17 Years Of Paruthiveeran: ‘கல்லும் மண்ணும் காதல் செய்யும்.. மனிதனுக்கு வராதா?’ பஞ்சு போன்ற பாறை மனிதன் பருத்தி வீரன்!
பருத்திவீரன் படத்தை இயக்கிய போது படத்தை சொன்ன தேதியில் இயக்குநர் அமீர் முடித்து கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன் வைத்தார்.
பருத்தி வீரன் நடிகர் கார்த்திக்கின் முதல் படம். வசூலில் சக்கை போடு போட்ட பருத்தி வீரன் திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டும் பிப்ரவரி 23ம் தேதி வெளியானது. இன்றோடு படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை திரும்பி பார்க்கலாம். ‘கல்லும் மண்ணும் காதல் செய்யும்.. மனிதனுக்கு வராதா?’ பஞ்சு போன்ற பாறை மனிதன் பருத்தி வீரன் குறித்து இங்கு பார்க்கலாம்.
நடிகர்கள்
இயக்குநர் அமீரின் 3 ஆவது படம் பருத்தி வீரன். படத்தில் நடிகர் சிவக்குமாரின் மகனான கார்த்திக்கை அறிமுக நடிகராக தேர்ந்தெடுத்தார் அமீர். நடிகை பிரியாமணி முத்தழகு கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். முத்தழகின் தாயாக சுஜாதாவும், தந்தையாக பொன்வண்ணனும் நடித்திருந்தனர்.
பருத்தி வீரனின் சித்தப்பாவாக நடிகர் சரவணன் செவ்வாழை காதப்பாத்திரத்தில் நடித்திருந்தார். டக்ளஸ் ஆக கஞ்சா கருப்பு, பொணந்திந்திண்ணியாக செவ்வாழை ராசு என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கதை
மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ள சாதிய பிரச்சனைகளை கடந்து திருமணம் செய்த தம்பதியின் மகன் குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கி வைப்பது குறித்து புனையப்பட்ட படம்தான் பருத்தி வீரன்.
இக்கதையின் முக்கிய பாத்திரம் பருத்தி வீரன். உயர் வகுப்பை சேர்ந்த தந்தைக்கும் அதே ஊரில் தாழ்த்தப்பட்ட பகுதியை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவன் தான் பருத்தி வீரன். இளம் வயதிலேயே பெற்றோர் இறந்து விட தனது சித்தப்பா செவ்வாழை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறான்.
படிப்பறிவு இல்லாமல், குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடுகிறான். இதனால் அடிக்கடி சிறை செல்வது வெளியில் வருவது விலை மாதுவுடன் செல்வது இருப்பான்.
அதே ஊரில் பெரிதும் மதிக்கப்படுபவராக இருப்பவர் கழுவன். அவர் பருத்தி வீரனின் அத்தையை திருமணம் செய்திருப்பார். கலப்பு திருமணம் செய்ததால் பருத்தி வீரனின் பெற்றோரையும் அவர்கள் மறைவிற்கு பின் அவனை வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையையும் வெறுப்பவர்.
இந்த கழுவனின் பெண் தான் நாயகி முத்தழகு. படத்தில் மிகவும் துணிச்சல் மிக்க பெண்ணாக காட்டப்படுவார். சிறுவயதில் இருந்தே பருத்தி வீரனை விரும்புவாள்.
ஒரு கட்டத்தில் பருத்தி வீரனிடம் தன் காதலை வெளிப்படுத்துவாள். வேணாம் வேணாம் என்று சொன்ன பருத்தி வீரனை தன்னை காதலிக்க வைப்பாள். இதை தெரிந்த கழுவன் அவர்களது காதலை எதிர்ப்பார். கடைசியில் பருத்தி வீரனும் முத்தழகும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக நகர்த்தியிருந்தார் இயக்குநர் அமீர். படம் முழுவதும் மதுரை தமிழில் நடிகர்கள் பேசி அசத்தி இருப்பர்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் மெனக்கெட்டு இருப்பார். ஆங்காங்கே கிராமத்து குசும்பையும் நகைச்சுவையாக காட்டி இருப்பார்.
இந்த படம் முழுவதும் கிராமத்து மனிதர்களின் பாசம், கோபம், சாதிய ஆதிக்கம், துரோகம் என அனைத்தையும் பேசி இருக்கும். படம் முழுவதும் மதுரை சுற்றுப்பகுதியிலேயே படமாக்கப்பட்டது. எல்லா நடிகர்களும் தங்களது சொந்த குரலிலேயே பேசி நடித்திருந்தனர்.
படத்தை மிகவும் எதார்த்தமாக காட்ட சூரிய ஒளியில் மட்டுமே படமாக்கப்பட்டது. இயக்குநர் அமீரின் கேரியரில் என்றும் முத்தாய்ப்பான படம் பருத்தி வீரன் என்றால் மிகையல்ல.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைஅமைத்திருந்தார். அறியாத வயது தெரியாத மனது , ஊரோரம் புளியமரம், ஐயயோ என் உசுருக்குள்ளே பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. 5 கோடியில் எடுக்கப்பட்ட படம் சுமார் 65 கோடி வசூலை தட்டிச் சென்றது.
சமீபத்தில் பருத்திவீரன் படத்தை இயக்கிய போது படத்தை சொன்ன தேதியில் இயக்குநர் அமீர் முடித்து கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு திரைத்துறையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து ஞான வேல் ராஜா மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்