Kai Kodukkum Kai: ஹீரோவாகவும், வில்லனாகவும் ஒரே கதையில் கலக்கிய ரஜினி..'கை கொடுக்கும் கை' ரிலீஸான நாள் இன்று!
40 years Of Kai Kodukkum Kai: ஹீரோவாகவும், வில்லனாகவும் ரஜினி நடித்த சிறப்பை பெற்றிருக்கிறது 'கை கொடுக்கும் கை'. இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு இதே ஜூன் 15-ல் வெளியானது. இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

வேகமான நடை, விதவிதமான உடல் பாவனை, வித்தியாசமான வசன உச்சரிப்பு, வியக்க வைக்கும் நடிப்பு, விறுவிறுப்பான சண்டை என ரஜினிகாந்தின் ஸ்டைல் எப்போதும் வித்தியாசமானது. இந்த மாறுபட்ட ஸ்டைல் மூலம் இன்றைக்கும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில், அவரது நடிப்பில் 1984 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியான ‘கை கொடுக்கும் கை’ திரைப்படம் ரஜினிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.
மனதை கவர்ந்த ரேவதி
மகேந்திரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'கை கொடுக்கும் கை' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரேவதி, ராஜ்யலட்சுமி, வி.எஸ்.ராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், சின்னி ஜெயந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் 'திரிகோணம்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் சின்னி ஜெயந்த். 'கை கொடுக்கும் கை' திரைப்படத்தில் பார்வையற்ற ஒரு பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார்.
வில்லன் டூ ஹீரோ
கன்னடத்தில் இயக்குனர் புட்டண்ணா கனகல் இயக்கிய 'கதா சங்கமா' என்ற படத்தில் மூன்று விதமான கதைகள் இடம்பெற்றிருக்கும். அதில், இடம்பெற்றிருந்த 'முனிதாயி' என்ற படத்தின் கதையை தமிழில் ஒரு முழு நீள படத்துக்கான கதையாக மாற்றினார் இயக்குனர் மகேந்திரன். செல்வந்தர் ஒருவர் கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அவர் இல்லாத சமயத்தில் ஒரு இளைஞர், அந்த பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறார். இந்த கதையை தமிழில் ரஜினி படமாக திரைக்கதை அமைக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'முனிதாயி' படத்தில் பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் வில்லன் கேரக்டரில் நடித்தவர் ரஜினி. ஆனால், 'கை கொடுக்கும் கை' படத்தில் அவர் ஹீரோ. அந்தவகையில் ஹீரோவாகவும், வில்லனாகவும் ரஜினி நடித்த சிறப்பை இந்தப்படம் பெற்றிருக்கிறது.
முத்திரை பதித்த இயக்குனர்
படத்தில் பெரும்பாலான காட்சிகள் அன்றைய கால ரஜினி படங்களைபே போல மிக யதார்த்தமாக இருக்கும். கமர்ஷியல் விஷயங்களுக்காக முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் படத்துக்கான திரைக்கதையாக இந்த கதையை மாற்றி இருந்தாலும் முடிந்தவரை அதில் தனது முத்திரையை பதித்திருப்பார் இயக்குனர் மகேந்திரன். இசைஞானி இளையராஜா இசை படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது. குறிப்பாக 'தாழம்பூவே வாசம் வீசு' என்னும் பாடல் பலருடைய மனம் கவர்ந்தது. இந்த ஒரு பாடல் மூலம் ரஜினிகாந்த் - ரேவதியின் நெருக்கத்தை ஒரே பாடலில் நமக்கு காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
40 ஆண்டுகள் நிறைவு
நடிகர் விஜயகுமார் தயாரிப்பில் 1984 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது 'கை கொடுக்கும் கை'. இப்படம் வெளிவந்து இன்றோடு 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால், 40 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் ரஜினிகாந்தின் நடிப்பில் இந்தப்படமும் ஒரு மைல்கல். ஒரு மாஸ் ஹீரோ சமூக பிரச்னையை, கமர்ஷியலாக சொன்ன விதத்தில் 'கை கொடுக்கும் கை' ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்திருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்