அமரன் திரையிட்ட திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஓடி வந்த காவல்துறை.. எங்கே நடந்தது? முழு விபரம் என்ன?
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், ஓடும் திரையரங்கில் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசி சென்று இருக்கின்றனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த திரையரங்க நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து வந்த போலீசார் திரையரங்கின் சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன பிரச்சினை
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். ராணுவத்தில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்மறை விமர்சனங்கள்
இந்தப்படத்தில், மேஜர் முகுந்த்தின் சாதிய அடையாளம் திட்டமிட்டே மறுக்கப்பட்டுள்ளது, சிஆர்பிஎஃப் வீரர்கள் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது, 44 ஆர் ஆர் குழுவின் முழக்கம் தவறானது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருக்கிறார்கள் என பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக எஸ் டி பி ஐ கட்சியினர் இந்தப்படத்தை தயாரித்த கமல்ஹாசன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது ஒரு பக்கம் இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு திரைப்படம் பிடித்திருந்ததால், அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்ற படம்
இந்தப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார்.
அந்த விளக்கத்தில், “இந்தப் படம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ. ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் படக்குழுவிடம் உள்ளது.
இதுமட்டுமின்றி, இந்தப் படத்தை பார்த்து ராணுவ வீரர்களும் பாராட்டியிருக்கின்றனர். யாராக இருந்தாலும் ஒரு படம் வெளியான உடன் அதைப்பற்றி பேசுபவர்கள், ஒரு தகவலை சொல்லவும் வருவர், அவர்கள் ஒரு தகவலைக் கூறும் முன் அது சரியான தகவல்கள் தானா என்று சரிபார்த்து பேச வேண்டும்.
சொந்தக் கருத்துகளை திணிக்க மாட்டேன்
'போல் பஜ்ரங் பாலி கி ஜெய்...' என்ற முழக்கம் 44 ஆர்.ஆர்.குழுவுடைய போர் சம்பந்தப்பட்ட ஒன்று. அதை படத்தில் மாற்றி எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் அது மாபெரும் தவறாகிவிடும். அமரன் திரைப்படம் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்துகளையும் சொல்லும் படம் கிடையாது.
எனக்கும் சில கருத்துக்கள் இருக்கிறது. அதை படத்தின் கதாபாத்திரத்தில் திணிக்கக்கூடாது என்பதில் ஒரு இயக்குநராக மிகவும் தெளிவுடன் இருக்கிறேன். சினிமாக்காரர்களுக்கு சமூக பொறுப்புகளும் இருக்கிறது. அதற்கு உட்பட்டு இந்த அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, 'போல் பஜ்ரங் பாலி கி ஜெய்...' என்ற முழக்கம் குறித்து முன்னாள் இராணுவ வீரர் சொல்வது தவறான தகவலாக இருக்கலாம் என நினைக்கிறேன்" என்று பேசினார்.
டாபிக்ஸ்