LIC Narasimhan: ‘’டாக்டர் ரோலா எல்.ஐ.சி.நரசிம்மனை கூப்பிடுங்க’’ - நடிகர் எல்.ஐ.சி நரசிம்மன் குறித்த நினைவுப்பதிவு!
தமிழின் குணச்சித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மனின் நினைவு நாள்(அக்.27) இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர்களின் எண்ணிக்கை அருகிவிட்டது என்றே கூறலாம். ஆனால், மலையாளத்தில் இருக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவிலும் 80-களில் குணச்சித்திர நடிகர்களுக்கு என ஒரு மவுசு இருந்தது. மனோரமா, காந்திமதி, பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், மேஜர் சுந்தர்ராஜன் எனும் வரிசையில் நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மனுக்கும் ஒரு தனி ரசிகர்கள் இருந்தனர்.
நீதிபதி ரோல், டாக்டர் ரோல், போலீஸ் ஆபிசர் ரோல், நின்னுக்கோரி சரணம் காமெடி ரோல் என இத்தனை அம்சங்களையும் நாம் மனதில் வைத்து பொருத்திப் பார்த்தால், நமக்கு கிடைப்பது என்னவோ நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மனின் முகம் தான் என்றால் அது மிகையல்ல.
யார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்?: நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன், சினிமாவில் நுழைவதற்கு முன்பு, எல்.ஐ.சி எனப்படும் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் அலுவலராகப் பணிபுரிந்துவந்தார். சினிமா மற்றும் நாடகத்துறையின் மீதும் இருந்த காதல் காரணமாக, அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றுவிட்டு சின்ன சின்ன ரோல்களாக இருந்தாலும் கெளரவம்பார்க்காமல் 200க்கும் அதிகமானப் படங்களில் நடித்தார். இதுதவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருப்பார். எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு நளினி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர்.
எல்.ஐ.சி நரசிம்மன் என்றதும் நினைவுக்கு வரும் கதாப்பாத்திரங்கள்: குறிப்பாக ’’ஆறிலிருந்து அறுபது வரை’’ திரைப்படத்தில் ரஜினியின் சகோதரனாக வந்து, பணக்காரன் ஆனவுடன் அவரை உதாசீனப்படுத்திவிட்டுச் செல்லும் நடிகராக நடித்திருப்பார். இதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரது முகம் பலருக்கு தெரிந்தது. அதேபோல்,1997ஆம் ஆண்டு ’’தெம்மாங்கு பாட்டுக்காரன்’’ திரைப்படத்தில், பாட்டுவித்வானாக இருக்கும் கவுண்டமணியிடம் ஆர்வமாக வந்து எல்.ஐ.சி. நரசிம்மன் சொதப்பும் காட்சிகள் இன்றும் படுபிரபலம். குறிப்பாக, கறிவெட்டும் பாயாக கையில் கத்தியுடன் வந்து ’’நின்னுக்கோரி வர...ணும்’’ என பாட்டுக்கற்றுக்கொள்ள முயற்சிப்பது ஆகட்டும், ’’பால் இருக்கீ.. பழம் இருக்கீ’’ என தவறாக உச்சரித்து, கவுண்டமணியை வெறுப்பு ஏற்றுவது ஆகட்டும், இவரது நடிப்புப் பலரையும் ஈர்த்தது.
மேலும் 1984ஆம் ஆண்டு வெளியான ’ஓசை’ திரைப்படத்தில் மோகனுடன் சகத்தொழிலாளியாக நடித்திருப்பார், எல்.ஐ.சி. அதேபோல், 1984ஆம் ஆண்டு வெளியான ‘’நான் மகான் அல்ல’’என்னும் திரைப்படத்தில் ரஜினிக்கு வைத்தியம் பார்க்கும் கண் மருத்துவராக நடித்திருப்பார், எல்.ஐ.சி.நரசிம்மன். பின் 1985ஆம் ஆண்டு வெளியான ’’நீதியின் மறுபக்கம்’’ திரைப்படத்தில் விஜயகாந்திடம் கேள்விகளை அடுக்கும் வழக்கறிஞராக நடித்திருப்பார்.
பின், 1988ஆம் ஆண்டு வெளியான ‘’பெண்மணி அவள் கண்மணி’’ என்னும் படத்தில் விசுவிற்கு வைத்தியம் பார்க்கும் நடிகராக நடித்திருப்பார், நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன். மேலும் அதே ஆண்டில் ரஜினி, பிரபு ஆகியோர் நடித்து வெளிவந்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் டிஜிபி ஸ்ரீராம் எனும் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
1996ஆம் ஆண்டு, வெற்றி விநாயகர் படத்தில் சிவனாக எல்.ஐ.சி.நரசிம்மன் நடிக்க, பார்வதி தேவியாக நடிகை கே.ஆர்.விஜயா நடித்திருப்பார். இதையெல்லாம் தாண்டி நடிகர் விஜய் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ‘’காலமெல்லாம் காத்திருப்பேன்’’ என்னும் படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு மருத்துவம் பார்க்கும் குடும்ப மருத்துவராக நடித்திருப்பார். இதுதவிர, சீரியல்களிலும் நடித்து தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் பிரபலம் ஆனார், நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன். விளம்பரப் படங்களிலும் இறுதிவரை பிஸியாக இருந்தார்.
இத்தகையவரை தனது 71ஆவது வயதில் புற்றுநோய் கொன்று தின்றது. ஆம். இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயில் பீடிக்கப்பட்டு இருந்த நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் 27 அக்டோபர் 2011ஆம் ஆண்டு காலமானார். எல்.ஐ.சி. நரசிம்மன் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவரது நடிப்பும் அவர் நடித்த கதாபாத்திரங்களும் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை. அதில் அவர் எப்போதும் வாழ்வாங்கு வாழ்வார்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்