SriVidya Memorial Day: சின்னத்தாய் அவள்.. வறுமையில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஸ்ரீவித்யாவின் கதை!
நடிகை ஸ்ரீவித்யாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பல்வேறு படங்களில் நடித்து இயக்குநர் கே.பி. பாலச்சந்தர், இயக்குநர் மணிரத்னத்தால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீவித்யாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் சினிமாவுக்கு செய்த பல்வேறு விசயங்களை நினைவுகூரலாம்.
யார் இந்த ஸ்ரீவித்யா? 1953ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி, நடிகை ஸ்ரீவித்யா பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர் விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கர்நாடகப் பாடகி எம்.எல்.வசந்த குமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். ஸ்ரீவித்யா பிறந்த ஆண்டு, தந்தைக்கு தசையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக நடிக்க முடியாமல் போயிற்று. இதனால் குடும்பம் வறுமையில் வாடவே, தனது 14 வயதிலேயே சிவாஜி கணேசனின் திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் தொடங்கினார், ஸ்ரீவித்யா. பின் 1969ஆம் ஆண்டு குமார சம்பவம் என்னும் மலையாளப் படத்தில் மேனகாவாகவும், தாசரி நாராயண ராவ் இயக்கி 1972ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான டாடா மணவாடு படத்திலும் அடுத்தடுத்து அறிமுகம் ஆனார், ஸ்ரீவித்யா. வீட்டில் அதிகரித்த இளவயது வறுமை ஸ்ரீவித்யாவை விடாமல் சினிமாக்களில் நடிக்க வைத்தது. அதன்பின் இயக்குநர் கே. பாலச்சந்தரால் அடையாளம் கண்டறியப்பட்டு, 1971ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான நூறுக்கு நூறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பின், தாய்மொழியான தமிழில் கதாநாயகியாக அவர் அறிமுகமான முதல் படம் டெல்லி டு மெட்ராஸ் ஆகும். இப்படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார். இப்படம் 1972ஆம் ஆண்டு ரிலீஸானது. பின், இயக்குநர் கே.பாலச்சந்தரின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பெயர் பெற்றார், நடிகை ஸ்ரீவித்யா. குறிப்பாக ஜெமினி கணேஷனுடன் சேர்ந்து வெள்ளிவிழாவிலும், சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் கமல்ஹாசனுடனும், அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகர் கமல் மற்று ரஜினியுடனும் சேர்ந்து நடித்து பெயர் பெற்றார்.
1969ல் குமார சம்பவம் படத்தின் மேனகா கதாபாத்திரத்துக்குப்பின், சட்டம்பிக்கவலா என்னும் மலையாளப்படத்தில் அம்மொழியில் முதல்முறையாக கதாநாயகி அந்தஸ்தைப் பெற்றார்,ஸ்ரீவித்யா. பின் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் மாறி மாறி நடித்து வந்தார், ஸ்ரீவித்யா. மலையாளத்தில் டப்பிங் பேசுவதற்காக ஸ்ரீவித்யா, மலையாளம் எழுதப் படிக்கக் கற்றார்.
தமிழில் நினைவுகூரத்தக்கப் படங்கள்: அபூர்வ ராகங்கள், எழுதாத சட்டங்கள், ஆறு புஷ்பங்கள், ராதைக்கேற்ற கண்ணன், ரெளடி ராக்கம்மா, ஆசை 60 நாள், தளபதி, இந்திரன் சந்திரன், நம்மவர், காதலா காதலா, காதலுக்கு மரியாதை, கண்ணெதிரே தோன்றினாள், ஆனந்தம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலம் ஆனார், ஸ்ரீவித்யா.
பெர்ஷனல் வாழ்க்கையில் ஸ்ரீவித்யாவை துரத்திய துரதிர்ஷ்டம்: அமெரிக்காவைச் சார்ந்த ஒருவரிடம் இருந்து திருமண முன்மொழிவு, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு வந்தது. ஆனால், குடும்ப பொருளாதாரப் பிரச்னைகளால் அது தோல்வியில் முடிந்துள்ளது.
ஆரம்பத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சினிமா பட்டறையில் வளர்ந்ததால் நடிகை ஸ்ரீவித்யாவுக்கும் கமலுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் தனது காதலை கமலிடம் வெளிப்படுத்தினார், ஸ்ரீவித்யா. அதை மறுத்த நடிகர் கமல்ஹாசன் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா, கேரளாவிற்குச் சென்று பல்வேறு மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின் தமிழில் ’தேவர் மகன்’ திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் பரதனை திருமணம் செய்ய நினைத்தார். ஆனால், அவருக்கும் நடிகை கேபிஏசி லலிதாவுக்கும் இடையில் திருமணம் நடந்தது. அதன்பின், உதவி இயக்குநர் ஜார்ஜ் தாமஸை தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து கடந்த ஜனவரி 19, 1978ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதற்காக ஸ்ரீவித்யா கிறிஸ்தவ மதத்திற்குக் கூட மாறினார். ஆனால் ஏனோ அந்த உறவு, அவருக்கு இனிப்பினை தரவில்லை. 1980ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின் அவர் யாரையும் மறுமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு, கடைசி வரை தனக்கு என்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது.
கமலுடன் கடைசிவரை நீடித்த நட்பு: தன் விவாகரத்துக்குப் பின், 8 வருடங்கள் கழித்து கமலுடன் பேசினார்,நடிகை ஸ்ரீவித்யா. பின், கமல்ஹாசன் நடித்த இந்திரன் சந்திரன், நம்மவர், காதலா காதலா ஆகியப் படங்களில் ஸ்ரீவித்யா பணிபுரிந்திருக்கிறார். 2003ஆம் மார்கப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருந்தார், நடிகை ஸ்ரீவித்யா. இக்கால கட்டத்தில் திரையுலகைச் சார்ந்த யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில், ஸ்ரீவித்யாவின் அழகிய உடலை புற்றுநோய் தின்று அவரை முற்றிலும் சிதைத்து இருந்தது. ஸ்ரீவித்யா பற்றி அறிந்த கமல்ஹாசன், திருவனந்தபுரம் சென்று நடிகை ஸ்ரீவித்யாவை நலம் விசாரித்தார். அன்பைப் பரிமாறினார். பின் சில நாட்களில் ஸ்ரீவித்யா, 2006ஆம் ஆண்டு அக்டோபர் 19அன்று, தனது 53வயதில் மாலை 7:45 மணிக்கு உயிரிழந்தார்.
உயிலில் கருணையை இறைத்த நடிகை ஸ்ரீவித்யா: 17 ஆகஸ்ட் 2006ஆம் ஆண்டு, ஸ்ரீவித்யா, தான் சினிமாவில் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை, தனது மறைவுக்குப் பின் யாருக்குச் செல்ல வேண்டும் என உயிலாக மாற்றினார்.
சினிமா நடிகர் கே.பி.கணேஷ் குமாரை நம்பி, அவர் பொறுப்பில் தான் செய்யவேண்டிய தர்மகாரியங்களை நடத்த முன்மொழிந்து இருந்தார். அதில், ’திறமையான மாணவர்களுக்கு இசை மற்றும் நடனப்பள்ளியைத் தொடங்கவும், வறுமையில் படிக்கும் மாணவர்களுக்கு உதவவும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி வழங்கவும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் பணிகளை செய்ய’ அவரை முன்மொழிந்திருந்தார். மேலும் தனது மறைவுக்குப் பின், தனது சகோதரரின் குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும், தன்னைப் பார்த்துக்கொண்ட வேலையாட்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என நடிகை ஸ்ரீவித்யா எழுதியிருந்தது கலங்க வைக்கும் வகையில் இருக்கும் நிகழ்வாகும்.
வறுமையில் ஜெயித்து சொந்த வாழ்க்கையில் தோற்ற, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், அவரது இறுதிச்சடங்கின்போது கேரள அரசு வழங்கிய இறுதி அரசு மரியாதை தான்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்