Kanimuthu Paappa: இதுதான் நல்ல நட்பு - நல்ல நண்பன் யார் என்பதை உணர்த்திய கனிமுத்து பாப்பா
52 years of Kanimuthu Paappa: கனிமுத்து பாப்பா இன்றுடன் வெளியாகி 52 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் தான் எஸ்.பி முத்துராமன். தமிழ் சூப்பர் ஸ்டார்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இவர். வெவ்வேறு விதமான வித்தியாச கதைகளைக் கொடுக்கும் இயக்குநர்களில் இவர் வித்தியாசமானவர்.
அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் கனி முத்து பாப்பா. தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களான முத்துராமன் மற்றும் ஜெய்சங்கரை வைத்து இந்த திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றினார் எஸ்.பி முத்துராமன்.
1972 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படமாகும். இந்த திரைப்படத்தில் தான் ஜாம்பவான் இயக்குநர் எஸ்.பி முத்துராமன் இயக்குநராக அறிமுகமானார்.
நட்பின் கதை
நண்பர்களாக இருக்கும் முத்துராமன் மற்றும் ஜெய்சங்கர் இருவருக்கும் திருமணம் ஆகின்றது. முத்துராமனின் மனைவி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தவுடன் இறந்து விடுகிறார். மனைவி இறந்துவிட்ட விரக்தியில் இரண்டு குழந்தைகளையும் அனாதையாக முத்துராமன் விட்டு விடுகிறார்.
நண்பன் செய்த காரியத்தை ஏற்க முடியாத ஜெய்சங்கரும் அவரது மனைவி லட்சுமியும் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக வளர்க்கின்றனர். நண்பனுக்கு வாழ்க்கையை உணர்த்தி அந்த குழந்தைகளை திரும்பவும் முத்துராமனிடம் சேர்ப்பது தான் இது திரைப்படத்தின் முழு கதையாகும்.
இந்த திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். விரக்தியில் குழந்தைகளை விட்டு நகரும் தந்தையை அவரது நண்பன் திருத்தி குழந்தைகளை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும் கதை மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு டிவி ராஜு இசையமைத்திருப்பார். இதில் இடம் பெற்ற ராதையின் நெஞ்சமே என்ற பாடல் அப்போது மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. 70களில் பிறந்தவர்களுக்கு இன்று வரை இது ஃபேவரைட் பாடல் ஆகும். இந்தப் பாடல் ஷர்மிலி என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
திருமணமான பிறகும் சீரழிந்த நண்பனின் வாழ்க்கையைச் சரியான முறையில் நெறிப்படுத்தி நல்ல முறையில் வாழ்க்கையில் அமைத்துக் கொடுக்கும் ஒரு நல்ல நண்பன் கிடைப்பது மிகவும் அரிதாகும். அப்படிப்பட்ட சிறந்த கருத்தை மக்களிடத்தில் அப்போதே கொடுத்த திரைப்படம் தான் இந்த கனிமுத்து பாப்பா.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 52 ஆண்டுகளாகின்றன. ஒரு நல்ல நண்பனின் காதல் என்னவென்றால் தன் நண்பனின் வாழ்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவது தான். அப்படிப்பட்ட நல்ல நட்பை எடுத்துரைத்த எந்த திரைப்படமும் காலத்தால் அழிக்க முடியாதவை. அந்த வகையில் கனிமுத்து பாப்பா திரைப்படமும் காலத்தால் அழியாத காவியமாகும்.