61 Years Of Paava Mannippu: சிவாஜி படம் தான்.. ஆனால் வெற்றி பெற்றது சந்திரபாபு!
J.P.Chandrababu: தான்தான் நாயகனாக நடிப்பேன் என்று கூறியபடி சந்திரபாபு, அவ்வுரிமையை ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அளித்தார். படத்தின் இயக்குநராக பீம்சிங் நியமிக்கப்பட்டார்.
பாவமன்னிப்பு திரைப்படம் 61ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிவாஜியின் வெற்றி படங்களிலும், நடிப்பில் அவருக்கு பேர் வாங்கித் தந்த படங்களிலும் முக்கியமான படம், பாவமன்னிப்பு. ஆனால், அந்த படம் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் பலருக்கு தெரியாது. இதோ அப்படியொரு தகவல்:
பெரிய வெற்றிப் படமான "பாவமன்னிப்பு" படத்தின் கதையை எழுதியவர் சந்திரபாபுதான். அந்த கதைக்கு அவர் இட்டபெயர் "அப்துல்லா" என்பதாகும். தானே தயாரித்து, தானே நாயகனாக நடிப்பதற்காக அக்கதையை எழுதிச் சில காட்சிகளையும் படமாக்கினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக, அவரால், படத்தைத் தொடர்ந்து எடுக்க இயலவில்லை. ஏ.வி.எம் நிறுவனம், இவ்விஷயம் தெரிந்து, சந்திரபாபுவிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கியது.
தான்தான் நாயகனாக நடிப்பேன் என்று கூறியபடி சந்திரபாபு, அவ்வுரிமையை ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அளித்தார். படத்தின் இயக்குநராக பீம்சிங் நியமிக்கப்பட்டார். அவர் கதையை படித்து விட்டு " சிறப்பான கதை! ஆனால், இந்த கதையில்வரும் நாயகன் வேடம், பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டக்கூடியதாக இருப்பதால், அந்த வேடத்தைச் சந்திரபாபுவால் செய்ய இயலாது; சிவாஜி தான் இதற்குச் சரியான தேர்வாக இருப்பார்" என்று கூறிவிட்டார். தவிர, கதையிலும் சில சிறுசிறு திருத்தங்களைச் செய்தார்.
ஏ.வி.எம் நிறுவனத்திற்கோ தர்மசங்கடமான சூழல். நாயகனாக சந்திரபாபுவை நடிக்க வைத்தால்தான், அவர் கதையைப் படமாக்க முடியும். ஆனால் பீம்சிங் இவ்வாறு கூறிவிட்டார். சிவாஜியை நாயகனாக்கினால், சந்திரபாபு கதையைப் படமாக்குவது எப்படி? என்பதுதான் அது.
பீம்சிங், சிவாஜியுடன் பேசி, சிவாஜி சந்திரபாபுவிடம் பேசி மனதை மாற்ற, சந்திரபாபு, சிவாஜிக்காக பெருந்தன்மையுடன் தன் கதையை விட்டுக்கொடுத்தார். "பாவமன்னிப்பு" என்ற பெயர்மாற்றத்துடன் தயாரிக்கப்பட்ட அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. துரதிர்ஷ்டம் என்னவென்றால், படத்திலும் கதையின் உரிமையாளர் என்று சந்திரபாபு பெயரைப் போட்டு கௌரவிக்கவில்லை; பட வெற்றிவிழாவிலும், சந்திரபாபுவிற்கு பரிசுகள் வழங்கவில்லை. ஆனால், சந்திரபாபு, இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தனது கதை, சிவாஜியின் அருமையான நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மனநிறைவே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
சந்திரபாபுவின் பல குணங்கள் பிடிக்காவிட்டாலும், அவரிடமிருந்த சில நல்ல குணங்களுள், இந்த பெருந்தன்மை குணம் மிகவும் கவர்ந்தது.
-Annadurai Duraisamy முகநூல் பதிவு
டாபிக்ஸ்