அப்படிப்போடு போல் விஜய்க்கு பல ஹிட் பாடல்கள் எழுதியவர்; கலைஞரின் செல்லப்பிள்ளை..தேசிய விருது கவிஞர் பா.விஜய் வளர்ந்த கதை
அப்படிப்போடு போல் விஜய்க்கு பல ஹிட் பாடல்கள் எழுதியவர்; கலைஞரின் செல்லப்பிள்ளை..தேசிய விருது கவிஞர் பா.விஜய் வளர்ந்த கதையினைப் பார்க்கலாம்.
கவிஞர் பா. விஜய் பிறந்த நாள் அக்டோபர் 20ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அவர் தமிழ் சினிமாவில் பங்களித்த நல்ல பாடல்கள் குறித்துப் பார்க்கலாம்.
யார் இந்த பா.விஜய்?: ஜெயங்கொண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் பா.விஜய், வளர்ந்தது எல்லாம் கோவை மாநகரில் தான். கவிஞர் பா. விஜய், 20 அக்டோபர் 1974ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பாலகிருஷ்ணனுக்கு கோவையில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணி என்பதால் குடும்பம் அங்கு புலம்பெயர்ந்தது. தாய் சரஸ்வதி பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தார்.
பின் தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாகவும், பாடல் எழுதும் ஆர்வத்தாலும், குடும்ப நண்பர் மூலம் இயக்குநர் பாக்யராஜை சந்தித்து, ’பாக்யா’ இதழில் பணியாற்றுகிறார், கவிஞர் பா.விஜய். பின்,1996ஆம் ஆண்டு ஞானப்பழம் என்னும் பாக்யராஜ் நடித்த படம் மூலம் திரைக்கவிஞர் என்ற அந்தஸ்து பா.விஜய்-க்கு கிடைக்கிறது.
இளைஞர்களின் பல்ஸ் பிடித்து பாடல் எழுதுவதில் கெட்டிக்காரர்:
1999ஆம் ஆண்டு ரிலீஸான ’நீ வருவாய்’ என என்னும் படத்தில், ’பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய்’ என என்னும் பாடல், பா.விஜய்யின் திரைவாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின், ’வானத்தைப் போல’ திரைப்படத்தில், ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, நதியே அடி நைல் நதியே, ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே’ ஆகிய மூன்று பாடல்களை எழுதி, மூன்று பாடல்களையும் ஹிட்டாக்கியவர், கவிஞர் பா.விஜய்.
அதே ஆண்டு, இயக்குநர் சேரனின் ’வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் வரும், ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு’ என இவர் எழுதிய பாடல் நிறம் சார்ந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்களைத் தட்டி எழுப்பியது.
நடிகர் விஜய்க்கு பல ஹிட் கொடுத்தவர்: 2000ஆம் ஆண்டு ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் ’ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில்’, 2002ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தில் ‘ஜூலை மலர்களே’, அதே ஆண்டு வசீகராவில் ‘ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்’, ‘மேரேஜ் என்றால் வீண்பேச்சு இல்ல, நெஞ்சம் ஒரு முறை நீ என்றது’, 2003ஆம் ஆண்டு, திருமலை திரைப்படத்தில் ‘திம்முசு கட்ட.. திம்முசு கட்ட’, 2004ஆம் ஆண்டு கில்லி படத்தில், ‘அப்படிப்போடு போடு போடு’, ''ஷா லா லா', 2005ல் சச்சின் திரைப்படத்தில் ‘வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா’, 2006ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படத்தில் ‘டோலு டோலுதான் அடிக்கிறான்’, ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்’, ‘என் செல்லப்பேரு ஆப்பிள் என்னை சைஸா கடிச்சுக்கோ’, 2008ல் ‘குருவி’ திரைப்படத்தில் ‘மொழு மொழுனு யம்மா யம்மா, பல்லானது பலானது’ ஆகிய விஜய் படப் பாடல்களை இளமை ததும்ப எழுதியவர், பா.விஜய்.
அதேபோல், 2008ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘வில்லு’ படத்தில் ‘நீ கோபப்பட்டால் நானும்’, 2012ஆம் ஆண்டு, நண்பன் திரைப்படத்தில் ‘இருக்கானா இடை இருக்கானா’, 2017ல் தெறி படத்தில் ‘ஈனா மீனா டீகா’ ஆகிய நடிகர் விஜய்யின் பல ஹிட் பாடல்களை எழுதியவர், கவிஞர் பா.விஜய்.
தேசிய விருது அங்கீகாரமும்.. கலைஞர் அளித்த அடைமொழியும்:
இயக்குநர் சேரன் இயக்கிய ‘’ஆட்டோகிராஃப்'' படத்தில் இவர் எழுதிய ‘’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'' எனும் பாடலுக்கு தேசிய விருதுபெற்றவர். இதனால் கலைஞரால் வித்தகக் கவிஞர் எனப் புகழப்பெற்றவர். மேலும், பில்லா, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு, பட்டியல் ஆகியப் படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதி ஹிட்டடிக்கச் செய்தவர், பா.விஜய்.
அதுமட்டுமின்றி ஞாபகங்கள், கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் இளைஞன் என்ற படம், அடுத்து ஸ்ட்ராபெர்ரி, நய்யப்புடை, ஆருத்ரா ஆகியப் படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
வார்த்தைகளில் இளமை ததும்ப எழுதும் கவிஞர் பா.விஜய்க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
டாபிக்ஸ்