60 ஆண்டை கடந்த காதல்: ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ அந்த காலத்து ‘பூவே உனக்காக’
Nenjil Or Aalayam Movie: இன்றோடு 60 ஆண்டுகளை கடந்திருக்கிறது நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம். உண்மையில் , நம் நெஞ்சங்களில் ஆலயமாக தான் இருக்கிறது அந்த திரைக்காவியம்!
பழைய படங்களைப் பார்த்தலே, இன்றைய தலைமுறைக்கு ‘அதெல்லாம் ஓல்டு பேஷன்’ என்று ஒதுங்கிப் போவதுண்டு. உண்மையில், பழைய படங்களில் சொல்லிய காதலும், சொல்லிய அன்பும், சொல்லிய உறவும் இன்று இருக்கும் சினிமாவில் ஒரு சதவீதம் கூட இருக்காது. காதல் என்றால், கட்டிப்பிடிப்பது, உதட்டை கடிப்பது, கட்டிலில் உறவாடுவது என காட்டிக்கொண்டிருக்கும் இந்த காலகட்ட சினிமாவில், காதல் என்றால் இது தான் என்று பொட்டில் அடித்தது மாதிரி சொன்ன படங்கள் அன்று பல.
அப்படி ஒரு படம் தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க, முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா, குட்டிபத்மினி, வி.எஸ்.ராகவன் நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம், இதே நாளில் ஜனவரி 26 ம் தேதி 1962 ம் ஆண்டு வெளியானது.
ஒரு மருத்துவமனை செட்டில் வைத்து ஒரு மாதத்திற்குள் முழு படத்தையும் முடித்திருப்பார் ஸ்ரீதார். இது அப்போது, பிரபலமாக பேசப்பட்டது. இப்போது கதைக்குள் போவோம்.
கல்லூரியில் ஒரு காதல் ஜோடி. படிப்பு முடிந்ததும், மீண்டும் சந்திப்போம் என கூறி பிரிகிறாள் காதலி. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறாள். ஆனால், அவளோடு அவள் கணவனும் இருக்கிறான். காதலியை எண்ணி, திருமணம் செய்யாமல் காத்திருக்கும் காதலன், இப்போது மருத்துவராக இருக்கிறான். அந்த மருத்துவரிடம் தன் கணவருக்கு வைத்தியம் பார்க்க வருகிறாள் காதலி.
இருவருக்கும் அதிர்ச்சி. தன் காதலியின் கணவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று இரவும், பகலாக உழைக்கிறான் காதலன். காதலியோ, ‘தன் பழைய காதலை நினைவில் வைத்து ,கணவனுக்கு ஏதாவது தீங்கு செய்துவிடுவானோ’ என்கிற பயத்தில், காதலன் மீது சந்தேகத்திலேயே இருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவனுக்கு உண்மை தெரியவர, ‘தனக்கு ஏதாவது நேர்ந்தால், டாக்டரை திருமணம் செய்து கொள்ளுமாறு’ மனைவிடம் கூறுகிறார். ஆனால், காதலியோ வாழ்ந்தாலும், செத்தாலும் உங்களோடு தான் என பயணிக்கிறாள்.
இறுதி நாளில், கணவருக்கான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடக்கிறது. நம்பிக்கையில்லாமல் அனுப்பி வைக்கிறாள் காதலி. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு அதை மகிழ்ச்சியோடு தெரிவிக்க வரும் டாக்டரிடம், முகம் கொடுத்து பேச மறுக்கிறாள் காதலி.
அவள் பெயரை உச்சரித்துக் கொண்டே ரத்த வாந்தி எடுத்து உயிரை விடுகிறார் டாக்டர். உயிரை விடும் போது, காதலி பெயரை ‘சீதா… சீதா…’ என்று கூறிக்கொண்டே உயிரை விடும் காதலனின் அந்த குரல், படம் முடித்து வெளியேறும் அத்தனை பேரையும் கனத்த இதயத்தோடும், கண்ணீரோடும் தான் வெளியேற்றியது.
டாக்டராக கல்யாண்குமார், கணவராக முத்துராமன், காதலியாக தேவிகா. மூன்று பேரும், மூன்று மூச்சாக படத்தை தாங்கியிருப்பார்கள். இடையில இளைப்பாற நாகேஷ் , மனோரமா கதாபாத்திரங்கள் இருக்கும். இசையை சொல்லவே வேண்டாம். அனைத்தும் அப்படியான பாடல்கள்.
பல முக்கோண காதல் கதைகளை எடுத்த ஸ்ரீதரால் கூட, மீண்டும் ஒரு நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அந்த படம் காலத்தால், காதலால் அழிய முடியாத காவியம். இன்றோடு 60 ஆண்டுகளை கடந்திருக்கிறது நெஞ்சில் ஓர் ஆலயம். உண்மையில் , நம் நெஞ்சங்களில் ஆலயமாக தான் இருக்கிறது அந்த திரைக்காவியம்!
டாபிக்ஸ்