23 Years of ரிதம் - 2 காதல்கள்.. விபத்து.. மறுமணம்: பேசதாதைப் பேசிய ரிதம்!
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத ரிதம் படம் என்ன சொல்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
தமிழ் சினிமா சில காலங்களில் தரமான படைப்புகளை உருவாக்கும். பல புதிய பரீட்சார்த்த படங்களுக்கு வாய்ப்பு அளிக்கும். அத்தகைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகியும் காலம் கடந்தும் நிற்கும். அப்படியொரு படம் தான், ரிதம். காலங்கள் கடந்து தமிழ் விழுமியக் கூறுகளை, மனித மனங்களின் வழியாக காதல் எனும் பரிபாஷையில் உரையாடல் நிகழ்த்திய திரைப்படம். இப்படத்தை இயக்குநர் வஸந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அர்ஜூன், மீனா,ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், வத்சலா ராஜகோபால், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
கதைக்கரு: தனது மனைவியை ரயில் விபத்தில் பறிகொடுத்த கார்த்திக்கும், தனது கணவரை அதே ரயில் விபத்தில் பறிகொடுத்த சித்ரா என்னும் கதாபாத்திரமும் மும்பையில் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்கின்றன. இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் மோதலில் துவங்கும் நட்பு, நாளடைவில் அவர்களது மறுமணம் குறித்து சிந்திக்கச் செய்கிறது. இருவரும் இறுதியில் இணைந்தார்களா என்பதே ரிதம் படத்தின் எளிமையான கதைக்கரு. இதில் கார்த்திக் என்னும் நாளிதழின் புகைப்படக்காரர் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூனும், இறந்துபோன அவரது மனைவி கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்திருந்தனர். அதேபோல், சித்ரா கதாபாத்திரத்தில் நடிகை மீனாவும், அவரது மறைந்துபோன கணவராக வங்கி அதிகாரி வேடத்தில் ரமேஷ் அரவிந்தும் நடித்திருந்தனர். இப்படத்தில் தனது இறந்துபோன கணவரின் முந்தைய ஆசைப்படி, ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கத் தொடங்குவார், சித்ரா. வாரிசுதாரர் என்னும் அடிப்படையில் கணவரின் வங்கி வேலையினைப் பெற்று, மும்பையில் தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வருவார், சித்ரா. அப்போது வளர்ப்பு மகனுக்கும் கார்த்திக்கும் இடையே தான் முதலில் நட்பு தொடங்கும். கார்த்திக்கும், சித்ராவும் ஒரே ரயில் விபத்தில் தனது துணையை இழந்தவர்கள் என்பதை அறியும்போது, கார்த்திக்கிற்கு சித்ரா மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. இதனை தனது அப்பாவாக நடித்த நாகேஷிடம் போய் சொல்வார். அதன்பின், நாகேஷ் நேராகச் சென்று, சித்ராவாக நடிக்கும் மீனாவிடம், தன் மகனின் திருமணவிருப்பத்தைத் தெரிவிப்பார். இடையில் சித்ராவுக்கும் சில பாலியல் தொல்லைகள் நடக்கும். அதன்பின், தனக்கும் இத்திருமணத்தில் உடன்பாடு இருக்கிறது என்பதை, தனது வளர்ப்பு மகன் மூலம் தெரியப்படுத்துவார், சித்ரா. இதற்கிடையே பணிமாறுதலால் யாரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டு ஊட்டிக்குச் செல்லும் சித்ராவை, கடைசியில் கார்த்திக் சந்திக்கிறார். இறுதியில் சித்ரா, கார்த்திக், வளர்ப்பு மகன் ஆகிய மூவரும் சேர்ந்தனரா என்பதே கிளைமேக்ஸ்.
இப்படத்தின் முக்கியப் புள்ளியாக நடித்த அர்ஜூன், மீனா ஆகிய இருவரின் நடிப்பும் மிகவும் சரியாகப் பயன்படுத்தப்பட்டது. 2000-களில் மறுமணம் குறித்துப் பலரும் பேசத் தயங்கியதை கவிதையாகப் பேசி பலரையும் ஈர்த்தது, ரிதம். இப்பட வெளியீட்டிற்குப் பின் பலரும் மறுமணம் செய்துகொண்டனர்.
பாடல் தந்த சிறப்பு: படத்தில் 5 விதமான பாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இவை 5 விதமான பஞ்சபூதங்களின் சாயலில் படமாக்கப்பட்டுள்ளன. இதனை எழுத்துக்களில் வைரம் தீட்டியவர், கவிஞர் வைரமுத்து. மொத்தத்தில் இப்படத்தின் ஆல்பம், சூப்பர் டூப்பர் ஹிட்.
23 ஆண்டுகளைக் கடந்தாலும், ரிதம் இப்போது பார்த்தாலும் ஒரு புத்துணர்வைத் தரும். அதுதான் ரிதம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்