25 வருடங்களைக் கடந்த பாலாவின் சேது! இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம்!
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பல தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ஓர் இயக்குநர் மற்றும் ஒரு நடிகருக்கு மாபெரும் அடையாளத்தைக் கொடுத்த படம் தான் சேது.
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பல தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ஓர் இயக்குநர் மற்றும் ஒரு நடிகருக்கு மாபெரும் அடையாளத்தைக் கொடுத்த படம் தான் சேது. தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநர்களின் ஒருவரான பாலா இயக்குனராக அறிமுகமான படம் இது தான். முரட்டு இளைஞர் ஒருவர் காதல் வயப்படும் போது முரட்டுத்தனமாக காதலை வெளிப்படுத்துகிறார். காதலி ஏற்க மறுத்து விடுகிறார். இந்த சமயத்தில் ஹீரோவின் உண்மையான குணம் தெரிந்த பின் காதலிக்க தொடங்குகிறார். ஆனால் நடுவே ஹீரோவை ஒரு கும்பல் தாக்கியதில் ஹீரோவிற்கு மனநலம் பாதிக்கப்படுகிறது. முரட்டு இளைஞராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவரகாவும் விக்ரம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இயக்குநர் பாலா
இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த ஒரு சிறந்த இயக்குநர் தான் பாலா. அவரிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து முதன் முதலாக சேது படத்தை இயக்கினார். கால் நூற்றாண்டாக திரைத்துறையில் இயங்கி வரும் பாலா இதுவரை ஒட்டுமொத்தமாக 10 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு பல பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் உண்மையாகவும், அப்பட்டமாகவும் எளிய மக்களின் வாழ்வியல், அவர்களது வறிய நிலை என வெளிச்சம் போட்டு காட்டியவர். இவரது படங்களின் வழியே பல எளிய மக்கள் படும் இன்னல்கள் வெளிப்படுகின்றன என்றால் மிகையில்லை. இவர் இயக்கிய பரதேசி திரைப்படத்தில் கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களின் வாழ்க்கை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் நடிகரும், இயக்குநருமான சசிகுமார். இவரும் திரைத்துறையில் பெரும் சாதனைகளை செய்து வருகிறார்.
சீயான் விக்ரமிற்கு அடையாளம்
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக அறிமுகமான விக்ரம், பின்னாளில் தொலைக்காட்சி தொடர்களில் நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையில் சேது படத்திற்கு முன் புதிய மன்னர்கள், உல்லாசம் உட்பட பல படங்களில் நடித்து இருந்தாலும் சேது படமே இவருக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக இவருக்கு இப்படத்தில் இருந்த சீயான் என்ற பெயரே அடைமொழியாகியும் போனது.
இதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்த படம் தான் பிதாமகன். இப்படத்திற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சேது படத்தில் தொடங்கி தற்போது வரை வித்தியாசமான கதைக்களம் என்றால் அதற்கு விக்ரம் தான் சரியான தேர்வு என்றுவரை இருந்து வருகிறது.
பாலாவிற்கு பாராட்டு விழா
இயக்குநர் பாலா இயக்கிய துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படம் சில காரணங்களால் வெளியிடப்படாமல் நின்று போனது. மேலும் இவரது இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார். இதனையடுத்து வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து முடித்தும் விட்டார். 2025 ஆம் ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாலா திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தை கொண்டாடும் வகையில் வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவுடன் பாலாவிற்கு பாராட்டு விழாவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்