்தில் ‘மீனம்மா.. மீனம்மா’, அரங்கேற்றவேளை திரைப்படத்தில், ‘குண்டு ஒன்று வச்சிருக்கேன்’, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் திரைப்படத்தில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட’
பின், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ’ஸ்டார்’ திரைப்படத்தில் ’ரசிகா ரசிகா ரசிகப் பெண் ரசிகா’ என்னும் பாடலையும், லக்கிமேன், ஹரிச்சந்திரா, அமிர்தம் ஆகியப் படங்களிலும் பாடல் எழுதினார்.
அதன் பின் 2014ஆம் ஆண்டு ’சதுரங்க வேட்டை’ என்னும் திரைப்படத்திலும், 2016ல் புகழ் என்னும் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இறுதியாக ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு வசனங்களை எழுதினார், பிறைசூடன்.
இப்படி தமிழுக்கும் தமிழ்ப்பாடலுக்கும் பல்வேறு பங்களிப்புகளை செய்த கவிஞர் பிறைசூடன் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 8ல் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
காலன் அவரைப் பறித்தாலும் காலத்தால் அழியாத படவெற்றிப் பாடல்களை வழங்கிய மறைந்த கவிஞர் பிறைசூடனின் பிறந்தநாளில், நம் மனதை ஆரோக்கியமாக வைத்திருந்த நன்றியுடன் ஒருமுறை அவரை நினைத்துப் பார்ப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்