30 Years of Jaihind : 90ஸ் கிட்ஸ்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய ‘ஜெய்ஹிந்த்’ 30 ஆண்டுகளிலும் மிரளவைக்கும் அர்ஜூனின் அதிரடி!
30 Years of Jaihind : 90ஸ் கிட்ஸ்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய திரைப்படம் என்றால் அது ‘ஜெய்ஹிந்த்’. 30 ஆண்டுகளை கடந்தும் நினைவில் நிற்கும் மிரளவைக்கும் அர்ஜூனின் அதிரடிப்படம்.

இன்றும் சுதந்திர தினமோ அல்லது குடியரசு தினமோ என்றால் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் குரலில் ஓங்கி ஒலிக்கும் ‘தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த், தாயகம் காத்திட தன்னலம் போற்றிட சொல்லுது ஜெய்ஹிந்த்’ என்ற பாடலை கேட்டவுடனே நமது உள்ளங்களில் தேசப்பற்று பொங்கி பெருக்கெடுத்து ஓடும்.
அத்தனை உணர்வுகளை இந்த ஒரு பாடல் நம்முள் எழுப்பும். தாய் நாட்டின் மீதும், தாயின் மீதும் நாம் மாறாத அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு எப்போதும் உணர்த்தும் படமாக ஜெய்ஹிந்த் உள்ளது.
இந்தப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருப்பார். 1994ம் ஆண்டு மே 30ம் தேதி இந்தப்படம் வெளியானது. இந்தப்படம் வெளியாகி சரியாக 30 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்தப்படம் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இயக்குனரும் அர்ஜூன்தான். படம் தேசப்பற்றை இளைஞர்களுக்கும் ஊட்டும் வகையில் அமைந்திருக்கும்.
கதை என்ன?
போலீஸ் துணை கமிஷ்னர் பாரத், நாட்டுப்பற்று அதிகம் உள்ள ஒரு அதிகாரி. இவரது சகோதரர் ஸ்ரீராதை தீவிரவாத குழுவினர் கொலை செய்துவிடுவார்கள். அந்த தீவிரவாத குழுவினர்தான், தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சரையும் கொலை செய்திருப்பார்கள்.
அவருடன் பணிபுரிபவர் இன்ஸ்பெக்டர் ப்ரியா, அவருக்கு பாரத்தின் மீது காதல் இருக்கும். ப்ரியாவின் தந்தை தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். நாட்டிற்குள் இருந்துகொண்டு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும், அந்த தீவிரவாதக்குழுவை வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும். அதற்கான சிறப்பு அதிகாரியாக பாரத்தை நியமிக்கும்.
ஆனால் ஏற்கனவே ஒரு மகனை இழந்த பாரத்தின் தாய் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால், அவருக்கு தெரியாமல் பாரத்தை இதற்கு செல்ல முடிவெடுப்பார்கள். பாரத்தின் அண்ணனுக்கு மனைவியும், மகனும் இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல், அவர் செல்வார்கள். அவருடன் நான்கு கைதிகளையும் அழைத்துக்கொண்டு செல்வார்.
இந்த கைதிகள் அனைவரும் தெரியாமல் குற்றம் செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு, நன்னடத்தை பட்டியலில் உள்ள கைதிகள் ஆவார்கள். இவர்கள் அனைவருடனும், அர்ஜூன் அந்த தீவிரவாத குழுவை நோக்கி செல்லும் வழியில் கான்ஸ்டபிள் கோட்டைச்சாமியும், ப்ரியாவும் சேர்ந்துகொள்வார்கள்.
காமெடி ட்ராக் எப்படி?
கோட்டைச்சாமி கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார். அவருக்கு பகலில் உறங்கும் வியாதியும், அப்போது கனவில் செந்தில் வந்து அவருடன் தகராறு செய்து, அவர் அந்த கனவுக்கு நேரில் ரியாக்ட் செய்து வாங்கிக்கொள்ளும் பிரச்னைகள்தான் படத்தின் காமெடி ட்ராக். இந்த காமெடிகள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. அர்ஜூனுக்கு இணையாக ரஞ்சிதாவும் நடித்திருப்பார்.
க்ளைமேக்ஸ் என்ன?
இந்நிலையில் ப்ரியாவும், பாரத்தும் இணைவார்களா? தீவிரவாத குழு அழிக்கப்படுமா? தீவிரவாத குழுவை இயக்குவது யார் என்பது கண்டுபிடிக்கப்படுமா? என அனைத்தும்தான் படத்தின் கிளைமேக்ஸ்.
படத்தில் பாடல்களும் படு ஹிட், வித்யாசாகர் இசையில், போதை ஏறிப்போச்சு, புத்தி மாறிப்போச்சு, கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு எனக்கு, முத்தம் தர ஏத்த இடம், தண்ணி வெச்சு, தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடலாக இருந்தது. படத்தில் மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.
படம் வெளியான காலத்தில் நல்ல விமர்சனமும், வெற்றியும் கிடைத்தது. படம் வெளியாகி 30 ஆண்டுகளில் இந்த படம் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

டாபிக்ஸ்