தமிழ் செய்திகள்  /  Entertainment  /  33 Years Of Sigaram 'Sangeet Is Sanniti.. The Sangathi That Tells Happiness' Is The Peak Of The Peak!

33 Years of Sigaram: 'சங்கீதமே சந்நிதி.. சந்தோசம் சொல்லும் சங்கதி' என்றும் சிகரத்தில் சிகரம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 11, 2024 05:30 AM IST

1991 ஜனவரி 11 அன்று வெளியான இந்த படம் இன்னும் ரசிகர்கள் மனதில் சிகரத்தில் தான் இருக்கிறது.

சிகரம்
சிகரம்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரபல பாடகர் தனது மனைவி இறந்து விட குடிகார மகனின் எதிர்காலத்தை நினைத்து பக்கவாதத்தில் படுத்து விடுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க வரும் டாக்டர் பாடகரின் முன்னாள் காதலி.. குணமாகி மீண்டாரா.. மகனின் நிலை என்ன என்ற ஒற்றை கருவை எடுத்து கொண்டு இயக்குனர் அனந்து தனது திரைக்கதை வசனம் மூலம் பார்ப்போரை பரவசப்படுத்தி இருப்பார். பாடகராக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கதையின் நாயகனாகவும் ராதா அவரின் முன்னாள் காதலியாகவும் ரேகா மனைவியாகவும். ஆனந்த்பாபு மகனாகவும் நடித்த படம். இவர்களோடு நிழல்கள் ரவி,ரம்யா கிருஷ்ணன், சார்லி,டெல்லி கணேஷ், நாசர்,மனோ நடித்திருந்தார்கள்.

எஸ்.பி.பி.பிரபல பாடகராகவே நடித்திருப்பது அவருக்கும் பார்க்கும் நமக்கும் இயல்பாக இருக்கிறது. அவரின் மனைவி விபத்து ஒன்றில் காலமாகிவிடுகிறார். மகன் குடி போதைக்கு அடிமையாக உள்ளார். அதற்கு காரணம் ஆக மகனுக்கு ஒரு காதல் தோல்வி கதை உண்டு. தொடர் மன உளைச்சல் பாடகரை பக்கவாதம் வரை கொண்டு செல்கிறது. அவரின் சுவாசமான இசையும் பாடலும் நின்று போகிறது.

வீழ்ந்து போயிருக்கும் இசை கலைஞனுக்கு சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர் ராதா கண் கலங்கி நிற்கிறார்.. ராதாவின் பழைய காதலன் தான் எஸ். பி.பி. தனது காதலனையும் காதலனின் மகனையும் மீட்டெடுத்தாரா என்பதை நோக்கி நகரும் சிக்கலான கதையில் ராதா தனது மெச்சூர்டான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சார்லி நகைச்சுவை க்கு பயன்பட்டிருப்பார். நிழல்கள் ரவி எஸ்.பி.பி. சக போட்டி பாடகராக அவரது டியூன்களை தமதாக்கி கொண்டு இயல்பாக நடித்திருப்பார். 

இந்த படத்தின் வலிமை என்பது படத்தில் வரும் பாடல்கள்.. ஒன்றல்ல இரண்டல்ல.. பதினைந்து பாடல்கள்.. பல இடங்களில் பாடலின் குரலுக்கு பதிலாக இசையே காட்சிகளை நகர்த்தும் அற்புதம். எஸ்.பி.பி. தான் இசை அமைப்பாளர். வைரமுத்து அனைத்து பாடல்களும் எழுதி இருக்கிறார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே... உன்னை கண்ட பின்பு தான்.. அகரம் இப்போ சிகரமாச்சு.. இதோ.. இதோ.. என் பல்லவி என்ற பாடல்கள் இன்றும் அடிக்கடி நம் காதில் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள்..

படத்தின் இறுதியில் ஐந்து நிமிட கிளைமாக்ஸ் ஐ வித்தியாசமான முறையில் அமைத்து இருப்பார் இயக்குனர்.. அனந்து பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய போதிலும் இயக்கிய ஓரே படம் இதுதான்.. கடைசி காட்சியில் சங்கீதமே சன்னதி என்ற பாடலுக்கான இசை கோர்ப்பை மேடையில் எஸ். பி.பி. செய்து கொண்டு இருக்க பிரிந்து போன ஆனந்த் பாபுவின் காதலியும் இணையும் தருணத்தில் ராதா மீண்டும் தனது முன்னாள் காதலை தொடர்வதாக நிறைவு செய்து இருப்பார். அதேபோல் கதையில் அப்பா-மகன் இருவருக்கான முறிந்து போன காதல் காட்சிகள் பிளாஷ் பேக் ஆக அமைக்கப்பட்டிருக்கும்.. இந்த மாதிரி திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் மூலம் இந்த படம் இன்னும் ரசிகர்கள் மனதில் சிகரமாக உயர்ந்து நிற்கிறது.

அகரம் இப்போ சிகரமாச்சு. தகரம் இப்போ தங்கமாச்சு.. காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு..  என்ற வரிகள் போல எஸ்.பி.பி. என்ற சிகரம் காற்றில் கலந்தாலும் கூட அவர் இசையும் குரலும் நம் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கும்.

இந்த படம் 33 ஆண்டுகள் கடந்தும் கூட சிகரமாக நிலைத்து நிற்க வைத்த பெருமை மொத்த படத்தையும் தனது தோள்களில் சுமந்த எஸ்.பி.பி. என்ற அந்த சிணுங்கள்களின் செல்ல சிநேகிதனான மகா கலைஞனுக்கே சேரும் என்று சொல்லலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.