மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..

மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..

Malavica Natarajan HT Tamil
Dec 30, 2024 06:30 AM IST

கதாநாயகி, குணச்சித்திர நடிகை என தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த நடிகை கௌசல்யாவின் பிறந்தநாள் இன்று.

மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..
மாடர்ன்.. ஹோம்லி.. டிவைன்.. எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு.. சிங்கிள் ஹீரோயின் கௌசல்யாவின் பர்த்டே ஸ்பெஷல்..

முதல் படத்திலேயே மெகா ஹிட்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கௌசல்யா சினிமாவில் அறிமுகமாகும் முன் கவிதா என்ற பெயரிலே அழைக்கப்பட்டு வந்தார். மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் ஏப்ரல் 19 எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார்.

இதையடுத்து தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் என்ட்ரி தந்தார். முதல் படமே மெகா ஹிட் அடிக்க அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார். இதனால் கௌசல்யா கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் முரளியுடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்தப் படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்

இந்த படத்தையடுத்து நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, வானத்தை போல் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இன்றளவும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் பெரும்பாலும் குடும்பப் பாங்கான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்தே நடித்து வந்தார். சில படங்களில் தான் மாடர்ன் உடையிலும் குறும்புக்கார பெண்ணாகவும் காட்சி தருவார்.

இவர் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து நடித்த சொல்லாமலே படத்தைப் பார்த்து எத்தனையோ பேர் தியேட்டரிலேயே கண்ணீர் சிந்தி இருக்கின்றனர். இவரும் லிவிங்ஸ்டனும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்று படத்தையும் மாபெரும் வெற்றி பெறச் செய்தனர்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்

விஜய், சூர்யா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் பிரபுதேவாவுடனான இவரது கெமிஸ்ட்ரி பலரது பேவரைட். பார்ப்பதற்கு எதிர் வீட்டு பெண் போல் எதார்த்தமாக இருப்பதால் இவரை மக்களுக்கு விரைவாகவே பிடித்துப் போய்விட்டது. அதன் விளைவே 90களின் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகைகளில் ஒருவராக கௌசல்யா வலம் வந்தது.

இவர் குடும்ப படங்களில் மட்டுமல்லாமல், ராஜ காளியம்மன், தாலி காத்த காளியம்மன் போன்ற அம்மன் படங்களில் நடித்து மாபெரும் பக்திமானாக பெண்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது படத்தின் பாடல்கள் இன்றும் பலரது பேவரைட் லிஸ்ட்டில் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ரீ என்ட்ரி தந்த கௌசல்யா

இவர், பூவேலி எனும் திரைபடத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். மேலும் இவர் முன்னணி கதா பாத்திரங்கள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த கௌசல்யா நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தோஷ் சுப்பிரமணியன் திரைப்படத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நட்பே துணை, 4 லெட்டர்ஸ், ராங் டீ, உத்ரா, ஹீரோ,ராதா கிருஷ்ணா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயத்தில், இவர் நாடகங்களிலும் முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்றும், துணை கதாப்பாத்திரங்களை ஏற்றும் நடித்து வருகிறார்.

சிங்கிள் தான் பெஸ்ட்

சினிமாவில் இத்தனை சாதனைகளையும் பெருமையையும் பெற்ற இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இவருக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்த சமயத்தில் அது ஏதோ ஒரு காரணத்தினால் திருமணமே நின்று போனது. அந்த சம்பவத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த கௌசல்யா திருமணம் குறித்த பேச்சையே முற்றிலும் தவிர்த்து வந்தார்.

இது காலப்போக்கில் தனியாக இருப்பதே சுகம் என்ற நிலைக்கு அவரைத் தள்ளியது. குடும்பம், குழந்தைகள் என தன் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு சுயநலமாக வாழ தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் கருத்து தெரிவிக்கும் அளவு மாறியது.

கிசுகிசுக்கள்

இருந்தாலும் இவரை சுற்றி வரும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. கௌசல்யாவிற்கு கிரிக்கெட் வீரருடன் தொடர்பு உள்ளது. அதனால் தான் சிங்கிளாகவே இருக்கிறார் என பல புரளிகள் வெளிவந்த சமயத்திலும் அவர் அந்த செய்திகளை எல்லாம் முற்றிலும் மறுத்துவிட்டார். தனக்கு உடலில் சில ஆரோக்கிய குறைபாடுகள் இருந்ததால் சில ஆண்டுகள் உடல் பருமனுடன் காணப்பட்டேன். அதனால் தான் திருமணம் செய்யவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இப்படி புகழுக்கும் கிசுகிசுக்கும் நடுவில் சிக்கி வரும் கௌசல்யா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.